பாங்காக்: அண்மைய சில மாதங்களாக கொளுத்தி வரும் அளவுக்கதிகமான வெயில் காரணமாக பாம்புகள் நிழலான, உஷ்ணம் இல்லாத பகுதிகளை நோக்கி படையெடுக்கின்றன, என்றும் குறிப்பாக, ஒதுக்குப்புறமான கழிவறைகளில் வந்து சுருண்டு படுத்துக் கொள்கின்றன எனவும் செய்திகள் ஆங்காங்கே வெளிவந்து கொண்டிருக்கின்றன.
இந்நிலையில், ஓர் அசாதாரணமான, வித்தியாசமான ‘பாம்பு’ சம்பவம் ஒன்று கடந்த புதன்கிழமை தாய்லாந்து நாட்டின் தலைநகர் பாங்காக்கின் கிழக்கில் உள்ள சாச்செங்சாவ் என்ற பகுதியில் நடந்துள்ளது.
சிறுநீர் கழிக்க சாதாரணமாக தனது கழிவறைக்குச் சென்ற, 38 வயதான, அத்தாபோர்ன் பூன்மாக்சுவாய் என்பவருக்கு தனது வாழ்நாளில் மறக்க முடியாத, வலியும் வேதனையும் கூடிய அந்த சம்பவம் நடந்தது.
“குறி” பார்த்துக் கடித்த பாம்பு
கழிவறைக்குச் சென்றவர் எல்லோரையும் போல வழக்கமாக கழிவறைத் தொட்டியில் அமர்ந்திருக்கின்றார். ஆனால் கழிவறைக் குழிக்குள் உள்ளே ஒளிந்து கொண்டு மறைவாக இருந்ததோ, பத்து அடி நீளமுள்ள ஒரு மலைப்பாம்பு!
அந்தக் கழிவறைக்கான குழாய் வழியாக அந்தப் பாம்பு உள்ளே நுழைந்ததாக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
அத்தாபோர்ன் சிறுநீர் கழிக்க கழிவறைத் தொட்டியில் அமர்ந்தபோது, கழிவறைக் குழிக்குள் இருந்து வெளியே வந்த அந்த மலைப்பாம்பு, சமயம் பார்த்து அவரது ஆண்குறியைக் குறிபார்த்துக் கடித்துவிட்டது.
பாம்பு “குறி” பார்த்துக் கடித்த அத்தாபோர்ன் இவர்தான்….(படம்: நன்றி – பிபிசி)
அலறி அடித்து வேதனையால் துடித்த அத்தாபோர்ன் உடனடியாக, புத்திசாலித் தனமாக, அந்த பாம்பின் தலையைப் பிடித்துக் கொண்டு, அதன் வாயைப் பிடித்துப் பிளந்து மேற்கொண்டு தனது ஆண்குறி கடிபடாமல் பார்த்துக் கொண்டார்.
“முதலில் எனது ஆண்குறியை அந்தப் பாம்பு கடித்துத் துண்டாக்கி விட்டது என்றுதான் நான் நினைத்தேன். அந்த அளவுக்கு அந்தப் பாம்பு பலம் வாய்ந்ததாக இருந்தது” என்று பின்னர் தகவல் ஊடகங்களிடம் அத்தாபோர்ன் தெரிவித்திருக்கின்றார்.
இதற்கிடையில், அத்தாபோர்னின் அலறல் கேட்டு ஓடிவந்த அவரது குடும்பத்தினர், இரத்தம் சிந்திக் கிடந்த அந்தக் காட்சியைப் பார்த்துவிட்டு, நிலைமையைப் புரிந்து கொண்டு, உடனடியாக நடவடிக்கையில் இறங்கி அத்தாபோர்னை மருத்துவமனைக்குக் கொண்டு சென்றனர்.
கடித்தாலும் பாம்பை அடிக்காத குடும்பத்தினரின் மனித நேயம்
இருந்தாலும், அந்த மலைப்பாம்பு அந்தக் கழிவறை குழாய்க்குள் சிக்கிக் கிடந்தது. வன இலாகா மீட்புக் குழுவினர் பின்னர் அங்கு வந்து, குழாயை உடைத்து, அந்தப் பாம்பை விடுவித்துள்ளனர்.
இந்த சம்பவத்தில் ஒரு மனித நேயம் மிக்க திருப்பம் என்னவென்றார், அந்தக் குடும்பத்தினர் அந்த மலைப்பாம்பை அடிக்காமல் விட்டுவிட்டனர். மற்றவர்களாக இருந்தால் நடந்ததற்கு அந்தப் பாம்பை அடித்தே கொன்றிருப்பார்கள் அல்லவா?
பின்னர் அந்தப் பாம்பை கழிவறைக் குழாயிலிருந்து விடுவித்த வன இலாகா மீட்புக் குழுவினர் அதைக் கொண்டுபோய் காட்டில் பத்திரமாக விட்டுவிட்டனர்.
அத்தாபோர்னுக்கு நடந்ததை மோப்பம் பிடித்துக் கொண்ட தகவல் ஊடகங்கள் அவர் அனுமதிக்கப்பட்டிருந்த மருத்துவமனை சென்று அவரைப் பேட்டி கண்டு, அவரது அனுபவத்தை பகிர்ந்து கொண்டுள்ளனர்.
தற்போது குணமடைந்து வரும் அத்தாபோர்ன், இயல்பாக சிறுநீர் கழிக்கும் நிலைமைக்குத் திரும்பியுள்ளார் என்று அவருக்கு சிகிச்சை அளித்து வரும் மருத்துவர்கள் தெரிவித்துள்ளனர்.