சென்னை – உலகப் புகழ்பெற்ற இசையமைப்பாளர் ஏ.ஆர்.ரஹ்மான் நேற்றிரவு தந்தி தொலைக்காட்சிக்கு வழங்கிய சிறப்பு நேர்காணலில், இளம் வயதில் தனது தந்தையை இழந்து வாழ்க்கையில் மிகவும் சிரமப்பட்ட தருணங்களில் தற்கொலை செய்து கொள்ளலாம் என்ற எண்ணங்கள் தனக்கும் ஏற்பட்டதாகக் கூறினார்.
புதுடில்லியில் இருந்து தந்தி தொலைக்காட்சியின் நிருபர் சலீமுக்கு வழங்கிய நேர்காணலில் இவ்வாறு கூறிய ரஹ்மான், இருப்பினும் தனது குடும்பம் தன்மீது செலுத்திய அன்பு, தாயாரின் பாசம், சகோதரிகளின் அரவணைப்பு ஆகியவற்றின் காரணமாக தற்கொலை எண்ணத்தைத் தன்னால் கைவிட முடிந்தது என்றும் ரஹ்மான் தெரிவித்தார்.
இயேசு மீண்டும் பிறந்தால் சந்திக்க விருப்பம்
இந்த உலகத்தில் வாழ்க்கையில் யாரைச் சந்திக்க விரும்புகிறீர்கள் எனக் கேட்கப்பட்ட கேள்விக்கு பதிலளித்த ரஹ்மான் “இயேசுநாதர் மீண்டும் இந்த பூமியில் அவதரிப்பார் என்று ஆரூடம் கூறப்படுகிறது. அவ்வாறு இயேசுநாதர் அவதரித்தால் அவரைச் சந்திக்க விரும்புகிறேன்” என்று கூறினார்.
மக்கள் எவ்வாறு உங்களை ஞாபகத்தில் வைத்துக் கொள்ள விரும்புகிறீர்கள் எனக் கேட்கப்பட்டபோது, “அப்படி எந்த எண்ணமும் எனக்கில்லை. இருக்கும் வரையில் எவ்வளவு கொடுக்க முடியுமோ, எவ்வளவு இசையை வழங்க முடியுமோ அதுவரை வழங்க வேண்டும்” என்றும் ரஹ்மான் அந்த நேர்காணலில் கூறினார்.
முழுமையான அந்த நேர்காணலைக் கீழ்க்காணும் இணைப்பில் காணலாம்:-