சென்னை – இன்போசிஸ் பெண் பொறியியலாளர் சுவாதி கொலை வழக்கில் கைது செய்யப்பட்டுள்ள ராம்குமார் சிறையில் அடைக்கப்பட்டுள்ள நிலையில், அவர் தங்கியிருந்த விடுதியைச் சேர்ந்த மேலும் 7 பேரிடம் விசாரணை நடத்த காவல்துறை முடிவு செய்துள்ளது.
காரணம், அவர்களின் அறிமுகம் மூலமாகத் தான் ராம்குமார் அந்த விடுதியில் வந்து தங்கியுள்ளார்.
அவர்கள் 7 பேரும் ராம்குமாரின் சொந்த ஊரான மீனாட்சிபுரத்தைச் சேர்ந்தவர்கள் என்றும், அதில் பலர் ஐடி துறையில் வேலையில் இருப்பவர்கள் என்ற விவரமும் தெரியவந்துள்ளது.
அதோடு, இந்தக் கொலைச் சம்பவத்திற்கு தான் மட்டும் காரணமல்ல என்று அண்மையில் ராம்குமார் கூறியிருப்பது இந்தச் சம்பவத்தில் மேலும் பலர் சம்பந்தப்பட்டிருக்கலாம் என்ற சந்தேகத்தை ஏற்படுத்தியுள்ளது.
மேலும், ராம்குமார் தானாக கழுத்தை அறுத்துக்கொகொள்ளவில்லை, அவரை இவ்வழக்கில் சிக்க வைக்க காவல்துறையில் சிலர் தான் அவ்வாறு செய்துள்ளனர் என்று ராம்குமாருக்கு ஆதரவாக வழக்கறிஞர் ஒருவர் செய்தியாளர்களிடம் தெரிவித்ததும் இவ்வழக்கில் புதிய திருப்பத்தை ஏற்படுத்தியுள்ளது.
இந்நிலையில், கடந்த வாரம் ராம்குமாருக்கு பிணைத் தாக்கல் செய்த வழக்கறிஞர் ஜி.கிருஷ்ணமூர்த்தி இந்த வழக்கில் தான் ராம்குமாருக்கு ஆதரவாகத் தொடர்ந்து வாதாடப்போவதில்லை என்று தெரிவித்து இந்த வழக்கில் இருந்து விலகுவதாக அறிவித்தது மேலும் பல சந்தேகங்களையும், மர்மங்களையும் ஏற்படுத்தியுள்ளது.