Home Featured உலகம் வைரமுத்து சொந்தப்பணத்தில் இலங்கை வந்தார் – இலங்கை அமைச்சர் விளக்கம்!

வைரமுத்து சொந்தப்பணத்தில் இலங்கை வந்தார் – இலங்கை அமைச்சர் விளக்கம்!

654
0
SHARE
Ad

ainkaranesanவடமாகாணம் – “கவிப்பேரரசு வைரமுத்துவை இலங்கை வருமாறு அழைப்பு விடுக்கப்பட்ட போது, அவர் தனது சொந்தப் பணத்தில் இலங்கை வந்தார்.

அவருக்காக வடமாகாண விவசாய அமைச்சால் செலவு செய்யப்பட்டது, 12 ஆயிரத்து 800 ரூபாய் மாத்திரம்” என வடமாகாண விவசாய அமைச்சர் பொன்னுத்துரை ஐங்கரநேசன் தெரிவித்தார்.

“கடந்த ஜனவரி மாதம் முல்லைத்தீவில் நடத்தப்பட்ட உழவர் விழாவில், அமைச்சால் செலவு செய்யப்பட்ட தொகை, விழாவுக்கு சிறப்பு விருந்தினராக வைரமுத்துவை, அழைத்தமைக்கான செலவு தொடர்பில் விவசாய அமைச்சர் தெளிவுபடுத்த வேண்டும்” என எதிர்க்கட்சித் தலைவர் சின்னத்துரை தவராசா கேள்வி கேட்டிருந்தார்.

#TamilSchoolmychoice

அந்தக் கேள்விக்கு இன்று வடமாகாண சபையின் மாதாந்த அமர்வில் அமைச்சர் பொன்னுத்துரை பதிலளித்தார். அமைச்சர் பொன்னுத்துரை கூறுகையில், “வைரமுத்து இலங்கை வருவதற்கான பிரயாணச் செலவு, தங்குமிடம் என அனைத்தையும் தனது சொந்தச் செலவில் செய்தார்.

வடமாகாண முதலமைச்சர் சி.வி.விக்னேஸ்வரனால், வைரமுத்துக்கு வழங்கப்பட்ட விருதுக்கான 12 ஆயிரத்து 500 ரூபாயும் அவருக்கு போட்ட மாலைக்கு 300 ரூபாயும் வடமாகாண விவசாய அமைச்சால் செலவு செய்யப்பட்டது” என்றார்.

“உழவர் திருவிழா நிகழ்வு ஏற்கனவே திட்டமிடப்பட்டு நடத்தப்பட்டது. அந்நிகழ்வை ஏற்பாடு செய்ய, அமைச்சின் 2016-ஆம் ஆண்டு நிதியிலிருந்து, 7 இலட்சத்து 16 ஆயிரத்து 555 ரூபாய் செலவு செய்யப்பட்டது.

மேலும், உழவர் திருநாளை முன்னிட்டு. மாணவர்களுக்கிடையில் நடத்தப்பட்ட போட்டிகளில் வெற்றியீட்டிய 106 மாணவர்களுக்கு பணப் பரிசில்கள், கேடயங்கள் வழங்குவதற்காக 1.67 மில்லியன் ரூபாய் (16 இலட்சத்து, 72 ஆயிரத்து 940) ரூபாய் செலவு செய்யப்பட்டது” என்றார்.