கோலாலம்பூர் – மலேசியாவின் முக்கியத் தலைவர்கள் சிலரை ஐஎஸ்ஐஎஸ் குறி வைத்திருப்பதாகக் கூறும், கடிதம் ஒன்று நேற்று திங்கட்கிழமை நெகிரி செம்பிலான் காவல்நிலையத்திற்கு மர்ம நபர்களால் அனுப்பி வைக்கப்பட்டுள்ளது.
ஐஎஸ் குறி வைத்துள்ள மலேசியத் தலைவர்கள் பட்டியலில், பிரதமர் டத்தோஸ்ரீ நஜிப் துன் ரசாக், துணைப்பிரதமர் டத்தோஸ்ரீ டாக்டர் அகமட் சாஹிட் ஹமீடி, தலைமை வழக்கறிஞர் டான்ஸ்ரீ மொகமட் அபாண்டி அலி, தேசியக் காவல் படைத்தலைவர் டான்ஸ்ரீ காலிட் அபு பக்கர் ஆகிய முக்கியத் தலைவர்கள் இடம்பெற்றுள்ளனர்.
மேலும், டத்தோஸ்ரீ டாக்டர் சாலே சையட் கெருவாக், டத்தோஸ்ரீ அசலினா ஓத்மான் மற்றும் தெங்கு அட்னான் தெங்கு மான்சோர், துணையமைச்சர் நூர் ஜஸ்லான் மொகமட் ஆகியோரும் அப்பட்டியலில் குறிப்பிடப்பட்டுள்ளனர்.
நேற்று கிடைத்துள்ள அந்த இரண்டு பக்கக் கடிதத்தில், குறி வைக்கப்பட்டுள்ள தலைவர்களின் படங்களும் இணைக்கப்பட்டிருந்ததாக காவல்துறைத் தெரிவித்துள்ளது.
அதோடு, நெகிரி செம்பிலானில் மட்டும் 700 ஐஎஸ் போராளிகள் இருப்பதாக அந்தக் கடிதத்தில் கூறப்பட்டிருப்பதை காவல்துறை திட்டவட்டமாக மறுத்துள்ளது.
இந்நிலையில், அந்தக் கடிதத்தை அனுப்பியவர்கள் பற்றி அறிய காவல்துறை தடவியல் நிபுணர்களின் உதவியோடு விசாரணையைத் தொடங்கியுள்ளது.