புத்ரா ஜெயா – ‘மலேசியாவைக் காப்பாற்றுவோம்” என்ற இயக்கம் முன்னாள் பிரதமர் துன் மகாதீர், முன்னாள் துணைப் பிரதமர் மொகிதின் யாசின் தலைமையில், “நஜிப் பதவி விலக வேண்டும்” என்ற கோரிக்கையுடன், நாடு முழுமையிலும் நடத்திய கையெழுத்து சேகரிப்பின் மூலம் இதுவரை பத்து இலட்சத்திற்கும் மேற்பட்ட மக்களின் ஆதரவைப் பெற்றுள்ளதாக மகாதீர் அறிவித்துள்ளார்.
இணையத் தளம் மூலம் 1,071,997 கையெழுத்துகளையும், நேரடியாக 200,000 கையெழுத்துகளையும் மலேசியக் குடிமக்கள் (பிரஜைகள்) பிரகடனம் என்ற ஆவணத்தின் (Citizen’s declaration) மூலம் தாங்கள் பெற்றதாக மகாதீர் மேலும் தெரிவித்துள்ளார்.
இது தவிர மேலும் 253,505 கையெழுத்துகளைப் பல்வேறு காரணங்களுக்காகத் தாங்கள் நிராகரித்துவிட்டதாகவும் மகாதீர் கூறியுள்ளார்.
(கோப்புப் படம்) – சில வாரங்களுக்கு முன்னால் தலைநகரின் ஜாலான் துவாங்கு அப்துல் ரஹ்மான் சாலையில், இரவுச் சந்தையில் மக்களைச் சந்தித்து கையெழுத்து வேட்டை நடத்திய மகாதீர்-அஸ்மின் அலி தலைமையிலான குழுவினர் பின்னர் அங்குள்ள கொலிசியம் கஃபே உணவகத்தில் ஓய்வெடுத்து, பானம் அருந்திய காட்சி
இரண்டே மாதங்களில் இத்தகைய மகத்தான ஆதரவைப் பெற்றுள்ளதைத் தொடர்ந்து, இனி மாமன்னரைச் சந்தித்து இந்த கையெழுத்துகளைத் தான் வழங்கப் போவதாகவும் மகாதீர் அறிவித்துள்ளார். இந்தக் கையெழுத்துகளை அப்படியே மாமன்னரிடம் வழங்குவது நடைமுறையில் சாத்தியமில்லை என்பதால், அதன் புகைப்படங்களை, மாமன்னரிடம் தான் வழங்கக் கூடும் என்று கூறிய மகாதீர், மன்னரும் ஆட்சியாளர்கள் மன்றமும் மக்களின் உணர்வுகளைப் புரிந்து கொண்டிருப்பார்கள் எனத் தான் கருதுவதாகவும் தெரிவித்துள்ளார்.
புத்ரா ஜெயாவில் நேற்று இந்தத் தகவல்களை வெளியிட்ட மகாதீர், நாட்டின் முக்கியப் பத்திரிக்கைகள் தெரிவித்திருப்பதற்கு மாறாக, கிராமப் புறங்களிலும், தோட்டப் புறங்களிலும் கூட தங்களின் கையெழுத்து இயக்கத்திற்கு பரவலான வரவேற்பு கிடைத்ததாக குறிப்பிட்டார்.
சில இடங்களில் இந்த கையெழுத்து வேட்டைக்கு எதிராக மிரட்டல்களும் விடுக்கப்பட்டதாகவும் மகாதீர் மேலும் தெரிவித்துள்ளார்.
இரண்டு முக்கிய இடைத் தேர்தல்கள் நடைபெறப் போகும் நிலையில் மகாதீரின் இந்த அறிவிப்பும், கையெழுத்து சேகரிப்பு இயக்கத்தின் வெற்றியும் நஜிப்பின் தலைமைத்துவத்திற்கு எதிரான ஒரு முக்கிய பிரச்சார ஆயுதமாக இந்த இடைத் தேர்தல்களில் பயன்படுத்தப்படும்.