பிலாடெல்பியா (அமெரிக்கா) – இங்கு திங்கட்கிழமை முதல் நடைபெற்றுக் கொண்டிருக்கும் ஜனநாயகக் கட்சியின் மாநாட்டில் அமெரிக்க நேரப்படி புதன்கிழமை இரவு (மலேசிய நேரப்படி வியாழக்கிழமை காலை 11.30 மணி) உரையாற்றிய அமெரிக்க அதிபர் பராக் ஒபாமா, “என்னை விடவும், முன்னாள் அதிபர் பில் கிளிண்டனை விடவும் சிறப்பான அதிபராக செயலாற்றக் கூடிய அத்தனை திறமைகளும் வாய்ந்தவர் ஹிலாரி கிளிண்டன்” என புகழாரம் சூட்டினார்.
ஜனநாயகக் கட்சியின் அனைத்துத் தலைவர்களும் வரிசையாக மாநாட்டில் உரையாற்றி தங்களின் ஆதரவைத் தெரிவித்து வருகின்றனர்.
ஹிலாரியை ஆதரித்து உரையாற்றிய ஒபாமா, அவருடன் இணைந்து பணியாற்றிய தருணங்களை நினைவு கூர்ந்ததோடு, ஹிலாரியின் உறுதியான செயல்பாடுகளையும் வெகுவாகப் புகழ்ந்துரைத்தார்.
“எட்டு ஆண்டுகளுக்கு முன்னால் எனக்கு எப்படி ஆதரவு தந்து அமெரிக்க அதிபராகத் தேர்ந்தெடுத்தீர்களோ, அதே போன்று இந்த முறையும் ஹிலாரியைத் தேர்ந்தெடுத்து அதிபராக அவரை அமர வைக்க வேண்டும்” என ஜனநாயக கட்சியினரை ஒபாமா கேட்டுக் கொண்டார்.
ஒபாமாவின் உரைக்குப் பின்னர் அவரைக் கட்டியணைத்து நன்றி தெரிவிக்கும் ஹிலாரி…(படம்: நன்றி – ஹிலாரி கிளிண்டன் டுவிட்டர் பக்கம்)
தனது உரையில் குடியரசுக் கட்சியின் எதிர்தரப்பு வேட்பாளர் டொனால்ட் டிரம்பையும் ஒபாமா கடுமையாகத் தாக்கிப் பேசினார். “ஒழுங்காக தனது பணியாட்களுக்கு சம்பளம் தராத, ஒழுங்கான முறையின் வருமான வரி விவரங்களை சமர்ப்பிக்காத ஒருவரை நாம் எப்படி நம்பி நாட்டை ஒப்படைப்பது” என ஒபாமா கடுமையாக சாடினார்.
ஒசாமா பின் லாடனைப் பிடிப்பதற்கான முயற்சிகளில் தீவிரம் காட்டியவர் ஹிலாரி என்றும் புகழ்ந்துரைத்த ஒபாமா, சிறந்த அதிபராகச் செயல்படக் கூடிய அத்தனை தகுதிகளும், அனுபவங்களும் வாய்ந்தவர் ஹிலாரி என்றும் பாராட்டினார். அவர் அதிபரானால், அமெரிக்காவை மேலும் சிறப்பான நிலைக்கு அவர் கொண்டு செல்வார் என்றும் ஒபாமா கூறினார்.
ஒபாமாவின் உரை முடிந்ததும், ஹிலாரியைக் கட்டியணைத்து மாநாட்டினருக்கு ஒபாமா அறிமுகப்படுத்தினார்.
மாநாட்டின் நிறைவாக அமெரிக்க நேரப்படி வியாழக்கிழமை இரவு (மலேசிய நேரப்படி வெள்ளிக்கிழமை காலை) ஹிலாரி கிளிண்டனர் தன்னை அதிபர் வேட்பாளராக அறிவிக்கும் நியமனத்தை ஏற்றுக் கொண்டு ஏற்புரை நிகழ்த்துவார் என்று எதிர்பார்க்கப்படுகின்றது.