Home Featured கலையுலகம் திரைவிமர்சனம்: இறைவி – மனிதியைப் புரிந்து கொள்ளுங்கள் இறைவியை உணரலாம்!

திரைவிமர்சனம்: இறைவி – மனிதியைப் புரிந்து கொள்ளுங்கள் இறைவியை உணரலாம்!

1002
0
SHARE
Ad

in Iraivi Movie Stills

கோலாலம்பூர் – கார்த்திக் சுப்புராஜ் இயக்கத்தில், எஸ்ஜே.சூர்யா, பாபி சிம்ஹா, விஜய்சேதுபதி நடிப்பில் இன்று உலகம் முழுவதும் வெளியாகியிருக்கிறது இறைவி.

படத்தைப் பார்த்துவிட்டு கதை சொல்லக் கூடாது என்று கார்த்திக் இன்று காலையே ரசிகர்களுக்கு அன்புக் கட்டளையிட்டிருக்கிறார். அவர் சொன்னதில் உண்மையும் இருக்கிறது. படத்தில் எதிர்பாராத திருப்பங்களும், படம் பார்த்துத் தெரிந்து கொள்ள வேண்டிய சுவாரஸ்யங்களும் அடங்கியுள்ளன.

#TamilSchoolmychoice

கதை அமைப்பே புதுமை தான்.. எதற்கெடுத்தாலும் கோபமும், முரட்டுத்தனமும் கொண்டு அவசரப்படும் ஆண்களுக்கு மத்தியில் சிக்கித் தவிக்கும் மனிதியின் (பெண்களின்)  உணர்வுகளை வெளிப்படும் அற்புதமான கதை.

அதை சுடச்சுட பிட்சாவாகவும், குளுகுளு ஜிகர்தண்டாவாகவும், திரைக்கதை ஆக்கி ரசிகர்களுக்குப் பரிமாறுவதில் கார்த்திக் சுப்ராஜ் தனக்கே உரிய பாணியைக் கையாண்டிருக்கிறார்.

பெண்கள் என்றால் தங்களது ஆசைகளையெல்லாம் தொலைத்துவிட்டு, பெற்றோர் காட்டும் ஆண்மகனை மணந்து கொண்டு, அவன் தேவைகளையெல்லாம் நிறைவு செய்து, அவனது தவறுகளையெல்லாம் திருத்துவது தான் வேலையா? என்று கேள்வி எழுப்புகிறது கதையின் மையக்கரு.

iraivi-photos-stills-images-4வீட்டில் அடைபட்டிருந்த காலம் போய், ஆடை முதல் வேலை வரை பெண்கள் தங்களுக்கான சுதந்திரத்தை எடுத்துக் கொள்ளத் தொடங்கிவிட்டாலும் கூட, இன்னும் திருமணம், பாலியல் போன்ற அன்பும், அந்தரங்கம் சார்ந்த விசயங்களில் ஆண்களை எதிர்பார்த்திருக்கும் நுட்பமான விசயங்களைத் தொட்டிருக்கிறது படம்.

“பொறுத்துகிறதுக்கும், சகிச்சுப் போறதுக்கும் நாம என்ன பொம்பளைங்களா? ஆம்பிளைங்க…எவ்வளவு கேவலமான பிறவில்ல?” என்று ஒரு ஆணைக் கொண்டே சொல்ல வைத்து கேள்விக்கான பதிலையும் நிறைவு செய்திருக்கிறார் கார்த்திக்.

படத்தில் சினிமா இயக்குநராக நடித்திருக்கும் நடிகர் எஸ்.ஜே.சூர்யா தன் திரைப்படத்தை வெளியிட அவர் எதிர்கொள்ளும் போராட்டங்கள் அப்படியே நிகழ்கால சினிமாத்துறையைப் பிரதிபலிக்கிறது.

தன்மானத்தையும் இழக்க முடியாமல், எடுத்த படத்தையும் கைவிட முடியாமல் அவர் அடையும் அழுத்தத்தை அப்படியே திரைக்கு வெளியே கொண்டு வந்து படம் பார்க்கும் நமக்கு துக்கம் தொண்டையடைக்க வைத்து விடுகிறார்கள்.

“சாகப் போறியா டா?” என்று கமாலினி முகர்ஜி கன்னத்தில் விடும் பளார் அறைக்கு, “சாகக் கூடாதுன்னு தான்டி குடிக்கிறேன்.. முடியலடி.. ” என்று கண்ணீர் விட்டு அழும் காட்சியொன்றில் எஸ்.ஜே. சூர்யா தான் ஒரு சிறந்த நடிகன் என்பதை மீண்டும் நிரூபித்திருக்கிறார்.

Iraivi-Movie-Stills-4விஜய்சேதுபதி .. என்ன மாயமோ மந்திரமோ தெரியவில்லை.. இந்த மனுஷன் என்ன கதாப்பாத்திரம் செய்தாலும் நன்றாக இருக்கிறது. ஹீரோவா காண்பித்தாலும் தனியாகத் தெரிகிறார். ஹீரோவுக்கு அடுத்து இரண்டாம் நிலைக் கதாப்பாத்திரங்கள் செய்தாலும் தனியாகவே தெரிகிறார்.

அந்த வகையில் மைக்கேலாக இந்தப் படத்தில் நெகிழ வைக்கிறார். விஜய் சேதுபதி முகத்தில் எப்போதுமே தெரியும் ஒரு அப்பாவித் தனம் அவருக்கு மேலும் மேலும் வெற்றியைத் தந்து கொண்டிருக்கிறது.

“அண்ணே.. குடும்பத்தோடு டெல்லி போறோம்.. அவார்டு வாங்குறோம்” என்று தான் ஏமாற்றப்பட்டதை உணர்ந்த பின்னரும் கூறும் அந்த வலி மிகுந்த இடம்.. அடடா.. மனதில் நின்று விடுகிறார்.

அடுத்ததாக, பாபி சிம்ஹா.. படத்தின் முக்கியக் கதாப்பாத்திரம்.. ஜிகர்தண்டா அளவிற்கு அழுத்தம் கிடையாது. என்றாலும், படத்தின் மிக முக்கியமான வசனம் ஒன்றைப் பேசுவதே அவர் தான்.. அதை முன்னோட்டத்திலேயே கேட்கலாம்.. “அரக்கன் .. அரக்கன்.. கையில இருந்து ஒருநாள் விடுபடுவாள் கண்ணகி”.

பெண்களுக்கு அழுத்தமான கதாப்பாத்திரங்கள் கொடுத்து, திரைக்கதையில் ஏற்படும் திருப்பத்திற்கு அவர்களைக் காரணமாக வைப்பவர் கார்த்திக் சுப்ராஜ். அந்த வகையில், கதையில் மிக முக்கியமான மூன்று கதாப்பாத்திரங்களை அஞ்சலி, கமாலினி முகர்ஜி (வேட்டையாடு விளையாடு), பூஜா செய்திருக்கிறார்கள்.

அதில், துணிச்சலான கதாப்பாத்திரம் பூஜாவிற்கு. வெளிப்படையாகப் பேசும் அவரது கதாப்பாத்திரம் பெரிதும் ஈர்க்கிறது.

“ஒன்னும் தெரியாத அப்பாவிக் கன்னிப் பையனா… ஹாஹா.. இன்னும் பழைய ஆளாவே இருக்கீங்களே அங்கிள்”

“ஆமா.. என் புருஷன இன்னும் காதலிக்கிறேன். ஆனா உன் கூட….. நீ இன்னும் அந்தப் பொண்ண தொடாமலா இருந்திருப்ப… போ.. போய் அவளுக்கு நல்ல புருஷனா இரு” – இவை படத்தில் பூஜா பேசும் வசனங்கள்.

அதே போல், அஞ்சலியும், கமாலினி முகர்ஜியும்.. இருவருக்கும் கிட்டத்தட்ட ஒரே மாதிரி கதாப்பாத்திரம் தான்.. ஆத்திரமும், கோபமும் கொண்ட இரண்டு ஆண்களிடம் தவிக்கும் உணர்வுகளை மிகச் சிறப்பாக வெளிப்படுத்தியுள்ளார்கள்..

கல்யாணம் குறித்த கற்பனைகள் கடைசியில் குப்பையில் போகும் அளவிற்கு காலச் சூழ்நிலைகள் அவர்கள் தள்ளுவதைப் பார்க்கும் போது, பெண்களின் வேதனையை உணர முடிகின்றது.

இவர்களோடு, கடைசி வரை பேசாமலேயே நடித்திருக்கும் வடிவுக்கரசி, தான் செய்த தவறை உணர்ந்து மௌனத்திலேயே காலத்தைத் தள்ளும் ராதாரவி, தீவிர விசுவாசியாக நடித்திருக்கும் விஜய் சேதுபதியின் சித்தப்பா கதாப்பாத்திரம் என படத்தில் இடம்பெறும் சின்னச் சின்ன கதாப்பாத்திரங்கள் கூட நம்மை ரசிக்க வைக்கின்றன.

சிவக்குமார் விஜயனின் ஒளிப்பதிவும், விவேக் ஹர்ஷனின் படத்தொகுப்பும் சரியாக அமைந்து தேவையான இடத்தில் காட்சிகளின் விறுவிறுப்பைக் கூட்டியிருக்கிறது.

Iraivi-Movie-Stills-16042016-22சந்தோஷ் நாராயணன் பின்னணி இசை மிகச் சிறப்பாக அமைந்துள்ளது. ஒரு இரயில் காட்சியில் அஞ்சலியும், குழந்தையும் போகும் போது, ஜன்னலுக்கு வெளியே மழை தூறும். அப்போது பின்னணியில் வரும் ஒரு வித இசை மனதை கனக்கச் செய்கிறது. இது போல் படத்தில் ஆங்காங்கே நிறைய.

விவேக் வேல்முருகன் வரிகளில் ‘மனிதி வெளியே வா’, ‘நீ தானா துஷ்டன்’ பாடல் வரிகள் இனிமை, புதுமை..

படத்தில் ஆங்காங்கே தொய்வும் உள்ளது. அந்த சிலைத் திருட்டு சம்பவங்கள், குடிநோயாளி மையம் போன்றவை திரைக்கதையின் வேகத்தைக் குறைக்கின்றன. அவற்றை இன்னும் சுருக்கியிருக்கலாம்.

மற்றபடி, கண்டிப்பாக குடும்பத்தோடு பார்க்க வேண்டிய ஒரு அற்புதமான திரைப்படம்.

“எனக்குக் கல்யாணம் ஆயிருச்சி.. பிள்ளை இருக்கு.. ஆனா எங்கிட்ட இதுவரைக்கும் யாரும் காதலை சொல்லல” – மனிதியை இப்படி சொல்ல வைத்துவிடாதீர்கள் ஆண்களே என்று நேரடியாகவே சொல்கிறது படம்.

மனிதியைப் புரிந்து கொள்ளுங்கள் இறைவியை உணரலாம்..

– ஃபீனிக்ஸ்தாசன்