Home இந்தியா ராஜபக்சேவுக்கு தண்டனை தொடங்குகிறது – வைகோ

ராஜபக்சேவுக்கு தண்டனை தொடங்குகிறது – வைகோ

596
0
SHARE
Ad

rajapukshaசென்னை, ஜனவரி 10 – இலங்கை அதிபர் தேர்தலில் ராஜபக்சே தோல்வி அடைந்தது குறித்து கருத்து தெரிவித்துள்ள வைகோ, தமிழர்களை கொன்ற ராஜபக்சேவுக்கு  தண்டனை தொடங்குகிறது என்று கூறியுள்ளார்.

இது தொடர்பாக வைகோ வெளியிட்டுள்ள  அறிக்கையில்; “’என்றாவது ஒருநாள் அறம் வெல்லும்; அநீதி அழியும்’ என்பதே, தொன்றுதொட்டு வரும் தமிழர்களின் நம்பிக்கை. அக்கூற்றினை மெய்ப்பிக்கின்ற வகையில், தமிழ் இனக் கொலைகாரன் ராஜபக்சே தோற்கடிக்கப்பட்டு இருக்கின்றார்”.

“ஜெனீவா நெறிகளைக் குழிதோண்டிப் புதைத்து, உலகம் தடை செய்த குண்டுகளை வீசி, பச்சிளம் குழந்தைகள்,பாலகர்கள், தாய்மார்கள், வயது முதிர்ந்தோர், ஆயுதம் ஏந்தாதோர் என இலட்சக்கணக்கான ஈழத்தமிழர்களை, ஈவு இரக்கம் இன்றிக் கொன்று குவித்த குற்றவாளி ராஜபக்சே”.

#TamilSchoolmychoice

“இலங்கைத் தீவில் தமிழர் என்ற இனம்’ என்பதே கிடையாது என்று கூறி, தமிழர் தாயகத்தில்  சிங்களக் குடியேற்றங்களை அதிகரித்து, சிங்கள இராணுவத்தையும், காவல்துறையையும் அங்கு நிறுத்தி, தமிழர் தாயகத்தை ஹிட்லரின் வதை முகாமைப் போல ஆக்கினார்”.

“ஐ.நா.வின் மனித உரிமைக் ஆணையம் அமைத்த விசாரணைக்குழுவை, இலங்கைக்குள் அனுமதிக்க மாட்டேன் என்று கொக்கரித்தார். இந்தியாவின் நரேந்திர மோடி அரசு, இந்த இனக்கொலைகாரனைத் தலைக்கு மேல் வைத்துக் கொண்டாடியது”.

“இஸ்லாமியப் பெருமக்கள் நிறைந்து வாழும் மூதூர் பகுதியில், ராஜபக்சேவுக்கு 7,000 வாக்குகளும், எதிர் வேட்பாளருக்கு 57,000 வாக்குகளையும் அளித்து உள்ளனர்”.

“அலரி அரண்மனையை விட்டு உடனே வெளியேறு’ என்று, வெற்றி பெற்ற தரப்பு ராஜபக்சேவுக்குத் தெரிவித்தவுடன், அந்த அகங்கார மாளிகையை விட்டு கதறிப் புலம்பிக்கொண்டு வெளியேறி விட்டான் ராஜபக்சே’.

‘இத்தேர்தல் களத்தில் அதிபராக வெற்றி பெற்று இருக்கின்ற மைத்ரிபால சிறிசேனா,  ஈழத்தமிழர்களுக்கு நீதி வழங்கி விடுவார் என்று எவரும் எதிர்பார்த்து ஏமாந்து விட வேண்டாம்”.

“ராஜபக்சேயின் அமைச்சரவையில் கடைசிவரையிலும் இடம் பெற்றவர்; அக்கட்சியின் பொதுச்செயலாளராக இருந்தவர்; சிங்கள இனவாத இரத்தத்தோடு, ஈழத்தமிழருக்குக் கேடு செய்யும் உணர்வு இவரிடம் இரண்டறக் கலந்தே இருக்கின்றது’.

“அதனால்தான், ‘தமிழர் தாயகத்தில் இருந்து இராணுவத்தையும், போலீசை வெளியேற்ற மாட்டேன்’ என்று தேர்தலுக்கு முன்பே அறிவித்து விட்டார்”.

“எனவே, தமிழர்களுக்கு அதிகாரப் பகிர்வு தந்து விடுவார் என்றும் எதிர்பார்க்க வேண்டாம். இவரது தமிழர் விரோத மனப்பான்மை மாறி விடும் என்றும் நம்புவதற்கு இல்லை”.

“ஆனால், இந்தத் தேர்தல் முடிவால் ஒரு நன்மை விளைந்து இருக்கின்றது. ‘ஈழத்தமிழர்கள் கொதித்து எழுந்து எதிர்ப்பைக் காட்டினர்; இனக்கொலை நடத்தியவன் தூக்கி எறியப்பட்டு விட்டான்’ என்பது உலகத்திற்கு வெட்டவெளிச்சம் ஆகிவிட்டது”.

“இனக்கொலை செய்த ராஜபக்சே அனைத்துலக நீதிமன்றக் குற்றக் கூண்டில் நிறுத்தப்பட்டுத் தண்டிக்கப்பட வேண்டும். இதுவே, உலகத் தமிழர்களின் இலக்கு ஆகும். சிங்களர்களோடு ஈழத்தமிழர்கள் ஒருநாளும் சேர்ந்து வாழ முடியாது. சுதந்திரத் தமிழ் ஈழத்திற்கான பொது வாக்கெடுப்பு ஒன்றுதான் தீர்வு.

“தமிழ்க்குலத்திற்குக் கேடு செய்யும் எவ்ருக்கும் கேடு தானாக வரும் என்பதுதான் நடந்த தேர்தல் முடிவு தரும் பாடம் ஆகும் ” என்று  தெரிவித்துள்ளார் வைகோ.