கோலாலம்பூர் – அரசியல்வாதிகளின் அதிகார துஷ்பிரயோகங்களைக் கண்டு கொதித்தெழும் ஒரு சராசரி மனிதன் என்ன செய்கிறான் என்பதைப் பல படங்களில் பார்த்திருக்கிறோம். அதே உச்சக்கட்ட கோபம், சமூகத்தில் பொறுப்புள்ள பணியில் இருக்கும் ஒரு பத்திரிக்கையாளனுக்கு ஏற்பட்டால் என்ன நடக்கும்? அது தான் கோ 2.
ஜிகர்தண்டாவிற்குப் பிறகான படங்களில் பாபி சிம்ஹாவிற்கு சூப்பர் ஸ்டார் பாணியிலான உடல்மொழியை வெளிப்படுத்த வாய்ப்பு கிடைக்காமல் இருந்தது. அது இப்படத்தின் மூலம் நிறைவேறியிருக்கிறது என்று சொல்லலாம். பாபிசிம்ஹா ஒரு காட்சியில், “கமிஷ்னர் சார்” என்று கத்துவார். அப்படியே சூப்பர் ஸ்டாரின் சாயலைக் காண முடிகின்றது. மற்றபடி மிகைப்படுத்தாமல் அவரது கதாப்பாத்திரத்தை எளிமையாக அமைத்து ரசிக்க வைத்திருக்கிறார் இயக்குநர் சரத்.
என்றாலும், “தேடிச் சோறு நிதம் தின்று” என்ற பாரதியின் வரிகளை உலகநாயகன் பத்மஸ்ரீ கமல்ஹாசன் சொல்லக் கேட்டுவிட்ட நமக்கு, பாபி சிம்ஹா, சொல்லும் போது, ஏனோ நரம்புகள் புடைக்கவில்லை.
கதாநாயகி நிக்கி கல்ராணிக்கு படத்தில் வேலை குறைவு தான். ஆனால் வரும் காட்சிகளில் வசீகரிக்கிறார்.
பாலசரவணனின் கலகலப்பான நடிப்பும், அப்பாவி முகமும் மந்திரி மகன் கதாப்பாத்திரத்திற்கு சிறப்பாகப் பொருந்துகிறது.
பிரகாஷ்ராஜ், நாசர், இளவரசுவின் இருப்பு படத்திற்கு பக்கபலம் சேர்த்துள்ளது. வழக்கமாக நகைச்சுவைக் காட்சிகளிலேயே பார்த்துப் பழகிவிட்ட கருணாகரனை வித்தியாசமாக நடிக்க வைத்திருக்கிறார் இயக்குநர். இரண்டே காட்சிகளில் வந்தாலும் மனதைத் தொட்டுவிடுகிறார் கருணாகரன். அவ்வளவு அற்புதமான நடிப்பு.
திரைக்கதை அமைப்பைப் பொறுத்தவரையில் நம்மை இருக்கையின் விளிம்பிற்குக் கொண்டு வரத் தவறிவிட்டது. முதல் காட்சியிலேயே முதலமைச்சரைக் கடத்துவது போல் பரபரப்பை ஏற்படுத்திவிட்டு, போலீஸ் விசாரணையில் பாலசரவணன் பொறுமையாகக் கதை சொல்லும் காட்சிகளில் அப்படியே அந்த பரபரப்பை தளர்த்திவிட்டார் இயக்குநர்.
ஆனால், கடத்தப்பட்டிருக்கும் முதலமைச்சரிடம் ஒரு சாமான்யன் கேட்கும் கோரிக்கைகளும், அதன் பின்னால் சொல்லப்படும் நியாயங்களும் தேர்தல் நேரத்தில் சரியான கேள்வி.
“நாட்டைப் பத்தி கொற சொல்றத விட்டுட்டு போய் பொழப்பப் பாருங்க.. நாட்ட நாங்க பார்த்துக்குறோம்”
“ஏன் சார்.. இந்த ஒரு கிளாஸ் தண்ணிக்காக நான் ஏன் உங்களை கொலை பண்ணக்கூடாது?”
“காந்தி படத்தை எடுத்துட்டு வேற ரூபாய் நோட்டு குடுங்க”
போன்ற வசனங்கள் படத்தின் சுவாரஸ்யத்தைக் கூட்டுவதில் முக்கியப் பங்காற்றியிருக்கிறது.
பிலிப் ஆர்.சுந்தர், வெங்கட் ஆர். ஆகிய இருவரும் மிக அழகாக ஒளிப்பதிவு செய்திருக்கிறார்கள்.
படத்தில் இன்னொரு ஹீரோ இசை தான்.. லியோன் ஜேம்சின் இசையில், நா.முத்துக்குமார், கார்க்கி வைரமுத்து வரிகளில் பாடல்கள் அனைத்தும் சூப்பர் இரகம். படத்தின் துவக்கப் பாடலே மனதை எங்கோ அழைத்துச் செல்கிறது.
மக்களுக்குத் தேவையான கதை, நல்ல ஒளிப்பதிவு, நல்ல இசை இவ்வளவு இருந்தும், திரைக்கதையில் ஆங்காங்கே வரும் தொய்வால் முழுமையாக ரசிக்க முடியவில்லை.
மற்றபடி, தற்போதைய தேர்தல் பரபரப்பில் பார்த்து ரசிக்க சுவாரஸ்யமான படம்!
-ஃபீனிக்ஸ்தாசன்