கோலாலம்பூர் – இன்று நாடு முழுமையிலும் பேரங்காடிகளாகவும், நடுத்தர பலசரக்குக் கடைகளாகவும் பல்கிப் பெருகியிருக்கும் மைடின் நிறுவனத்தை சிறிய அளவில் கோத்தாபாருவில் தொடக்கிய மைடின் முகமட் குலாம் ஹூசேன் காலமானார்.
தனது 88வது வயதில் முதுமை காரணமாக நேற்று திங்கட்கிழமை இங்குள்ள தனியார் மருத்துவமனையில் அவர் காலமானார்.
அவரது மகனும் மைடின் குழுமத்தின் நிர்வாக இயக்குநருமான டத்தோ அமிர் அலி மைடின், நேற்று மாலை 5.06 மணியளவில் தனது தந்தையின் உயிர் பிரிந்ததாகவும், நாளை சோஹோர் தொழுகைக்குப் பிறகு அவரது நல்லடக்கம் புக்கிட் கியாரா முஸ்லீம் மயானத்தில் நடைபெறும் என்றும் அறிவித்துள்ளார்.
1928ஆம் ஆண்டில் பினாங்கில் பிறந்த மைடின் முகமட் (படம்) பின்னர் கோத்தாபாருவில் குடியேறி அங்கு சிறு கடை ஒன்றை மைடின் என்ற பெயரில் 1957இல் தொடக்கினார். பின்னர் ஒரு வங்கி நிர்வாகியாகத் திகழ்ந்த அவரது மகன் டத்தோ அமிர் அலி ‘மைடின் பேரங்காடிகள்’ என்ற பெயரில் தொடர் வணிக மையங்களாக, அந்த நிறுவனத்தை உருமாற்றினார்.
இன்று பல பில்லியன் ரிங்கிட் மதிப்பிலான வணிகங்களை மைடின் நிறுவனங்கள் தொடர்ந்து மேற்கொண்டு வருகின்றன.
காலமான மைடின் தனது தள்ளாத வயதிலும், மைடின் கடைகளுக்குச் சென்று அங்கு இருப்பதையும், பணியாற்றுவதையும் விரும்பி வந்துள்ளார். நேற்று தனது உயிர் பிரிவதற்கு முன்புகூட அவர் ஜாலான் மஸ்ஜிட் இந்தியாவில் உள்ள மைடின் அங்காடியில் இருந்தார். அதன் பின்னரே உடல்நலக் குறைவு காரணமாக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார்.
அவருக்கு ரௌஷான் பாய் என்ற 80 வயது மனைவியும், ஏழு பிள்ளைகளும் இருக்கிறார்கள்.
பல தருணங்களிலும், பேட்டிகளிலும் தனது தந்தை குறித்தும் அவரது வணிக முயற்சிகள் குறித்தும் டத்தோ அமிர் அலி (படம்) பெருமிதத்துடன் குறிப்பிட்டிருக்கின்றார்.
“மிகவும் ஒழுக்கமான, கறாரான மனிதரான அவர், வணிக விவகாரங்களில் எப்போதும் சரியாக நேரந்தவறாமல் நடந்து கொள்ளவே விரும்புவார். நேர்மையான முறையில் வணிகத்தை நடத்த வேண்டும் என்றும், ‘ஹலால்’ முறைப்படி ஒழுக்கத்துடன் பணம் சம்பாதிக்க வேண்டும் என்றும் அவர் எங்களிடம் எப்போதும் வலியுறுத்துவார்” என டத்தோ அமிர் அலி மேலும் தனது தந்தை குறித்து விவரித்துள்ளார்.