இலண்டன் – மேற்கத்திய நாடுகளின் முக்கியத் தலைநகர்களில் ஒன்றான பிரிட்டன் தலைநகர் இலண்டனின் மாநகரசபைத் தலைவர் (மேயர்) தேர்தலில் முதல் முறையாக ஒரு முஸ்லீம் மக்களால் வாக்கெடுப்பின் மூலம் தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளார்.
சாதிக் கான் – தனது பிரச்சார பதாகையுடன்…
தொழிலாளர் கட்சியைச் சேர்ந்த சாதிக் கான் தேர்தலின் மூலம் இலண்டனின் மேயராகத் தேர்ந்தெடுக்கப்பட்டிருப்பதன் மூலம் புதிய வரலாறு தோற்றுவிக்கப்பட்டுள்ளது.
45 வயதான சாதிக் கான் தன்னை எதிர்த்து நின்ற கன்சர்வேடிவ் கட்சியின் வேட்பாளர் சேக் கோல்ட்ஸ்மித் என்ற கோடீஸ்வரரின் மகனைத் தோற்கடித்து இலண்டன் மேயர் பதவியைக் கைப்பற்றியிருக்கின்றார்.
12 சதவீத முஸ்லீம் மக்களைக் கொண்ட இலண்டனில் – பெருவாரியான வெள்ளைக்காரர்களையும், ஆசியர்களையும், குடியிருப்பு வாசிகளாகக் கொண்ட அந்த நகரில் – ஒரு முஸ்லீம் தேர்ந்தெடுக்கப்பட்டிருப்பது ஆச்சரியத்தை அளிப்பதோடு, அதே வேளையில் அங்கு கடைப்பிடிக்கப்படும் மத நல்லிணக்கத்திற்கு சான்றாகவும் அமைந்திருக்கின்றது.
இந்த தேர்தலில் சாதிக் கானுக்கு எதிராகப் போட்டியிட்ட கோல்ஸ்மித் ஒரு யூத இனத்தவர் என்பதால் இந்த தேர்தலில் யூத எதிர்ப்புக் கருத்துக்களும், முஸ்லீம் எதிர்ப்புக் கருத்துக்களும் வெகுவாகப் பயன்படுத்தப்பட்டன.
சாதிக் கான் பாகிஸ்தானியப் பெற்றோர்களுக்குப் பிறந்தவர், பாகிஸ்தானைப் பூர்வீகமாகக் கொண்டவர் என்பதும் குறிப்பிடத்தக்கது.