கோலாலம்பூர் – பிரதமர் டத்தோஸ்ரீ நஜிப் துன் அப்துல் ரசாக்கை கேலிச் சித்திரமாக வரைந்ததற்காக இன்று நீதிமன்றத்தில் நிறுத்தப்பட்டிருக்கும் ஃபாமி ரெசா (படம்) என்பவர் மீதான குற்றம் நிரூபிக்கப்பட்டால், அவருக்கு ஓர் ஆண்டு சிறைத்தண்டனை மற்றும் 50,000 ரிங்கிட் வரையிலான அபராதம் விதிக்கப்படலாம்.
நஜிப்பை ஃபாமி கேலியாகச் சித்தரித்த வரைபடம் சமூக வலைத்தளங்களிலும், இணையத் தளங்களிலும் சுழல் முறையில் நிறைய அளவில் பகிர்ந்து கொள்ளப்பட்டது. இந்த கேலிச்சித்திரம் பின்னர் பதாகைகளிலும், சுவரொட்டிகளிலும் ஸ்டிக்கர் என்ற ஒட்டுத் தாள்களிலும் பதிப்பிக்கப்பட்டு பொது இடங்களிலும் விநியோகிக்கப்பட்டது.
இதனைத் தொடர்ந்து மலேசிய தொடர்பு மற்றும் பல்ஊடக சட்டங்களை ஃபாமி மீறியதாகவும், மற்றவர்ளுக்கு எரிச்சல் ஏற்படுத்தும், மிரட்டும், துன்புறுத்தும், சங்கடப்படுத்தும் வகையில் அவர் நடந்து கொண்டதாகவும் அவர் மீது இன்று நீதிமன்றத்தில் குற்றம் சாட்டப்பட்டது.
39 வயதான அந்த ஓவியர், இந்தக் குற்றத்தை மறுத்து விசாரணை கோரினார். ஃபாமிக்காக வழக்காடும் அவரது வழக்கறிஞர் ஷாரெட்சான் ஜோஹான், இந்த வழக்கு பேச்சு, எழுத்து சுதந்திரத்தைக் குற்றமாக்குகின்றது எனக் கூறியுள்ளார்.
இதற்கிடையில், இந்த வழக்கு குறித்து கருத்துரைத்த ஓவியர் ஃபாமி, “இதன்மூலம் நான் கூறுவது சரி என்பதும், மக்கள் குறிப்பாக இளைய சமுதாயத்தினர் இதை ஆதரிக்கின்றார்கள் என்பதும் புலனாகியுள்ளது. எனது கருத்துக்காக நான் சிறை செல்லத் தயாராக இருக்கின்றேன். மக்களாகிய நாம் நமது உரிமைகளுக்காகவும், நியாயங்களுக்காகவும் போராட வேண்டும்” என்று அறைகூவல் விடுத்துள்ளார்.