சென்னை – இன்போசிஸ் நிறுவன பொறியியலாளர் சுவாதி, கடந்த வெள்ளிக்கிழமை, நுங்கம்பாக்கம் இரயில் நிலையத்தில் மர்ம நபரால் படுகொலை செய்யப்பட்டது குறித்து சென்னை உயர்நீதிமன்றம் இன்று தமிழக அரசிடம் அடுக்கடுக்காகக் கேள்விகளை எழுப்பியுள்ளது.
தமிழக அரசு வழக்கறிஞர் சண்முக வேலாயுதத்திடம், கேள்வி எழுப்பிய சென்னை உயர்நீதிமன்ற நீதிபதிகள், இந்தக் கொலை வழக்கு விசாரணையில், காவல்துறையினரும், இரயில்வே காவல்துறையும் இணைந்து பணியாற்றுவதில் ஏதேனும் சிக்கல் உள்ளதா? என்று விசாரணை செய்துள்ளனர்.
மேலும், இந்த வழக்கு விசாரணையில், தக்க நீதி கிடைக்க பொதுமக்கள் முதல் ஊடகங்கள் வரை அனைவரின் கவனமும் திரும்பியிருப்பதால், காவல்துறையின் விசாரணையைத் துரிதப்படுத்த வேண்டும் என்றும் நீதிமன்றம் கேட்டுக் கொண்டுள்ளது.
அதோடு, இந்த வழக்கை தானே முன்வந்து விசாரணை செய்வது குறித்தும் உயர்நீதிமன்ற ஆலோசனை செய்து வருகின்றது.