சென்னை – நாளொரு மேனி பொழுதொரு வண்ணமாக, தினமும் ‘கபாலி’ பற்றிய செய்திகள் வந்து கொண்டுதான் இருக்கின்றன.
கடந்த வார இறுதியில் தமிழகத்தின் தந்தி தொலைக்காட்சியில் பிரபல தொலைக்காட்சி ஊடகவியலாளர் ரங்கராஜ் பாண்டே நடத்தும் ‘கேள்விக்கென்ன பதில்’ என்ற நிகழ்ச்சியில் கலந்து கொண்ட ‘கபாலி’ படத் தயாரிப்பாளர் கலைப்புலி எஸ்.தாணு (படம்), கபாலி குறித்த பல்வேறு தகவல்களைப் பகிர்ந்து கொண்டார்.
அதில் அவர் குறிப்பிட்ட ஒரு முக்கிய விஷயம் என்னவென்றால் கபாலி 7 மொழிகளில் வெளியாகப் போகின்றது என்பதுதான்.
கபாலி தமிழில் வெளியாகும்போது, ஒரே நேரத்தில் இந்தி, தெலுங்கு, மலாய் என மற்ற மொழிகள் உட்பட மொத்தம் நான்கு மொழிகளில் வெளியாகின்றது.
கபாலி பட பூஜையின்போது ரஜினியுடன் தயாரிப்பாளர் கலைப்புலி தாணு (வெள்ளை ஆடையில்)…
அடுத்து படம் வெளியாகி, அடுத்த இரண்டு மூன்று மாதங்கள் கழித்து, ஜப்பான்,சீனம், தாய்லாந்து ஆகிய மூன்று மொழிகளில் மொழிமாற்றம் செய்து கபாலி வெளியிடப்படுகின்றது என தாணு தெரிவித்துள்ளார்.
இதனைத் தொடர்ந்து, 3 இந்திய மொழிகள், 4 அயல்நாட்டு மொழிகள் என மொத்தம் 7 மொழிகளில் வெளியாகும் முதல் தமிழ்ப்படம் என்ற சாதனையை கபாலி நிகழ்த்தவிருக்கின்றது.
தந்தி தொலைக்காட்சிப் பேட்டியை நிறைவு செய்யும்போது, “கபாலி படத்தின் இலாபத்திலிருந்து ஒரு தொகையை எடுத்து நான் தமிழ்த் திரையுலகிற்கு செய்யப்போகும் ஒரு காரியத்தினால் உங்கள் கண்கள் நிச்சயம் பனிக்கும்” என்றும் கலைப்புலி தாணு கூறியுள்ளார்.