Home Featured நாடு விரைவில் நஜிப்பின் அமைச்சரவை மாற்றம்! மஇகாவுக்கு இரண்டாவது அமைச்சர் பதவி கிடைக்குமா?

விரைவில் நஜிப்பின் அமைச்சரவை மாற்றம்! மஇகாவுக்கு இரண்டாவது அமைச்சர் பதவி கிடைக்குமா?

927
0
SHARE
Ad

najib1கோலாலம்பூர் – சரவாக் சட்டமன்றத் தேர்தல்களைத் தொடர்ந்து ஏற்பட்டுள்ள மாற்றங்கள், நடைபெறவிருக்கும் நாடாளுமன்ற இடைத் தேர்தல்கள் ஆகியவற்றின் காரணமாக, விரைவில் அமைச்சரவை மாற்றம் ஏற்படும் என பிரதமர் நஜிப் துன் ரசாக் நேற்றிரவு தனது இணைய அகப் பக்கத்தில் தெரிவித்துள்ளார்.

தோட்டத் தொழில், மூலப்பொருள் அமைச்சரான டக்ளஸ் உங்க்கா எம்பாஸ் புதிய சரவாக் மாநில அமைச்சரவையில் துணை முதலமைச்சராக நியமிக்கப்பட்டுள்ளதைத் தொடர்ந்து தனது அமைச்சர் பதவியை ராஜினாமா செய்துள்ளார்.

இந்த அமைச்சுப் பொறுப்பில் டக்ளஸ் உங்க்காவுக்கு முன்பாக, முன்னாள் மஇகா தேசியத் தலைவர் டத்தோஸ்ரீ ஜி.பழனிவேல் இருந்து வந்தார்.

#TamilSchoolmychoice

கடந்த மே 7ஆம் தேதி நடைபெற்ற சரவாக் மாநிலத் தேர்தல்களில் டக்ளஸ் உங்க்கா புக்கிட் சபான் சட்டமன்றத் தொகுதியில் போட்டியிட்டு வெற்றி பெற்றார். இதனைத் தொடர்ந்து அவரை மாநில துணை முதலமைச்சராக சரவாக் முதல்வர் அட்னான் சாத்திம் நியமித்தார்.

சரவாக் ஹெலிகாப்டர் விபத்தில் மரணமடைந்த சுங்கை பெசார் நாடாளுமன்ற உறுப்பினர் நோரியா காஸ்னோன், தோட்டத் தொழில், மூலப் பொருள் அமைச்சில் துணையமைச்சராக செயல்பட்டு வந்தவராவார்.

இதனைத் தொடர்ந்து காலியாகியுள்ள அமைச்சரவைப் பொறுப்புகளுக்குப் புதியவர்களை நஜிப் நியமிப்பார் என எதிர்பார்க்கப்படுகின்றது. ஆனால், அந்த அமைச்சரவை மாற்றங்கள், ஜூன் 18ஆம் தேதி நடைபெறும் நாடாளுமன்ற இடைத் தேர்தல்களுக்குப் பின்னர் அறிவிக்கப்படுமா அல்லது அதற்கு முன்பாகவே அறிவிக்கப்படுமா என்பது இன்னும் தெரியவில்லை.

தேவமணிக்கு மஇகாவின் இரண்டாவது அமைச்சர் பொறுப்பு கிடைக்குமா?

Datuk-SK-Devamany-1தற்போது மஇகா தேசியத் துணைத் தலைவராக இருக்கும் டத்தோஸ்ரீ எஸ்.கே.தேவமணி பேராக் மாநில அவைத் தலைவர் பதவியை வகித்து வருகின்றார். இவருக்கு மஇகாவுக்கு ஒதுக்கப்படும் நாடாளுமன்ற மேலவைத் தலைவர் பதவி கிடைக்கலாம் என்ற ஆரூடங்கள் நிலவி வந்த வேளையில், அந்தப் பதவி செனட்டர் எஸ்.ஏ.விக்னேஸ்வரனுக்கு வழங்கப்பட்டது.

இந்நிலையில், தனது பேராக் மாநில சட்டமன்ற அவைத் தலைவர் பதவியை தேவமணி ராஜினாமா செய்துவிட்டார் என்றும், அவருக்குப் பதிலாக புதிய அவைத் தலைவர் அடுத்த பேராக் மாநில சட்டமன்றக் கூட்டத் தொடரின் போது நியமிக்கப்படுவார் என்றும் மஇகா வட்டாரங்களில் ஆரூடங்கள் நிலவுகின்றன.

எனவே, முன்னாள் தேசியத் தலைவர் பழனிவேலுவின் நீக்கத்திற்குப் பின்னர் மஇகாவுக்கென வழங்கப்பட்டிருந்த இரண்டாவது முழுஅமைச்சர் பதவி இதுவரை காலியாகவே இருப்பதால், தேவமணி செனட்டராக நியமிக்கப்பட்டு, அமைச்சராக நியமிக்கப்படலாம் என்ற எதிர்பார்ப்பு தற்போது ஏற்பட்டுள்ளது.

தேவமணிக்கு இரண்டாவது அமைச்சர் பதவி வழங்கப்படுவதன் மூலம், மஇகாவுக்கு இரண்டு அமைச்சர்கள் வேண்டும் என்ற இந்திய சமுதாயத்தின் நீண்ட நாளைய கோரிக்கை மீண்டும் ஒருமுறை பூர்த்தி செய்யப்படும்.

அத்துடன், மஇகாவின் தேசியத் தலைவர், துணைத் தலைவர் இருவருமே அமைச்சரவைப் பொறுப்புகளை வகிக்கும் சூழ்நிலை உருவாகும் என்பதால், அதன் மூலம் இந்திய சமுதாயத்திற்கு கட்சி மூலமாக வழங்கப்படக்கூடிய சேவைகளும், கிடைக்கக்கூடிய வாய்ப்புகளும் மேலும் அதிகரிக்கும்.

-இரா.முத்தரசன்