Home Featured நாடு இடைத் தேர்தல் வெற்றிகள்: மஇகா தலைமைத்துவத்துக்கும், கட்டமைப்புக்கும் வலிமை சேர்த்துள்ளன!

இடைத் தேர்தல் வெற்றிகள்: மஇகா தலைமைத்துவத்துக்கும், கட்டமைப்புக்கும் வலிமை சேர்த்துள்ளன!

856
0
SHARE
Ad

கோலாலம்பூர் – கடந்த இரண்டு ஆண்டுகளாக, உட்கட்சிப் போராட்டங்கள் – நீதிமன்ற, சங்கப் பதிவக இழுபறிகள் – தேர்தல்கள் – என அலைக்கழிக்கப்பட்டு வந்த மஇகாவுக்கு, நடந்து முடிந்த இரண்டு நாடாளுமன்ற இடைத் தேர்தல்களும், தங்களைத் தாங்களே பரிசோதித்துப் பார்த்துக் கொள்ள, மிகவும் பொருத்தமான தேர்வுக் களங்களாக அமைந்தன என்றால் மிகையாகாது.

subramaniam-drகட்சியினரின் இரண்டு முக்கிய மாநிலங்களுக்கான தலைமைத்துவ ஆற்றல்களை ஒரு முறை பரிசோதித்துப் பார்க்கவும், இளைஞர், மகளிர் பிரிவுகள், புத்தா, புத்ரி பிரிவுகள் என கட்சியின் பல்வேறு உட்கட்டமைப்புப் பிரிவுகளின் பிரச்சார பலங்களை களத்தில் இறக்கி பரிசோதித்துப் பார்க்கும் முயற்சியாகவும் இந்த இரட்டைத் தேர்தல்கள் அமைந்தன.

இரண்டு தொகுதிகளிலும், தேசிய முன்னணி அபார வெற்றி பெற்றிருப்பதும், அந்த வெற்றிக்கு கணிசமான பங்களிப்பாக இந்தியர் வாக்குகளும் திகழ்ந்திருக்கின்றன என்பதும் மஇகாவுக்கு ஆறுதலளிக்கக் கூடிய அம்சங்களாகும்.

#TamilSchoolmychoice

இந்தியர்களில் 70 முதல் 75 சதவீதம் வரை தே.மு.வுக்கு வாக்களிப்பு

தேர்தல் முடிவுகள் குறித்து தனது மகிழ்ச்சியையும், திருப்தியையும் வெளிப்படுத்தியுள்ள மஇகா தேசியத் தலைவர் டத்தோஸ்ரீ டாக்டர் ச.சுப்ரமணியம், தங்களின் பிரச்சார அணுகுமுறைகளுக்கு இந்திய வாக்காளர்கள் நல்ல முறையில் ஒத்துழைப்பு தந்து, சாதகமான பிரதிபலன்களைத் தந்துள்ளார்கள் என்றும் –

kuala kangsar-by-election-campaign-subraகோலகங்சார் இடைத் தேர்தல் பிரச்சாரத்தின்போது, பேராக் மந்திரி பெசார் சாம்ரியுடன், டாக்டர் சுப்ரா, மற்ற மஇகா தலைவர்கள்….

தங்களின் கணிப்புப் படி சுமார் 70 முதல் 75 சதவீதம் வரையிலான இந்திய வாக்காளர்கள் தேசிய முன்னணிக்கு வாக்களித்திருக்கின்றார்கள் என தாங்கள் நம்புவதாகவும் -தெரிவித்துள்ளார்.

தொடக்கம் முதலே இந்திய வாக்காளர்கள், பாஸ் கட்சியுடனோ, அமானா கட்சியுடனோ, தங்களை அடையாளப் படுத்திக் கொள்ள முடியாமல் தவித்தார்கள் என்பதைக் கண்கூடாகப் பார்க்க முடிந்தது என்றும் டாக்டர் சுப்ரா கூறியிருக்கின்றார்.

அமானாவின் பல தலைவர்களை இன்னும் பாஸ் கட்சியுடன் அடையாளப்படுத்தியே வாக்காளர்கள் பார்க்கின்றனர் என்பதும், இது அமானா கட்சிக்கும் ஒரு பின்னடைவு என்றும் அரசியல் பார்வையாளர்களும் கருத்து தெரிவித்துள்ளனர்.

பாரம்பரியமாக, சுதந்திரம் முதற்கொண்டு, தேர்தல் களத்தில் அம்னோ, மசீச, மஇகா, கெராக்கான் ஆகிய கட்சிகள் ஒன்றிணைந்து, ஒருமுகமாக செயல்படும் திறமை, செயல்பாடுகள், இந்தத் தேர்தல்களிலும் வெளிப்பட்டு மிகப் பெரிய வெற்றிக்கு வழிவகுத்திருக்கின்றன.

kuala kangsar-by-election-strategy meetingகோலகங்சார் பிரச்சாரத்தின்போது, பேராக் மஇகா மாநிலத் தலைவர் டத்தோ இளங்கோ மற்றும் மற்ற பிரிவுகளின் தலைவர்களுடன் வியூகக் கூட்டம் நடத்தும் டாக்டர் சுப்ரா….

1எம்டிபி போன்ற தேசியப் பிரச்சனைகளில் எதிர்க்கட்சிகள் கவனம் செலுத்த, உள்ளூர் மக்களின் பிரச்சனைகள், குறிப்பாக, இந்தியர்கள் எதிர்நோக்கிய அன்றாட, வாழ்வியல் சமூகப் பிரச்சனைகளை மையப்படுத்தி, அவற்றுக்குத் தீர்வு காணும் முயற்சியில் மஇகா முனைப்பு காட்டியதுதான், இந்திய வாக்காளர்களை கவர முடிந்த காரணங்களுள் ஒன்றாகும்.

இனி 14வது பொதுத் தேர்தலை நோக்கி…

இனி அடுத்த இரண்டு ஆண்டுகளுக்கு இடைத் தேர்தல்கள் எதுவும் நடைபெற வாய்ப்பில்லை என்பதால், இந்த இரட்டை இடைத் தேர்தல்களில் மஇகாவின் செயல்பாடுகள், பிரயோகித்த வியூகங்கள், நடைமுறைப்படுத்திய செயல் நடவடிக்கைகள் ஆகியவற்றின் மூலம் பெற்ற அனுபவத்தின் துணை கொண்டு இனி மஇகா தலைமைத்துவம், தனது அடுத்த கட்ட வியூகங்களை மேலும் தெளிவுடனும், திறமையுடனும், வகுக்க முடியும்.

Sungei besar-by-election-grantsசுங்கை பெசார் இந்தியர் சமூகத்தின் உள்ளூர் பிரச்சனைகளை முன்னிறுத்தி அவற்றுக்குத் தீர்வு காணும் நோக்கில் நிதி ஒதுக்கீடு பெற்றது – பாடுபட்டது – மஇகா இந்திய வாக்குகளைப் பெற்றதற்கான காரணங்களுள் ஒன்றாகப் பார்க்கப்படுகின்றது….

இன்னும் இரண்டு ஆண்டுகளில் வரப்போகும் 14வது பொதுத் தேர்தலில் கடுமையான போராட்டத்தை மேற்கொண்டு தங்களின் வலிமையை மீண்டும் நிரூபிக்க இந்த இரண்டு இடைத் தேர்தல்களில் பெற்ற அனுபவங்கள் மஇகாவுக்கு மிகவும் உதவும்.

தங்களால், இந்திய வாக்குகளை பெற்றுத் தர முடிந்தது என்ற வாதத்தின் அடிப்படையில் இனி மஇகாவும், தேசிய முன்னணி தலைமைத்துவத்திடம், கூடுதலான சலுகைகளையும், பலன்களையும் எதிர்பார்க்க முடியும்.sungei besar-campaign-subra-dr

சுங்கை பெசார் இந்திய வாக்காளர்களிடையே மஇகாவின் பிரச்சாரம்…

மஇகாவின் உட்கட்சித் தேர்தல்கள் ஒத்தி வைக்கப்பட்டிருக்கும் முடிவும், இந்த காலகட்டத்தில் மஇகா தனது அனைத்து கவனத்தையும் சிதற விடாமல், ஒருமுகப்படுத்தி, இனி 14வது பொதுத் தேர்தலை மட்டுமே முன்னிறுத்தி, அரசியல் வியூகங்களை வகுப்பதற்கும், முன்னெடுத்துச் செல்வதற்கும் உதவும்.

இந்தியர்களிடையே மிகப் பெரிய உட்கட்டமைப்பைக் கொண்டுள்ள மஇகாவை மேலும் வலிமைப்படுத்துவதன் மூலமே, அதன் அடித்தளத்தை மேலும் செழுமைப்படுத்துவதன் மூலமே, தனது அரசியல் நோக்கங்களை சாதித்துக் கொள்ள முடியும் என்பதை தேசிய முன்னணி தலைமைத்துவமும் உணர வேண்டிய தருணம் இது!

-இரா.முத்தரசன்