Home உலகம் சிங்கப்பூரில் 3-வதாக அதிபராகும் இந்தியர் தர்மன் சண்முகரத்தினம்

சிங்கப்பூரில் 3-வதாக அதிபராகும் இந்தியர் தர்மன் சண்முகரத்தினம்

521
0
SHARE
Ad
பிரச்சாரத்தில் ஈடுபட்டிருக்கும் தர்மன் சண்முகரத்தினம்

சிங்கப்பூர் : இன்னும் 2 நாட்களில் (செப்டம்பர் 1) நடைபெறப்போகும் சிங்கப்பூருக்கான அதிபர் தேர்தலில் பிஏபி கட்சி சார்பில் நிறுத்தப்படும் தர்மன் சண்முகரத்தினம் வெற்றி பெறுவார் என கருத்துக் கணிப்புகள் தெரிவிக்கின்றன.

முன்னாள் துணைப் பிரதமரான தர்மன், நடப்பு பிரதமர் லீ சியன் லுங்கிற்குப் பிறகு அடுத்த பிரதமராகலாம் என்றுகூட ஆரூடங்கள் நிலவின. ஆனால், அந்தப் பதவியை ஏற்கப் போவதில்லை என அறிவித்தார் தர்மன் சண்முகரத்தினம்.

தர்மன் சண்முகரத்தினம் தேர்ந்தெடுக்கப்பட்டால், அதிபர் பதவியை வகிக்கும் மூன்றாவது இந்தியராக அவர் திகழ்வார். அவர் இலங்கைத் தமிழர் வம்சாவளியைச் சேர்ந்தவர் என்பதும் குறிப்பிடத்தக்கது.

#TamilSchoolmychoice

இதற்கு முன் சிங்கப்பூரின் அதிபர்களாகப் பதவி வகித்த 2 இந்தியர்களைப் பற்றி சற்று திரும்பிப் பார்ப்போம்.

சி.வி.தேவன் நாயர்

சி.வி.தேவன் நாயர்

சிங்கை வரலாற்றில் தேவன் நாயர்தான் முதல் இந்திய அதிபர். ஐம்பத்தெட்டு வயதான சி.வி.தேவன் நாயர் 23 அக்டோபர் 1981 அன்று சிங்கப்பூரின் மூன்றாவது அதிபராக நாடாளுமன்றத்தால் தேர்ந்தெடுக்கப்பட்டார். அடுத்த நாள் அவர் பதவியேற்றார். ஜனாதிபதி ஆவதற்கு முன், நாயர் சிங்கப்பூர் தேசிய தொழிற்சங்க காங்கிரஸின் முதல் பொதுச் செயலாளராக இருந்தார். 1961 ஆம் ஆண்டில் அவர் அந்தத் தொழிற்சங்கத்தை நிறுவ உதவினார்.

லீ குவான் இயூவுடன் நெருக்கமானவராகக் கருதப்பட்ட தேவன் நாயர் அதிபர் பதவியில் இருந்து விலகிய முதல் அதிபருமாவார்.

மார்ச் 1985 இல் அவர் தனது பதவியை ராஜினாமா செய்தார். அவரின் பதவிக் காலம் முடிவதற்கு சுமார் ஏழு மாதங்களுக்கு முன்பு, அவரின் பதவி விலகல் மார்ச் 28-ஆம் தேதியன்று நாடாளுமன்றத்தில் அறிவிக்கப்பட்டது.

தனது உடல் நிலை காரணமாக அவர் பதவி விலகினார் என்றும் அதன் பின்னர் வெளியிடப்பட்ட அறிக்கை தெரிவித்தது.

எஸ்.ஆர்.நாதன்

எஸ்.ஆர்.நாதன்

1999 இல் நடைபெற்ற அதிபர் தேர்தலின் போது, ​​தகுதியான வேட்பாளர்கள் யாரும் இல்லாததால், எஸ்.ஆர்.நாதன் போட்டியின்றித் தேர்ந்தெடுக்கப்பட்டார். 75 வயதான அமெரிக்காவுக்கான அந்த முன்னாள் தூதர் 1 செப்டம்பர் 1999-ம் நாள் சிங்கப்பூரின் ஆறாவது அதிபராக பதவியேற்றார்.

17 ஆகஸ்ட் 2005 அன்று, நாதன் மீண்டும் போட்டியின்றி தேர்ந்தெடுக்கப்பட்டார். மேலும் அவர் இரண்டாவது தவணைக்கும் ஆறு ஆண்டு காலத்திற்கு அதிபராகத் தொடர்ந்தார். சிங்கப்பூரின் வரலாற்றில் நீண்ட காலம் அதிபராக பணியாற்றியவரும் நாதன்தான்!

நாதனுக்கு அவரின் இரண்டாவது பதவிக் காலத்தின் முடிவில் 87 வயதாகி இருந்தது. எனவே, தனது வயதைக் கருத்தில் கொண்டு மூன்றாவது முறையாக போட்டியிட வேண்டாம் என்று முடிவு செய்தார்.

ஆகஸ்ட் 2016-இல் நாதன் தனது 92-வது வயதில் காலமானார். அவரின் இறுதிச் சடங்குகளின்போது அவர் விரும்பிக் கேட்ட  ‘தஞ்சாவூர் மண்ணை எடுத்து’ என்ற கவிஞர் வைரமுத்து பாடலை ஒலிக்கச் செய்தனர்.

கவிஞர் வைரமுத்துவும் நாதன் மறைவு குறித்தும், அவருடனான சந்திப்பு குறித்தும், தஞ்சாவூர் மண்ணை எடுத்து பாடலை நாதன் ரசித்ததாகக் கூறிய சம்பவத்தையும் நினைவு கூர்ந்து இரங்கல் அறிக்கை வெளியிட்டார்.

செப்டம்பர் 1-ஆம் தேதி நடைபெறும் அதிபர் தேர்தலில் தேர்ந்தெடுக்கப்பட்டால் தர்மன் சிங்கப்பூர் அதிபர்கள் வரிசையில் இந்திய வம்சாவளியைச் சேர்ந்த மூன்றாவது இந்தியராகத் திகழ்வார்.

– இரா.முத்தரசன்