சென்னை – சுவாதி கொலைவழக்கில் கைது செய்யப்பட்டு புழல் சிறைச்சாலையில் தற்கொலை புரிந்து கொண்டதாகக் கூறப்படும் ராம்குமாரின் பிரேதப் பரிசோதனை, சில நாட்களாக நீடித்து வந்த இழுபறிக்குப் பின்னர் முடிவடைந்தது.
டில்லி ஏய்ம்ஸ் மருத்துவமனை மருத்துவர் ஒருவரின் முன்னிலையில் பிரேதப் பரிசோதனை நடத்த உச்ச நீதிமன்றம் உத்தரவிட்டதைத் தொடர்ந்து நான்கு அரசு மருத்துவர்கள் நேற்று பிரேதப் பரிசோதனை நடத்தி ராம்குமாரின் நல்லுடலை அவரது தந்தையிடம் ஒப்படைத்தனர்.
இதனைத் தொடர்ந்து ராம்குமாரின் சொந்த ஊரான திருநெல்வேலி, மீனாட்சிபுரத்தில், பலத்த போலீஸ் காவலுடன் அவரது இறுதிச் சடங்குகள் இன்று ஞாயிற்றுக்கிழமை நடைபெறுகின்றன.
அவரது இறுதிச் சடங்குகளுக்கு பெருமளவில் மக்கள் திரண்டுள்ளதாகவும், பாதுகாப்பு ஏற்பாடுகளை வழங்குவதில் தமிழகப் போலீசார் திணறி வருவதாகவும், ஊடகங்கள் தெரிவித்துள்ளன.