மார்ச் 17 – கேரள மாநிலத்தவர்களின் மொழிப்பற்று அனைவரும் அறிந்ததுதான். எந்த மதமானாலும், இனமானாலும், மலையாள மொழி என்று வரும்போது அனைத்து கேரள மக்களும் ஒன்றிணைந்து செயல்படுவார்கள்.
கேரளாவில் தற்போது ஆங்கில மொழி போதனை பள்ளிகள் அதிகரித்து வருகின்றன. அந்த பள்ளிகளில் தங்கள் பிள்ளைகளை சேர்க்க, பெற்றோர்கள் அதிக ஆர்வம் காட்டி வருகின்றனர். ஆங்கில மொழி வழி கல்வி பயிலும் இளைஞர்கள் எளிதாக அரசு பணிகளில் சேர்ந்து விடுகின்றனர். ஆனால் மலையாள மொழி பரிவர்த்தனையில் அவர்கள் பலவீனமாக இருப்பதும் தெரியவந்துள்ளது.
இதனால் தற்போது கேரள அரசாங்கத்தின் சார்பில் பொது தேர்வாணைய குழு வினால் இது தொடர்பான முக்கிய முடிவு அறிவிக்கப்பட்டுள்ளது. அதன்படி அரசு பணி தேர்வில் கலந்து கொள்ள விரும்புவோர் கண்டிப்பாக மலையாள வழி கல்வியை கற்றிருக்க வேண்டும் என்ற கேரள அரசின் முடிவுக்கு பொது தேர்வாணையக்குழு அனுமதி வழங்கி உள்ளது.
இந்த அறிவிப்பை மலையாள அறிஞர்கள் பெரிதும் வரவேற்றுள்ளனர். கேரள சாகித்ய அகாடமியின் துணைத்தலைவர் அக்பர் காக்கத்தில் கூறுகையில், இது அரசின் தாமதமான நடவடிக்கை என்றாலும் மிகவும் வரவேற்கத்தக்கது என்றும் இந்த முடிவு மாணவர்களை மலையாளம் கற்க ஆர்வப்படுத்தும் என்றும் குறிப்பிட்டார்.
கேரள அரசு உருவாகி 55 ஆண்டுகள் முடிந்தாலும் இன்னமும் அரசு கோப்புகள் அறிவிப்புகள் அனைத்தும் ஆங்கிலத்திலேயே பரிமாறப்படுவது வேதனை அளிக்கிறது என்றும் காக்கத்தில் குறிப்பிட்டார்.
கேரளாவில் இவ்வாறு அதிரடியாக சட்டம் இயற்றியிருப்பதால், தமிழக அரசும் இந்த போக்கைக் கடைப்பிடிக்குமா என்ற ஆர்வமும் எழுந்துள்ளது.
தமிழகத்தில் அரசு வேலைகளில் 20 விழுக்காடு தமிழ்வழிக் கல்வி பயின்ற மாணவர்களுக்கு தான் என்று ஒரு ஆணையை சென்ற திமுக ஆட்சியின் போது தமிழக அரசு கொண்டு வந்தது.
அதையும் சில தமிழின விரோதிகள் நீதிமன்றத்தில் வழக்கு தொடுத்து அந்த ஆணையை நடைமுறை படுத்த முடியாமல் செய்தனர் . இதனால் தமிழ்வழி படிக்கும் மாணவர்கள் இப்போது குறைந்து கொண்டே வருகிறார்கள்.
தமிழ் படித்தால் தான் வேலை வாய்ப்பு என்ற சட்டம் தான் மொழியை அழியாமல் பாதுகாக்கும் என மொழி அறிஞர்கள் கருதுகின்றனர்.
கேரளாவில் மலையாள வழிக் கல்விக்கு தற்போது முக்கியத்துவம் கொடுப்பது போல் தமிழகத்தில் தமிழ்வழிக் கல்வியை கட்டாயமாக்க , அரசு பணிகளில் சேர தமிழ்வழிக் கல்வி கட்டாயம் என்ற நிலையை உருவாக்க தமிழக அரசு முயலவேண்டும் என்பதே தமிழ் ஆர்வலர்களின் கோரிக்கையாக உள்ளது .