சென்னை – கச்சத்தீவில் இலங்கை அரசு புதிய கிறிஸ்தவ தேவாலயம் அமைக்கும் திட்டத்தை மத்திய அரசு தடுத்து நிறுத்த வேண்டும் என ஜெயலலிதா-கருணாநிதி-வைகோ வலியுறுத்தியுள்ளனர்.
இது குறித்து ஜெயலலிதா; கச்சத்தீவில் உள்ள புனித அந்தோனியார் தேவாலயத்தை இலங்கை அரசு தன்னிச்சையாக இடிக்க முடிவு செய்திருப்பதற்கு கடும் கண்டனம் தெரிவித்துள்ளார். இந்தப் பிரச்சினை குறித்து பிரதமர் நரேந்திர மோடிக்கு, ஜெயலலிதா கடிதம் எழுதியுள்ளார்.
அந்தக் கடிதத்தில்: கச்சத்தீவில் அமைந்துள்ள புராதனமான புனித அந்தோனியார் ஆலயத்தை இடித்துவிட்டு, புதிதாகக் கட்ட இலங்கை அரசு திட்டமிட்டு வருவதாக ஊடகங்களில் செய்திகள் வெளியாகியுள்ளன. இது குறித்து, தங்களின் தனிப்பட்ட கவனத்துக்குக் கொண்டுவர இந்தக் கடிதத்தை எழுதுகிறேன் என தெரிவித்துள்ளார்.
இது குறித்து கருணாநிதி; கச்சத்தீவில் உள்ள அந்தோணியர் கோயில் புதிய கட்டுமானத்தைக் கைவிட்டு, பழைய தேவாலயத்தையே விரிவுபடுத்த வேண்டும் என்று வலியுறுத்தியுள்ளார்.
இது தொடர்பாக அவர் இன்று விடுத்துள்ள அறிக்கையில், மத நல்லிணக்கத்திற்கு அடையாளமாக கச்சத்தீவில் உள்ள அந்தோணியர் கோயில் திகழ்ந்து வருவதாக கூறியுள்ளார். பழமையும், பெருமையும் வாய்ந்த இந்தக் கோவில் இருக்கும்போது இன்னொரு கோவில் புதிதாகக் கட்டவேண்டிய அவசியம் ஏன் என கருணாநிதி கேள்வி எழுப்பி உள்ளார்.
புதிய கோவில் கட்டுமானம் குறித்து தமிழக மீனவர்களிடமும், குறிப்பாக தென் மாவட்டங்களில் உள்ள மீனவர்களிடமும், இந்திய அரசிடமும் கலந்தாலோசிக்காமல் முடிவு செய்யப்பட்டுள்ளதாக குற்றம் சாட்டியுள்ள கருணாநிதி, இலங்கை அரசின் நடவடிக்கை ஏற்கெனவே பிரச்சினையிலும், சட்டச் சிக்கலிலும் உள்ள இந்த கச்சத்தீவு விவகாரத்தில் மேலும் சிக்கலை உருவாக்கிவிடுமோ என்கிற ஐயப்பாடு எழுவதாகவும் கருணாநிதி அச்சம் தெரிவித்துள்ளார்.
இதேப்பிரச்சினை குறித்து கருத்து தெரிவித்துள்ள மதிமுக பொதுச் செயலாளர் வைகோ, இலங்கை அரசு கச்சத் தீவில் கிறிஸ்தவ தேவாலயம் அமைப்பதின் நோக்கம், தமிழக மீனவர்கள் கச்சத்தீவிற்கு செல்வதை தடுக்கவே என கூறியுள்ளார்.
தமிழக மீனவர்கள் கச்சத் தீவுக்கு சென்று வரும் உரிமையை இலங்கை அரசு திட்டமிட்டுப் பறிப்பதை மத்திய அரசு வேடிக்கை பார்க்கக் கூடாது என்று வலியுறுத்தியுள்ள வைகோ, இலங்கை அரசு, கச்சத் தீவில் தேவாலயம் அமைக்கும் திட்டத்தை இந்திய அரசு தடுத்து நிறுத்துவதுடன், 1974 ஆம் ஆண்டு அந்நாட்டுடன் செய்துகொண்ட கச்சத் தீவு ஒப்பந்தத்தை ரத்துச் செய்ய வேண்டும் என கேட்டுக்கொண்டுள்ளார்.