சென்னை – இந்த முறை தமிழகத் தேர்தலில் முடிவுகளை நிர்ணயிக்கப் போகும், வாக்காளர்களின் மனங்களை ஈர்த்து, அவர்களை யாருக்கு வாக்களிக்கச் செய்வது என்ற முடிவை அவர்களுக்குள் விதைக்கப் போகும், சக்தி எது என்று பார்த்தோமானால், சந்தேகமில்லாமல் தமிழ் நாட்டு செய்தித் தொலைக்காட்சிகள்தான்!
இந்தியாவில் எந்த மாநிலத்துக்கும் இல்லாத ஒரு சாபக்கேடு தமிழகத்துக்கு உண்டு. ஒவ்வோர் அரசியல் கட்சிக்கும் ஒரு பிரத்தியேகத் தொலைக்காட்சி அலைவரிசை என்ற ரீதியில் தொலைக்காட்சி நிறுவனங்கள் தமிழகத்தில் இயங்கி வருகின்றன. இதனால் நடுநிலைமை என்பதை இம்மியளவும் கூட எந்தவொரு அலைவரிசையிலும் பார்க்க முடியாது.
ஜெயலலிதாவின் அதிமுகவுக்கு ஜெயா; திமுகவுக்கு கலைஞர், சன் டிவி; பாமகவிற்கு மக்கள் தொலைக்காட்சி; விஜய்காந்த்-மக்கள் நலக் கூட்டணிக்கு கேப்டன் டிவி – இப்படியாக ஒவ்வொரு கட்சிக்கும் ஓர் அலைவரிசை என இயங்கிக் கொண்டிருந்த கட்சிகளின் ஒரு தலைப்பட்சமான- பாரபட்சமான செய்திகளுக்கு ஆப்பு வைக்கும் விதத்தில் வந்து சேர்ந்திருக்கின்றன நடுநிலை செய்தித் தொலைக்காட்சிகள்.
நடுநிலை செய்தித் தொலைக்காட்சிகள்
இன்றைய நிலையில் குறிப்பாக 4 செய்தித் தொலைக்காட்சிகள் தமிழகத்தைத் தலைமையிடமாகக் கொண்டு சுறுசுறுப்பாகவும், சிறப்பான முறையிலும் நடுநிலையான முறையிலும் இயங்கி, தொலைக்காட்சி இரசிகர்களிடையே ஆதிக்கம் செலுத்தி வருகின்றன.
மற்ற தொலைக்காட்சிகள் பொழுது போக்கு அம்சங்களிலும், தொடர் நாடகங்களிலும் கவனம் செலுத்துகின்றன என்றால் இந்த செய்தித் தொலைக்காட்சிகளின் மைய உள்ளடக்கம் எப்போதும் அரசியல்தான்!
பிரபல தினத்தந்தி பத்திரிக்கை நிறுவனம் நடத்தும் தந்திடிவி, புதிய தலைமுறை தகவல் ஊடக நிறுவனத்தின் ‘புதிய தலைமுறை’ தொலைக்காட்சி, நியூஸ்7 தமிழ், போலிமர் செய்திகள், ஆகியவையே தற்போது முன்னணியில் இருக்கும் அந்த 4 தொலைக்காட்சி அலைவரிசைகள்.
இயன்றவரையில் இந்த 4 அலைவரிசைகளும் நடுநிலையைக் கடைப்பிடிக்கின்றன என்பதோடு, அனைத்துக் கட்சிகளுக்கும், அனைத்து அரசியல்வாதிகளுக்கும் சரிசமமான இடமும், உரிய மதிப்பும் அளித்து இவை செய்திகளை ஒளிபரப்பி வருகின்றன.
ஜெயலலிதா, கருணாநிதி போன்றவர்களுக்கு மட்டுமே இதுவரை கிடைத்து வந்த தொலைக்காட்சி ஊடக வெளிச்சம், இப்போது முதன் முறையாக வைகோ, சீமான், பாஜக தலைவர்கள் போன்றவர்களுக்கும் கிடைத்திருக்கின்றது.
கடந்த 2011 தமிழக சட்டமன்றத் தேர்தலில் இது போன்றதொரு வாய்ப்பும்-வெளிச்சமும் மற்ற சிறிய கட்சிகளுக்கும், தலைவர்களுக்கும் கிடைக்கவில்லை என்பது கவனிக்கத்தக்கது.
இதனால், இந்தச் செய்தித் தொலைக்காட்சிகளின் ஆதிக்கத்தால்-செய்திகளால் – மக்கள் மனங்களில் குறிப்பிடத்தக்க மாற்றங்கள் ஏற்படக் கூடிய வாய்ப்பிருப்பதாக அரசியல் பார்வையாளர்கள் கருதுகின்றனர்.
இதன் காரணமாக, இன்றைய தேர்தல் நிலவரத்தை அறிந்து கொள்ள அனைவரும் நாடுவது இந்தத் தொலைக்காட்சிகளைத்தான். இதன் காரணமாக இந்த தொலைக்காட்சி அலைவரிசைகளின் விளம்பர வருமானங்களும் பன்மடங்காக உயர்ந்துள்ளன. அனைத்து முன்னணி அரசியல் கட்சிகளில் விளம்பரங்களும் இந்தத் தொலைக்காட்சிகளில் இடம்பெறுகின்றன.
இவை தவிர, தமிழகத்தின் முன்னணி வணிக நிறுவனங்களும் இப்போது இந்த செய்தித் தொலைக்காட்சிகளில்தான் அதிகமாக விளம்பரம் செய்கின்றன.
விவாதங்கள், நேர்காணல்கள், மக்கள் அரங்கங்கள், கட்சித் தலைவர்களின் பிரச்சாரங்களின் நேரலை ஒளிபரப்பு, அரசியல் கணிப்புகள், இப்படி அனைத்து அம்சங்களிலும் ஒன்றுக்கு ஒன்று சவால் விடும் வகையில், களைகட்டும் விதமாக – இந்த தொலைக்காட்சிகள் செயல்படுவதால், பொதுமக்கள், குறிப்பாக வாக்காளர்களின் மனநிலையை மாற்றும் வல்லமை – அவர்களின் சிந்தனைப் போக்கை இயக்கும் சக்தி – இப்போது இந்த செய்தித் தொலைக்காட்சி ஊடகங்களுக்கு உள்ளன.
இதன் காரணமாக, பெருவாரியான நடுநிலை வாக்காளர்களும், ஒரு கோடிக்கும் மேற்பட்ட புதிய – இளைய தலைமுறை வாக்காளர்களும் இப்போது இந்த தொலைக்காட்சிகளோடு தினமும் ஐக்கியமாகி விடுகின்றனர்.
யாருக்கு வாக்களிப்பது என்பதை இந்தப் பிரிவு வாக்காளர்கள் இன்னும் முடிவு செய்யவில்லை என்பதால், இந்தக் கணிசமான பிரிவினரின் வாக்குகள் எந்தப் பக்கம் செல்லும் என்பதை பல்வேறு அம்சங்கள் நிர்ணயிக்கும் என்பதோடு,
அதில் முக்கியமாக நிர்ணயிக்கப் போவது இந்த செய்தித் தொலைக்காட்சி அலைவரிசைகள்தான் என்பதை மறுப்பதற்கில்லை.
முகநூல், குறுஞ்செயலி, இணையத் தளங்கள் ஆகியவை மூலமாகவும் இந்தத் தொலைக்காட்சி அலைவரிசைகள், தங்களின் செய்திகளை ஒளிபரப்பி வருவதால், தொலைக்காட்சி என்ற ஊடகம் தவிர்த்து, இணையத் தளம், செல்பேசிகள் போன்ற தளங்களிலும் இவை இரசிகர்களை குறிப்பாக இளைய தலைமுறையினரை சென்றடைகின்றன.
இதனால், இன்றைய நவீன தொழில்நுட்ப யுகத்தில் புதிய வரவான இந்த செய்தித் தொலைக்காட்சிகளின் வீச்சும், அவர்களின் தொலைத்தொடர்பு வசதிகளும், மிக விரிவாக இருக்கின்றது என்பதோடு,
தமிழகத்தின் மூலை முடுக்குகளுக்கெல்லாம் – தொலைக்காட்சி இல்லாத வீடுகளுக்கும், வாக்காளர்களுக்கும் கூட சென்றடைகின்றது என்பதும் கவனிக்கத்தக்க மற்றொரு அம்சமாகும்.
-இரா.முத்தரசன்
(செல்லியல் நிர்வாக ஆசிரியர்)