Home Featured தமிழ் நாடு ஜெயலலிதா சொத்து வழக்கில் அனைத்துத்தரப்பு வாதமும் இன்றுடன் நிறைவு!

ஜெயலலிதா சொத்து வழக்கில் அனைத்துத்தரப்பு வாதமும் இன்றுடன் நிறைவு!

646
0
SHARE
Ad

jayallalithaaகர்நாடக – தமிழக முதல்வர் ஜெயலலிதா மீதான சொத்துக்குவிப்பு மேல்முறையீட்டு வழக்கின் விசாரணை உச்ச நீதிமன்றத்தில் விடுமுறை கால அமர்வு முன்பு இன்று நடைபெற இருக்கிறது. அனைத்து தரப்பு வாதமும் நிறைவடைந்தால் தீர்ப்பு ஒத்தி வைக்கப்படும் என தெரிகிறது.

ஜெயலலிதா, சசிகலா, சுதாகரன், இளவரசி ஆகியோர் மீதான சொத்துக்குவிப்பு மேல்முறையீட்டு வழக்கு விசாரணை உச்ச நீதிமன்றத்தில், நீதிபதிகள் பினாகி சந்திரகோஷ், அமித்வா ராய் ஆகியோர் அடங்கிய அமர்வு முன்னிலையில் நடைபெற்று வருகிற‌து.

கர்நாடகா அரசு மூத்த வழக்கறிஞர்கள் துஷ்யந்த் தவே, ஆச்சார்யா மற்றும் ஜெயலலிதா தரப்பு வழக்கறிஞர்கள் நாகேஸ்வர ராவ், சேகர் நாப்டே உள்ளிட்டோர் தங்கள் தரப்பு இறுதி வாதங்களை கடந்த மாதமே நிறைவு செய்தனர். இதையடுத்து ஆச்சார்யா இறுதியாக ஜெயலலிதா தரப்பு முன் வைத்த வாதங்களுக்கு பதிலளித்து வந்தார்.

#TamilSchoolmychoice

இவரது இறுதி தொகுப்பு மற்றும் பதில் வாதம் இன்னும் நிறைவடையவில்லை. எனவே கடந்த 12-ஆம் தேதி “இவ்வழக்கு இறுதி கட்டத்தை எட்டியுள்ளதால் ஜூன் 1-ஆம் தேதி கோடை விடுமுறை கால நீதிமன்றத்தில் விசாரித்து முடித்து விடலாம்.

அன்றைய தினம் அரசு தரப்பில் வழக்கறிஞர் ஆச்சார்யா 2 மணி நேரமும், மற்றொரு மூத்த வழக்கறிஞர் துஷ்யந்த் தவே ஒரு மணி நேரமும் மட்டுமே தங்கள‌து வாதத்தை முன்வைக்க வேண்டும்.

இதையடுத்து ஜெயலலிதா, சசிகலா உள்ளிட்ட நால்வர் தர‌ப்பும், தனியார் நிறுவனங்கள் தரப்பும் தங்களின் இறுதி தொகுப்பு மற்றும் பதில் வாதத்தை அடுத்த சில மணி நேரத்தில் முன் வைக்க வேண்டும்” எனக் காலக்கெடு விதித்து விசாரணையை நீதிபதிகள் ஒத்தி வைத்தனர்.

இதன்படி ஜெயலலிதா மீதான சொத்துக் குவிப்பு மேல்முறையீட்டு வழக்கின் விசாரணை இன்று உச்சநீதிமன்றத்தில் விடுமுறை கால அமர்வின் முன்பாக நடைபெற இருக்கிறது. ஏற்கெனவே நீதிபதிகள் அனைத்து தரப்பும் தங்களது இறுதி வாதங்களை இன்றே முடிக்க வேண்டும் என உத்தரவிட்டுள்ளனர்.

எனவே இன்றுடன் இவ்வழக்கின் அனைத்துக்கட்ட விசாரணையும், வாதங்களும் நிறைவடைந்தால் தீர்ப்பு ஒத்திவைக்கப்படலாம். ஆனால் தீர்ப்பு தேதி அறிவிக்கப்பட வாய்ப்பில்லை.

ஏனென்றால் மாவட்ட அமர்வு நீதிமன்றம், உயர் நீதிமன்றங்களில் மட்டுமே விசாரணை முடிந்த பிறகு நீதிபதிகள் தீர்ப்பு வழங்கப்படும் தேதியை அறிவித்து வழக்கை ஒத்தி வைப்பார்கள். உச்ச நீதிமன்றத்தை பொறுத்தவரை தேதி குறிப்பிடாமல் தீர்ப்பை ஒத்தி வைப்பார்கள்.

அதேபோல கீழமை நீதி மன்றங்களில் இருப்பது போல தீர்ப்பை குறிப்பிட்ட காலத்துக்குள் வழங்க வேண்டும் என்ற விதிமுறையும் உச்ச நீதிமன்றத்தில் இல்லை. எனவே நீதிபதிகள் தங்களுக்கு வசதியான நாளில் தீர்ப்பு வழங்குவார்கள் என உச்ச நீதிமன்ற வழக்கறிஞர்கள் கூறுகின்றனர்.