புத்ரா ஜெயா – தற்போது சிறைத் தண்டனை அனுபவித்து வரும் முன்னாள் துணைப் பிரதமர் டத்தோஸ்ரீ அன்வார் இப்ராகிமைப் பிரதிநிதித்து, அவரது ஓரினப் புணர்ச்சி சம்பந்தப்பட்ட வழக்குகளில் இனி வழக்காட, அனைத்துலக அளவில் புகழ்பெற்ற அமெரிக்க பெண் வழக்கறிஞர் கிம்பர்லி மோட்லி நியமிக்கப்பட்டுள்ளார்.
ஆப்கானிஸ்தானைத் தளமாகக் கொண்டு செயல்படும் கிம்பர்லியை கடந்த வாரம் புதன்கிழமை அன்வார் தனது வழக்கறிஞராக நியமித்திருக்கின்றார். அன்வாருக்காக இலவசமாகவே வாதாடவிருப்பதாகவும் கிம்பர்லி அறிவித்துள்ளார்.
“அன்வார் ஓர் அரசியல் கைதியாவார். தான் கொண்ட கொள்கைகளுக்காக சிறையில் வாடுபவர். அவரை அனைத்துலக அளவில் பிரதிநிதிப்பதில் நான் பெருமையடைகின்றேன்” என்றும் கிம்பர்லி கூறியுள்ளார்.
இதற்கிடையில், சுங்கை பூலோவில் அன்வார் இப்ராகிமைச் சந்திக்க, உள்நாட்டு வழக்கறிஞர் ஒருவருடன் சென்ற கிம்பர்லிக்கு அனுமதி மறுக்கப்பட்டதைத் தொடர்ந்து, அவர் இன்று உள்துறை அமைச்சில் புகார் ஒன்றைச் சமர்ப்பித்தார்.
மனித உரிமைப் போராட்ட வழக்கறிஞரான கிம்பர்லி, அன்வாருக்கு எதிராக அநீதி இழைக்கப்பட்டுள்ளது என்று கூறியுள்ளதோடு, அவருக்கு எதிரான வழக்கு 21ஆம் நூற்றாண்டின் மிக மோசமான நீதித் துறை மீறல் என்றும் சாடியுள்ளார்.