கோலாலம்பூர் – கடந்த ஜூன் 18ஆம் தேதி கோலாலம்பூர் பிரிக்பீல்ட்ஸ் வட்டாரத்தில் இயங்கிவரும் இந்தியக் கலாச்சார மையத்தில் இந்திய சுதந்திரப் போராட்டத் தலைவரும், இந்திய தேசிய இராணுவத்தை உருவாக்கித் தலைமையேற்று நடத்தியவருமான நேதாஜி சுபாஷ் சந்திரபோசின் அரை உருவச் சிலை நிர்மாணிக்கப்பட்டது.
இந்தியக் கலாச்சார மையம் தற்போது நேதாஜி சுபாஷ் சந்திரபோஸ் கலாச்சார மையம் என்ற பெயரில்தான் அழைக்கப்படுகின்றது என்பதும் குறிப்பிடத்தக்கது.
விழா மேடையில் முன்னாள் ஐஎன்ஏ இராணுவ வீராங்கனைகளுடன் டான்ஸ்ரீ கே.ஆர்.சோமா…
நேதாஜி சிலை திறப்பு விழாவின் முக்கிய அம்சம் என்னவென்றால், ஐஎன்ஏ என அழைக்கப்பட்ட, அவரது இந்திய தேசிய தேசிய இராணுவத்தில் பங்கு பெற்று அந்தக் காலத்தில் போராடிய முன்னாள் வீரர்கள்-வீராங்கனைகள் ஆகியோர் இணைந்து அந்த சிலையைத் திறந்து வைத்து மரியாதை செலுத்தியதுதான்.
தேசிய நிலநிதிக் கூட்டுறவு சங்கத்தின் தலைவர் டான்ஸ்ரீ கே.ஆர்.சோமசுந்தரம் அவர்களும், அந்நாளில் இந்திய தேசிய இராணுவத்தில் இணைந்து பணியாற்றியவர் என்பதும் இங்கு குறிப்பிடத்தக்க மற்றொரு அம்சம். அவரும் நேதாஜி சிலை திறப்பு விழாவில் கலந்து கொண்டு சிறப்பு சேர்த்தார்.
நேதாஜியின் புகழ்பெற்ற ஐஎன்ஏ இராணுவத் தொப்பியோடு அமர்ந்திருக்கும் முன்னாள் வீராங்கனை ஒருவருக்கு நினைவுப் பரிசு வழங்குகின்றார், இந்தியத் தூதர் டி.எஸ்.திருமூர்த்தி. அருகில் முன்னாள் மஇகா தேசியத் தலைவர் டத்தோஸ்ரீ ஜி.பழனிவேல், அவரது துணைவியார், கனகம் பழனிவேல்…
இந்தியத் தூதரகத்தால் ஏற்பாடு செய்யப்பட்ட இந்த சில திறப்பு நிகழ்ச்சியில் கலந்து கொண்டவர்களில் முன்னாள் மஇகா தேசியத் தலைவர் டத்தோஸ்ரீ ஜி.பழனிவேல், அவரது துணைவியார் கனகம் பழனிவேல் ஆகியோரும் அடங்குவர். கலாச்சார மையத்தில் நிறுவப்பட்ட நேதாஜியின் அரை உருவச் சிலையின் பின்னணியில் நினைவுக்காக…டான்ஸ்ரீ கே.ஆர்.சோமா, ஜி.பழனிவேல் தம்பதியர், இந்தியத் தூதர் திருமூர்த்தி, மற்றும் ஐஎன்ஏ போராட்ட வீரர்கள், வீராங்கனைகள்…
கடந்த ஆண்டு மலேசிய வருகை மேற்கொண்டிருந்த இந்தியப் பிரதமர் நரேந்திர மோடி, நேதாஜி மலேசியாவில் இந்திய தேசிய இராணுவத்தின் மூலம் ஏற்படுத்திய அரசியல் அதிர்வுகள், பங்களிப்புகள் ஆகியவற்றை நினைவு கூரும் வண்ணம், கோலாலம்பூரில் இயங்கி வரும் இந்தியக் கலாச்சார மையம், இனி நேதாஜி சுபாஷ் சந்திரபோஸ் கலாச்சார மையம் என்ற பெயரில் அழைக்கப்படும் என அறிவித்திருந்தார்.
-செல்லியல் தொகுப்பு