சிங்கப்பூர் – மறைந்த முன்னாள் சிங்கை அதிபர் எஸ்.ஆர்.நாதனுக்கு உலகம் எங்கிலும் இருந்து அனுதாபச் செய்திகள் தொடர்ந்து வெளியிடப்பட்டு வருகின்றன.
திமுக தலைவரும், தமிழகத்தின் முன்னாள் முதலமைச்சருமான கலைஞர் மு.கருணாநிதி நேற்று விடுத்த இரங்கல்செய்தியில் “சிங்கப்பூர் நாட்டில் 1999 முதல் 2011 வரை இரண்டு முறை அதிபராக இருந்து, நீண்ட காலம் அதிபராக இருந்தவர் என்ற பெருமையைப் பெற்றவரும், “சிங்கப்பூரின் தந்தை” என்று போற்றப்படும் லீ குவான் இயூ அவர்களின் நெருங்கிய நண்பரும், இந்திய வம்சாவளியைச் சேர்ந்தவரும், மலேசியாவிலும், அமெரிக்காவிலும் சிங்கப்பூரின் தூதராக சிறப்பாகப் பணியாற்றியவருமான எஸ்.ஆர். நாதன் கடந்த சில மாதங்களாக உடல் நலம் பாதிக்கப்பட்ட நிலையில் இருந்து அதிலிருந்து மீளாமலே மறைந்து விட்டார் என்ற செய்தி அறிந்து வருந்துகிறேன்” என தனது அனுதாபங்களைத் தெரிவித்துள்ளார்.
“எஸ்.ஆர். நாதன் பல்வேறு பொறுப்புக்களில் இருந்து சிறப்பாகப் பணியாற்றியவர். சிங்கப்பூரின் வளர்ச்சிக்காகப் பெரிதும் பாடுபட்டவர். தொழிற்சங்கத்திலும் ஈடுபாடு கொண்டு, தொழிலாளர்களின் உயர்வுக்காக உழைத்தவர். அவரை இழந்து வாடும் சிங்கப்பூர் மக்களுக்கும், எஸ்.ஆர். நாதன் அவர்களின் குடும்பத்தினருக்கும் திராவிட முன்னேற்றக் கழகத்தின் சார்பில் ஆழ்ந்த இரங்கலைத் தெரிவித்துக் கொள்கிறேன்” எனவும் கலைஞர் கருணாநிதி தனது இரங்கல் செய்தியில் தெரிவித்துள்ளார்.