பெர்த் – மேற்கு ஆஸ்திரேலியாவில் கடலில் மீன் பிடித்துக் கொண்டிருந்த ஒருவர், ஏதோ மிகப் பெரிய பந்து போன்ற பொருள் ஒன்று தண்ணீரில் மிதப்பதைக் கண்டு அதிர்ச்சியடைந்துள்ளார்.
முதலில் படகு என்றும், பின்னர் மிகப் பெரிய வெப்பக் காற்று பலூன் என்றும், அருகே நெருங்க நெருங்க வேற்றுக்கிரகப் பொருளாக இருக்கலாம் என்றும் எண்ணியவர், பின்னர் தான் அது ஒரு இறந்த திமிங்கிலம் என்பதை உணர்ந்துள்ளார்.
அது குறித்து மார்க் வாட்கின்ஸ் என்ற அந்த நபர் செய்தியாளர்களிடம் கூறுகையில், “அதன் வயிறு முழுவதும் வாயுவால் நிறைந்துள்ளது. அதனால் தான் அது பந்து போல் உப்பலாக இருந்தது. அருகே செல்லச் செல்ல அது ஒரு இறந்த திமிங்கிலம் என்று அதன் துர்நாற்றத்தை வைத்து உணர்ந்தோம்” என்று தெரிவித்துள்ளார்.
மீன் பிடிப்பதில் மிகவும் அனுபவசாலியான மார்க், தான் இதுவரையில் இப்படி ஒரு சம்பவத்தைப் பார்த்ததே இல்லை என்று தெரிவித்துள்ளார்.
இறந்த அந்தத் திமிங்கிலத்தின் உடல் அதன் வெளிப்புறத்தோல் கிட்டத்தட்ட வெடித்துவிடும் அளவிற்கு உப்பியிருந்ததாக அவர் தெரிவித்துள்ளார்.