புத்ரா ஜெயா – புதிய அனைத்துலகக் கடப்பிதழுக்கு (பாஸ்போர்ட்) விண்ணப்பம் செய்வதற்காக குடிநுழைவு அலுவலங்களில் மணிக்கணக்காக காத்து நிற்கும் நிலைமை எதிர்வரும் செப்டம்பர் முதல் மாறக் கூடும்.
பொதுமக்கள் தங்களின் அனைத்துலகக் கடப்பிதழுக்கான விண்ணப்பங்களையும், கால நீட்டிப்புக்கான விண்ணப்பங்களையும் இணையம் வழி சமர்ப்பிக்கும் திட்டம் செப்டம்பரில் அறிமுகப்படுத்தப்படும் என குடிநுழைவுத் துறை இலாகாவின் தலைமை இயக்குநர் டத்தோ முஸ்தாபார் அலி அறிவித்துள்ளார்.
செப்டம்பருக்குள் முழுமையாக இந்தத் திட்டம் செயல்படுத்தப்படும் என்றும் அதன்மூலம் மக்கள் மேலும் சுலபமான முறையில் அனைத்துலகக் கடப்பிதழ்களைப் பெற முடியும் என்றும் அவர் மேலும் கூறியுள்ளார்.
அஸ்ட்ரோ அவானி ஊடகத்திற்கு அவர் வழங்கியுள்ள பிரத்தியேகப் பேட்டியில் அவர் இவ்வாறு கூறியுள்ளார்.
புதிய கடப்பிதழ்களுக்கு விண்ணப்பிப்பவர்களும், கால நீட்டிப்புக்கு விண்ணப்பிப்பவர்களும் அதனைப் பெறுவதற்கு 6 மாதம் வரை காத்திருக்க வேண்டும் என்ற தகவல்கள் வெளியானதைத் தொடர்ந்து மக்கள் பதட்டத்தினால் குடிநுழைவு அலுவலகங்களில் குவிந்து வருவதால் நீண்ட வரிசையில் அவர்கள் காத்திருக்க வேண்டிய சூழ்நிலை தற்போது ஏற்பட்டுள்ளது.
செப்டம்பரில் அறிமுகமாகும் இணையம் வழியான விண்ணப்பங்களினால் இந்த நிலைமை சீர்படுத்தப்படும் எனவும் முஸ்தாபார் அலி கூறியுள்ளார்.