புத்ரா ஜெயா – பிரதமர் துறை அமைச்சரும், பிரதமர் துறையின் பொருளாதாரத் திட்டமிடல் பிரிவுக்கான பொறுப்புத் துறை அமைச்சருமான டத்தோஸ்ரீ அப்துல் வாஹிட் ஓமாரின் (படம்) நாடாளுமன்ற மேலவை உறுப்பினர் (செனட்டர்) பதவிக் காலம் எதிர்வரும் ஜூன் 4ஆம் தேதியோடு முடிவடைவதால், அவர் தனது அமைச்சர் பொறுப்பிலிருந்து விலகுகின்றார்.
2013ஆம் ஆண்டு செனட்டராக நியமிக்கப்பட்ட வாஹிட், தான் ஒரு தவணைக்கு மட்டுமே அமைச்சராகப் பணியாற்ற ஒப்புக் கொண்டதாகவும், அதன் காரணமாகவே அவர் பதவி விலகுவதாகவும் பிரதமர் துறை அலுவலகம் வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவித்துள்ளது.
இருப்பினும், வாஹிட் ஓமார் பிரதமர் தலைமையேற்றிருக்கும் பொருளாதார மன்றத்தின் உறுப்பினராகத் தொடர்ந்து நீடிப்பார். ஒவ்வொரு வாரமும் இந்த பொருளாதார மன்றக் கூட்டம் நடைபெறும்.
வாஹிட்டின் சேவைகளுக்கு பிரதமர் நஜிப் அரசாங்கத்தின் சார்பிலான நன்றியைத் தெரிவித்துக் கொண்டுள்ளார்.
2013ஆம் ஆண்டு பொதுத் தேர்தல் முடிவடைந்ததும், அரசாங்கத்தின் பொருளாதார நடவடிக்கைகளை வலுவாக்கும் நோக்கத்துடன், தனியார் துறையிலிருந்து அரசாங்க அமைச்சராகப் பணியாற்ற நியமிக்கப்பட்டவர்களில் வாஹிட்டும் ஒருவராவார். அமைச்சராவதற்கு முன்னர் அவர் மலாயன் வங்கியின் தலைமை நிர்வாக அதிகாரியாகப் பணியாற்றி வந்தார்.
வாஹிட், தனியார் துறையில் தனது பணிகளைத் தொடர்வார் என எதிர்பார்க்கப்படுகின்றது. எனினும், அவரது அடுத்த கட்டப் பணிகள் குறித்து அதிகாரபூர்வ அறிவிப்புகள் எதுவும் வெளியிடப்படவில்லை.