Home Featured நாடு “ஹுடுட்” சட்டத்தை எல்லா வகையிலும் தடுப்போம் – மீறி அமல்படுத்தப்பட்டால் அமைச்சர் பதவியைத் துறப்பேன்!” –...

“ஹுடுட்” சட்டத்தை எல்லா வகையிலும் தடுப்போம் – மீறி அமல்படுத்தப்பட்டால் அமைச்சர் பதவியைத் துறப்பேன்!” –  மஇகா சிறப்பு பொதுத் பேரவையில் டாக்டர் சுப்ரா அறிவிப்பு!

536
0
SHARE
Ad

சுபாங் ஜெயா – இன்று இங்கு நடைபெற்ற மஇகா சிறப்பு பொதுப் பேரவையில் உரையாற்றிய மஇகா தேசியத் தலைவரும், சுகாதார அமைச்சருமான டத்தோஸ்ரீ டாக்டர் ச.சுப்ரமணியம் ஹூடுட் சட்டம் தொடர்பான ஆகக் கடைசியான நிலவரங்களை கலந்து கொண்ட பேராளர்களிடத்தில் விரிவாக விளக்கியதோடு,

“இந்த ஹூடுட் சட்டத்தைத் தடுத்து நிறுத்த எல்லா வகையிலும் போராடுவோம், அப்படியும் எங்களின் முயற்சிகளையும் மீறி, ஹூடுட் சட்டம் அமுல்படுத்தப்பட்டால், நான் எனது அமைச்சர் பதவியை ராஜினாமா செய்துவிட்டு அமைச்சரவையிலிருந்து வெளியேறுவேன்” என சுப்ரா பேராளர்களின் பலத்த கரவொலிகளுக்கிடையில் அறிவித்தார்.

Subramaniam Drசிறப்பு பேராளர் மாநாடு நிறைவடைந்ததும் உடனடியாக வெளியிடப்பட்ட தனது பத்திரிக்கை அறிக்கையில் “சமீபத்தில் விஸ்வரூபம் எடுத்து வரும் ஹூடுட் பிரச்சனை குறித்து நாங்கள் இன்று ம.இ.காவின் சிறப்புப் பேராளர் மாநாட்டில் பேசியுள்ளோம். ஹூடுட் சட்ட அமலாக்கம் மலேசியாவில் இருக்கக்கூடிய சூழ்நிலைக்கு ஏற்புடையது அல்ல என்பதே ம.இ.காவின் நிலைப்பாடு. ஹூடுட் சட்ட அமலாக்கம் நிறைவேறினால் பல நிலைகளில் இந்நாட்டில் இருக்கக்கூடிய ஒற்றுமையையும், சட்ட நிலையையும் மாற்றக்கூடிய வாய்ப்பு உள்ளது” என்றும் சுப்ரா கூறியுள்ளார்.

#TamilSchoolmychoice

“மலேசிய நாடு சுதந்திரத்திற்குப் பின்னர் உருவாக்கப்பட்டபோது, அதற்கு அடிப்படையாக இருந்தது நாட்டின் அரசியல் சாசன சட்ட அமைப்புகள்தான். ஆகையினால், இப்பொழுது இந்தச் சட்ட அமைப்புகளுக்கு மதிப்புக் கொடுக்காமல், அதற்கு புறம்பாக இருக்கக்கூடிய சாத்தியம் இந்த ஹூடுட் சட்ட அமலாக்கத்தினால் ஏற்படும் என்றால் அதனை எதிர்ப்போம். அரசியல் சாசன சட்ட அடிப்படையில் இந்த நாடு எப்படி உருவாக்கப்பட்டதோ அந்த அடிப்படைகளை மாற்றாமல் அதன் நிலைப்பாட்டினை உறுதி செய்தால்தான் பல இன மக்கள் வாழக்கூடிய இந்நாட்டில் ஒற்றுமையையும் நிலைத்தன்மையும் வலுப்பெறச் செய்ய முடியும் எனபதே ம.இ.காவின் கருத்தாகும்” என்றும் சுப்ரா மேலும் கூறினார்.

Najib-feature-“அந்தக் கருத்துகளின் அடிப்படையில் பிரதமர் அவர்களும் இந்த மாற்றமானது ஹூடுட் சட்டமல்ல என்று கூறியிருப்பது ஒரு வகையில் மகிழ்ச்சியைக் கொடுத்தாலும், அதற்குரிய தெளிவுகளைப் பிரதமர் அவர்கள் கொடுக்க வேண்டும் என்று கோருகிறேன். ஏனென்றால், நாங்கள் செய்திருக்கக்கூடிய ஆய்வின் அடிப்படையில் இந்த மாற்றங்கள் ஹூடுட் அமலாக்கத்திற்குத்தான் கொண்டு செல்லும் என்ற சாத்தியம் உள்ளது. மாற்றுக் கருத்தின் காரணமாக பிரதமருடனான தொடர் விளக்கம் அவசியமாகின்றது. எனவே இதற்குரிய கலந்துரையாடலை நிச்சயமாக நாங்கள் தொடர்ந்து நடத்துவோம்” என்றும் சுப்ரா தனது அறிக்கையில் வலியுறுத்தியுள்ளார்.

“உலகளாவிய மேடையில் மலேசிய நாட்டிற்கென்று தனித் தோற்றம் இருக்கின்றது. அந்தத் தோற்றத்திற்கு மாசு வந்து விடக்கூடாது. மாற்றம் வந்தால் அது நம் நாட்டை எல்லா நிலையிலும் பாதிப்படையச் செய்யும். நாட்டின் முதலீடு உட்பட பல அம்சங்கள் பாதிப்படையக்கூடும். இவற்றையெல்லாம் மனத்தில் வைத்துக் கொண்டுதான் ஹூடுட் சட்டத்தைத் தடுக்க வேண்டுமென்று நாங்கள் வலியுறுத்துகின்றோம்” என்றார் சுப்ரா.

“அதே நேரத்தில், நாங்கள் வலியுறுத்திய கோரிக்கைகளும், விளக்கங்களும்  நிராகரிக்கப்பட்டு ஹூடுட் சட்டம் இந்நாட்டில் அமலாக்கத்திற்கு வந்தால், அதற்குப் பின்னர் தொடர்ந்து இந்திய சமுதாயத்தைப் பிரதிநிதித்து அமைச்சராக இருப்பதில் எந்தவொரு அர்த்தமும் இல்லை. எனவே, அதன் அடிப்படையில் நாட்டில் ஹூடுட் சட்டம் அமல்படுத்தப்பட்டால் நான் அமைச்சரவையிலிருந்து எனது அமைச்சர் பதவியைத் துறப்பேன் என்று இன்று காலை, சிறப்பு பேராளர் மாநாட்டுக்கு முன்னர் நடைபெற்ற ம.இ.கா மத்திய செயலவைக்கூட்டத்தில் எனது முடிவினை எடுத்துக் கூறியுள்ளேன்” என்றும் சுப்ரா கூறியிருக்கிறார்.

அதன் அடிப்படையில் திறந்த மனதோடு இது குறித்துப் பிரதமர் அவர்களிடம் தொடர்ந்து கலந்துரையாடல் நடத்தப்படும் என்று தெளிவுபடுத்தியிருக்கும் சுப்ரா, இதற்கு பிரதமர் நல்லதொரு தீர்வினைக் காண வேண்டும் என்று கேட்டுக் கொள்வதாகவும் கூறியுள்ளார்.