கோலாலம்பூர் – பேராக் சபாநாயகர் பதவி மீண்டும் மஇகாவுக்கே என மந்திரி பெசார் டத்தோஸ்ரீ ஜம்ரி அப்துல் காடிர் அறிவித்துள்ளது மகிழ்ச்சி அளிப்பதாகக் கூறியுள்ள பிரதமர் துறையின் முன்னாள் துணை அமைச்சர் டத்தோ டி.முருகையா அந்தப் பதவிக்கு யார் நியமிக்கப்பட்டாலும் நாம் ஆதரிக்க வேண்டுமெனக் கருத்து தெரிவித்துள்ளார்.
கடந்த ஒரு மாதமாக இப்பதவி குறித்து பரவலான விமர்சனங்களும் கருத்துகளும் வெளியிடப்பட்ட வேளையில் அப்பதவி மஇகாவிற்கே என நம்பிக்கையுடன் கூறியதோடு அதனைச் செயல்படுத்தியும் காட்டியிருக்கும் மஇகா தேசியத் தலைவர் டாக்டர் எஸ். சுப்ரமணியத்தின் செயல்பாடுகள் பாராட்டுக்குரியது என்றும் முருகையா நேற்று வெளியிட்ட அறிக்கையொன்றில் தெரிவித்துள்ளார்.
“அமைதியான முறையில் சிக்கல்களில் இருந்து வெளியேறி சபாநாயகர் பதவி மஇகா வசமே என்று உறுதிப்படுதிய தேசியத் தலைவர் டாக்டர் சுப்ரா நிச்சயம் அப்பதவிக்கு தகுதியான வேட்பாளரையும் தேர்ந்தெடுப்பார் என்பதில் சற்றும் ஐயமில்லை.
ஒவ்வொரு காலகட்டத்திலும் மஇகா தனக்குரிய உரிமைகளைப் போராடியே பெற்று வருகின்றது என்பது உண்மை என்றாலும் அப்போராட்டங்கள் ஏதோ ஒருவகையில் நமது இந்திய சமுதாயத்திற்கு முக்கியமான ஒன்றாகவே அமைவதால் சமுதாயத்தின் பிரதிநிதியாக திகழும் மஇகாவையும் அதன் தேசியத் தலைவரான டத்தோ சுப்ராவின் செயல் திட்டங்களையும் நாம் வெறுமனே விமர்சிக்காமல் அவரின் செயலால் நம் சமுதாயத்திற்கும் கட்சிக்கும் கிடைக்கும் நலன்களைப் பற்றி ஆராய்வதே சிறந்த ஒன்றாகும்” என்றும் தனது அறிக்கையில் வலியுறுத்தியுள்ளார் டத்தோ முருகையா.
“பதவி கிடைக்குமா கிடைக்காதா? என்ற கேள்விக்கு விடை கிடைத்த பட்சத்தில் அப்பதவி யாருக்கு என்ற கருத்து கணிப்புகள் தேவையற்ற ஒன்று” எனக் கூறியுள்ள முருகையா, அடுத்த அவைத் தலைவர் யார் என்பதைவிட அவர் மஇகாவின் பிரதிநிதி என்பதே முக்கிய கவனிக்கப்பட வேண்டிய அம்சம் எனத் தெரிவித்துள்ளார்.
“ஒரு செயலில் இறங்கினால் அது வெற்றியடையும் வரை போராட வேண்டும். அவ்வகையில் சபாநாயகர் பதவிக்கான சிக்கல்களை தீர்த்து சுமூகமான ஒரு முடிவையும் கொண்டுள்ள நம் தேசியத் தலைவர், அவைத் தலைவருக்கான வேட்பாளர் யார் என்பதையும் நிர்ணயித்துள்ளப்படியால் அவர் முடிவுக்கு கட்சி உறுப்பினர்கள் முழுமனதுடன் ஆதரவு வழங்குவதே சாலச் சிறந்தது” என்றார் டத்தோ முருகையா.