கோலாலம்பூர், ஜனவரி 10 – நாட்டின் பிரபல பேரங்காடியான மைடினில் இருந்து பெருமளவில் அரிசி மூட்டைகளை வாங்கிய சிலர் அதில் மலேசியப் பிரதமர் டத்தோஸ்ரீ நஜிப் துன் ரசாக்கின் புகைப்படத்தை பதித்து மக்களுக்கு நன்கொடை வழங்கியுள்ளனர்.
இதனை அறிந்து அதிர்ச்சியுற்ற மைடின் நிறுவனம் தங்களுக்கும், இந்த நன்கொடைக்கும் எந்த ஒரு சம்பந்தமும் இல்லை என்றும், தங்களிடமிருந்து அரிசி மூட்டைகளை வாங்கிய சிலர் அதில் நஜிப்பின் புகைப்படத்தை பதித்து மக்களுக்கு நன்கொடை வழங்கியுள்ளனர் என்றும் தங்களது அதிகாரப்பூர்வ பேஸ்புக் தளத்தில் விளக்கமளித்துள்ளது.
மேலும், இன்னொரு முறை இது போன்ற செயல்பாடுகள் நடக்குமாயின் இந்த விவகாரத்தை சம்பந்தப்பட்ட அதிகாரிகளின் கவனத்திற்குக் கொண்டு செல்லவும் நிர்வாகம் தயங்காது என்றும் எச்சரிக்கை விடுத்துள்ளது.
ஆளுங்கட்சித் தலைவரின் புகைப்படத்தை பொருட்களில் பதித்து மக்களுக்கு விநியோகம் செய்யும் முறை தற்போது அண்டை நாடான இந்தியாவிலுள்ள தமிழகத்தில் வழக்கத்தில் இருந்து வருகின்றது.
தமிழகத்தில் ஆளுங்கட்சியான அதிமுக கட்சியின் பொதுச்செயலாளரும், முன்னாள் முதலமைச்சருமான செல்வி ஜெயலலிதாவின் ஒவ்வொரு திட்டங்களுக்கும் “அம்மா உணவகம்”, “அம்மா சிமெண்ட்”, “அம்மா குடிநீர்” என்று எங்கும் அம்மா புகழாரம் சூட்டி மக்களின் கடுமையான விமர்சனங்களுக்கு உள்ளாகி வருவது குறிப்பிடத்தக்கது.
14-வது பொதுத்தேர்தலுக்கு இன்னும் 3 ஆண்டுகள் உள்ள நிலையில் அது போன்ற முறைகளை இங்கும் அறிமுகம் செய்வதற்கான ஆயத்தமாக இந்த சம்பவம் இருக்கலாமோ என்ற சந்தேகம் ஏற்படுகின்றது.