கோலாலம்பூர் – சிரியாவின் ஐஎஸ்ஐஎஸ் அமைப்பில் இருக்கும் மலேசியர்களும், இந்தோனிசியர்களும், பாரம்பரிய உணவுகளில் ஒன்றான நாசி லெமாக் மற்றும் சம்பலை ருசிக்க முடியாமல் மிகவும் ஏங்கித் தவிப்பதாக தீவிரவாத எதிர்ப்பு நிபுணரான நூர் ஹூடா இஸ்மாயில் என்பவர் தெரிவித்துள்ளார்.
இளம் தீவிரவாதிகள் பற்றிய ஆவணப்படம் ஒன்றிற்காக, அவர்களைச் சந்தித்த நூர், நாசி லெமாக் சாப்பிடமுடியாமல் தவிக்கும் போராளிகளில் பலர், வீட்டிற்கு திரும்ப நினைப்பதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.
“உண்மையில் அவர்கள் நாசி லெமாவிற்காக ஏங்குகிறார்கள்” என்று நூர் தெரிவித்துள்ளார்.
இந்தோனிசியா ஜகார்த்தாவில், அமைதியை நிறுவும் அனைத்துலக நிறுவனம் ஒன்றை உருவாக்கி நடத்தி வரும் நூர், மேலும் இது குறித்து கூறுகையில், “அவர்கள் சலிப்படைந்து, மன அழுத்தத்தில் உள்ளனர். அதனால் தான் அவர்கள் தற்கொலை படையில் சேர்ந்து தியாகிகளாக தங்களை மாய்த்துக் கொள்ளத் தயாராக உள்ளனர்” என்றும் நூர் தெரிவித்துள்ளார்.