Home Photo News மஇகா தலைமையகக் கட்டட வரலாறு

மஇகா தலைமையகக் கட்டட வரலாறு

1049
0
SHARE
Ad
மஇகா தலைமையகக் கட்டடம்

(கடந்த 21 ஆகஸ்ட் 2023-ஆம் நாள் புதிய மஇகா தலைமையகக் கட்டத்திற்கான அடிக்கல் நாட்டு விழா கோலாகலமாக நடைபெற்றது. அதனை முன்னிட்டு வெளியிடப்பட்ட சிறப்பு நினைவு மலரில் மஇகாவின் தோற்றம் குறித்தும் மஇகா தலைமையகம் கட்சி தொடங்கப்பட்டது முதல் எங்கெல்லாம் இயங்கியது என்பது குறித்தும் பல சுவாரசியத் தகவல்கள் அடங்கிய கட்டுரை ஒன்றும் இடம் பெற்றது. பல அரிய, சுவையானத் தகவல்கள் கொண்ட அந்தக் கட்டுரையை செல்லியல் வாசகர்களுக்காக வழங்குகிறோம்)

ம.இ.கா வரலாறு

இரண்டாம் உலகப் போர் முடிவுக்கு வந்த பிறகு, மலாயாவில் பல மாற்றங்கள் ஏற்பட்டன. ஏற்பட்ட மாற்றங்கள் மலாயா மக்களை சுதந்திர சாதனையை நோக்கி தயார்படுத்தின. இந்த மாற்றம் நிகழ்ந்த காலத்தில், அன்றைய மலாயாவில் இருந்த முக்கிய இனங்களான மலாய்க்காரர்கள், சீனர்கள் மற்றும் இந்தியர்கள் இனம் சார்ந்த அரசியல் கட்சிகளை நிறுவி அந்தந்த நலன்களைப் பாதுகாக்க முயன்றனர். இந்த அரசியல் கட்சியை உருவாக்குவதன் நோக்கம் ஒரு உறுதியான குழுவாக இருந்து செயல்படுவது மட்டுமின்றி மக்களின் நலன்களை அரசாங்கத்தின் பார்வைக்குக் கொண்டு செல்வதாகவே இருந்துள்ளது.

புதிய மஇகா தலைமையகக் கட்டடத்தின் வரைபடத் தோற்றம்

ஜப்பானிய ஆக்கிரமிப்பின்போது பெரும் பகுதியினர் இந்திய சுதந்திர கழகம் (Indian  Independent  League-IIL) மற்றும் இந்திய தேசிய இராணுவம் (Indian  National  Army-INA) ஆகியவற்றில் ஈடுபட்டனர். ஜப்பானிய இராணுவத்தைப் பிரிட்டிஷ் இராணுவம் மலாயாவில் இருந்து விரட்டியடித்த பின், IIL மற்றும் INA உறுப்பினர்களாக இருந்த மக்கள் ஆங்கிலேயர்கள் அடுத்து என்ன செய்யவிருக்கிறார்கள் என்பதைப் பற்றி கவலைப்படத் தொடங்கினர். ஜப்பானிய ஆக்கிரமிப்புக்கு முன்பும் ஜப்பானிய ஆக்கிரமிப்புக்கு பின்புமான காலக்கட்டங்களில் ஜப்பானியர்களுக்குச் சாதகமாகச் செயல்பட்ட இந்திய சமூகத்தின் பல தலைவர்களை ஆங்கிலேயேர்கள் கைது செய்து சிறைப் பிடித்தனர். இதன் விளைவாக, அச்சமயம் இந்தியர்களைப் பிரதிநிதித்து இந்திய சமுதாயத்தை வழிநடத்த யாரும் இல்லாமல் அவ்விடம் ஒரு வெற்றிடமாக இருந்தது.

அதன் பிறகு, மலாயாவில் உள்ள இந்திய சமூகம் தங்களைப் பாதுகாக்கக்கூடிய ஓர் அமைப்பை உருவாக்க காத்திருக்க வேண்டியிருந்தது. இந்தியாவிலும் மலாயாவிலும் சுதந்திரப் போராட்டத்திற்குத் தங்கள் ஆதரவை வழங்க முடியாத நிலையும் இந்தச் சூழ்நிலைக்குக் காரணமாகிவிட்டது. தேசிய அளவில் அரசியல் கட்சி இல்லாதது அந்த நேரத்தில் மலாயா இந்தியத் தலைவர்களுக்கு விழிப்புணர்வை ஏற்படுத்தியது. இது மலாயாவில் உள்ள இந்திய சமூகத்தின் நலன்களைப் பாதுகாப்பதற்கும் முன்னேற்றுவதற்கும் மலாயாவில் ஒரு அரசியல் கட்சியை உருவாக்க தங்கள் சக்தியைத் திரட்டுவதற்கு வழிவகுத்தது.

#TamilSchoolmychoice

இதன் விளைவாக, ஏப்ரல் 1946 இல், ஜான் திவி, சர்தார் பூத் சிங், கைலாசம், எம்.கே. ராமச்சந்திரன் நாயுடு போன்ற பல மலாயா இந்திய சமூகத் தலைவர்கள் கோலாலம்பூரில் அமைந்துள்ள ஸ்ரீ மகாமாரியம்மன் கோயிலின் அலுவலகத்தில் கூடி, இந்தியர்களின் நலனைப் பாதுகாக்கக்கூடிய வகையில் ஓர் அரசியல் அமைப்பை நிறுவினர். அதன்பிறகு, 23 ஜூன் 1946 அன்று, சிலாங்கூர் இந்திய சங்கம் நடத்திய தேசிய அளவிலான கூட்டத்தில் அனைத்து இந்திய அமைப்புகளும் கலந்து கொண்டு இந்திய சமூகத்தினரிடையே அரசியல் வளர்ச்சி தொடர செயல்பட்டனர். அந்த கூட்டத்தில் ஜான் தீவி தேசிய அளவிலான மாநாட்டை ஒருங்கிணைக்க தலைவராக தேர்ந்தெடுக்கப்பட்டார்.

1946 ஆம் ஆண்டு மார்ச் 18 ஆம் தேதி ஜவஹர்லால் நேரு மலாயாவிற்கு விஜயம் செய்தது மஇகாவை நிறுவுவதற்கான உந்து காரணிகளில் முக்கிய பங்கு வகிக்கிறது. அவரது வருகை மலாயாவில் உள்ள இந்திய சமூகத்தினரிடையே தேசியவாத உணர்வை உருவாக்கியது. தலைவராக தேர்ந்தெடுக்கப்பட்ட ஜான் திவி வெளிநாடுகளில் உள்ள இந்திய அமைப்புகளிடமிருந்து விதிகள் மற்றும் கருத்துக்கள் அறிந்து சிறந்த அமைப்பை உருவாக்க நிறைய உழைத்தார்.

அதன் பிறகு, மலாயாவின் நிலைமைக்கு ஏற்ப விதிகள் மற்றும் யோசனைகள் மேம்படுத்தப்பட்டன. இதன் விளைவாக, 3, 4, 5 ஆகஸ்ட் 1946 ஆகிய 3 நாட்களுக்கு, கோலாலம்பூர், செந்தூலில் உள்ள செட்டியார் மண்டபத்தில் ஜெ.பி.பட்டாச்சாரி அவர்கள் தலைமையில் மலாயா இந்திய சமூகத்திற்கான ஒரு வரலாற்று மாநாடு நடந்தது.

அந்த 3 நாள் மாநாட்டில் சுமார் 500 பேராளர்கள் நாடு முழுமையிலும் இருந்து கலந்து கொண்டார்கள். இந்த மாநாடு இந்தியர்களிடையே மிகுந்த ஆர்வத்தையும், உத்வேகத்தையும் ஏற்படுத்தியதோடு அவர்களிடையே ஒற்றுமையும் நட்புறவும் மலர வழிவகுத்தது. உறுதியான, தீர்க்கமான முடிவுகளை எடுக்கத் தயங்கியவர்களுக்கு ஒரு வாய்ப்பை வழங்கியது அந்த மாநாடு.

அந்த மாநாட்டில், உருவாகவிருக்கும் புதிய அரசியல் கட்சிக்கு மூன்று பெயர்கள் முன்மொழியப்பட்டன. அவற்றில் மலாயா இந்திய கழகம் (Malayan  Indian League), மலாயா இந்திய சங்கம் (Malayan  Indian Association) மற்றும் மலாயன் இந்திய காங்கிரஸ் (Malayan Indian  Congress) ஆகியவை அடங்கும். இறுதியாக, மலாயன் இந்திய காங்கிரஸ் என்ற பெயர் பிரதிநிதிகளால் தேர்ந்தெடுக்கப்பட்டு, ஜான் திவி அவர்களே கட்சிக்கு முதல் தலைவராகவும் தேர்ந்தெடுக்கப்பட்டார்.

அரசாங்கத்தில் இந்திய சமூகத்தைப் பிரதிநிதித்துவப் படுத்தும் ஒரு கட்சியாக ம.இ.கா தொடர்ந்து குறிப்பிடத்தக்க பங்கை வகித்தது. மலேசிய இந்திய காங்கிரஸ் (MIC) 50-ஆம் ஆண்டுகளில் இருந்து மலேசியாவில் இந்தியர்களைப் பிரதிநிதித்துவப்படுத்தும் முக்கிய அரசியல் கட்சியாகும். 1955 மற்றும் 1956 இல் சமூக ஒப்பந்தத்தின் கீழ் அம்னோ மற்றும் ம.சீ.ச. உடன் ம.இ.கா கூட்டணியாக இணைந்தது. ம.இ.கா அரசாங்கத்தின் கீழ் ஆளுங்கட்சியாக திகழ்ந்தது.

கோலாலம்பூர், மகா மாரியம்மன் தேவஸ்தானத்தில் ம.இ.கா தொடங்கிய காலக்கட்டம்

கோலாலம்பூர் ஸ்ரீ மகா மாரியம்மன் ஆலயம் – இன்றைய தோற்றம்

1942 மார்ச் மாதம் முதல் மலாயா, ஜப்பானியர் ஆதிக்கத்தின் கீழ் வந்தது. அவர்களின் “மூன்றே முக்கால்” வருட ஆட்சியிலும் அம்மன் ஆலயம் “இந்திய சுதந்திர சங்கத்தின்” ஒரு கிளையாகவும் I.N.A. படைக்கு உதவும் நிலையமாகவும் விளங்கியது. யுத்த காலத்தில் ஆதரவற்றுக் கிடந்த பல குடும்பங்களுக்கு அம்பாளின் “சந்நிதானம்” புகலிடம் தந்தது. அப்பொழுதும் ஆலயத்தின் செயல்கள் நன்கு தொடர்ச்சியாக நடைபெறத் தவறவில்லை. சிலர் அதனைக் கட்டிக் காத்தனர்.

மாவீரர் நேதாஜி

தென் கிழக்காசியத்தில், சுதந்திர எழுச்சியை ஊட்டிய மாவீரர் நேதாஜி அவர்கள் ஸ்ரீ மகா மாரியம்மன் ஆலயத்திற்கு வருகை தந்ததும், மக்களுக்கு உற்சாக மூட்டிய உரை நிகழ்த்திய நிகழ்ச்சிகளும் வரலாற்றுக்குரியது. பர்மா போர் முனையிலிருந்து பிரமச்சாரி கைலாசம் என்பவருக்கு எழுதிய கடிதங்களில் ஸ்ரீ மகா மாரியம்மன் கோயிலைப் பற்றியும் அங்கு நடைபெறும் இந்திய சுதந்திர கழகம் (இ.சு.க.) பற்றியும் நேதாஜி குறிப்பிட்டுள்ளார்.

பிற்காலத்திய கண்ணோட்டம்

பிரிட்டீஷார் 1945 செப்டம்பரில் மலாயா திரும்பினர். 1946-இல் B.M.A. எனப்படும்

இராணுவ நிர்வாகம் பதவி ஏற்றது. “மலாயா யூனியன்” ஆட்சி பிறந்தது. இந்திய வம்சாவளியினர் பட்ட இன்னல்கள் யாவும் மக்கள் முன்தோன்றின. அரசியல் கட்சி ஒன்று தோன்ற வேண்டிய கட்டாயம் ஏற்பட்டது. 1946-இல் மலாயா இந்தியர் காங்கிரஸ் நிறுவப்பட்டது. இதற்கு மூலக்காரணம் திரு. ஜான் திவி அவர்களாவர்.

இக்கட்சிக்கு அடிப்படை வகுத்தது ஜப்பானியர் ஆட்சி காலத்தில் நிறுவப்பட்ட “இன்டிபென்டன் லீக்” என்னும் சுதந்திர இயக்கம் ஆகும். அதில் இருந்து பணி செய்த – ஏற்கனவே சிறை சென்ற சேவையாளர்களும் – சயாம் மரண ரயில்வேக்கு சென்று திரும்பிய பலரும் – இதில் முன்னோடிகளாக விளங்கினர். இப்படியாக ம.இ.கா. கட்சி பிறந்த இடம் கோலாலம்பூர் ஸ்ரீ மகா மாரியம்மன் கோயில் சந்நிதிதான் என்பது மறுக்கமுடியாத ஒன்று.

1946-ஆம் ஆண்டு மஇகா அமைக்கப்பட்ட பின்னர், பல ஆண்டுகள் வரை ம. இ. கா. தலைமை அலுவலகம், ஸ்ரீ மகாமாரியம்மன் ஆலயத்தில், “நவக்கிரகங்களுக்கு” அருகில் பலகையாலான 10′ × 10′ பரப்புள்ள சிறு அறையில் செயல்பட்டு வந்தது. பல தியாகிகள் இதில் பணியாற்றினர். ம.இ.காவைக் கட்டி காத்தனர். 1954இல் ம.இ.கா அலையன்ஸ் என்னும் கூட்டணியில் இணைந்தது. இப்படியாக சமயத்திற்கும் சமூகத்திற்கும் அரசியல் ரீதியில், உரிமைக்குப் பாடுபடவும் இந்த அம்மன் ஆலயம் அடைக்கலம் தந்தது.

துன் சம்பந்தன்

அதன் பிறகு, துன் சம்பந்தன் 1955-இல் 5-வது தேசியத் தலைவரான பின்னர் மஇகா தலைமையக அலுவலகத்தை பிரிக்பீல்ட்சில் (இப்போது ஜாலான் துன் சம்பந்தன்) அமைத்தார். இன்று நியூ மல்லிகா எண்டர்பிரைஸ் என்ற நிறுவனம் இயங்கி வரும் கட்டடத்தில் (அப்போது காசி பிராமின் என்ற உணவகம் இங்கு இயங்கியது) மஇகா தலைமையக அலுவலகம் அப்போது செயல்பட்டது.

துன் சம்பந்தன் அவர்கள் ம.இ.காவின் கட்டடத்தை கட்டும் பொறுப்பை கட்சியின் துணைத் தலைவரான தான்ஸ்ரீ மாணிக்கவாசகத்திடம் வழங்கினார். 1969-இல் மஇகா கட்டடக் குழு தலைவராக, தான்ஸ்ரீ மாணிக்கவாசகம் 8 மாடிகள் கொண்ட மஇகா தலைமையகக் கட்டடத்தைக் கடனில்லாமல் நன்கொடைகளைத் திரட்டி கட்டி முடித்தார்.

டான்ஶ்ரீ வெ.மாணிக்கவாசகம்

1973-1979 ஆகிய காலக்கட்டத்தில் ம.இ.காவின் ஆறாவது தேசிய தலைவராக தான்ஸ்ரீ மாணிக்கவாசகம் வந்த பிறகு, ஏற்கனவே கட்டி முடிக்கப்பட்ட எட்டு மாடி கொண்ட ம.இ.கா தலைமையகக் கட்டடத்திற்கு 23 ஆகஸ்ட் 1973-ஆம் நாள் திறப்பு விழாவும் செய்தார். மஇகா கட்டடத்தைத் திறந்து வைத்தது அப்போதைய பிரதமர் துன் அப்துல் ரசாக்.

இன்றும் கம்பீரமாக வீற்றிருக்கும் அந்தக் கட்டடத்தில் தலைமை அலுவலகம் அமைத்து நிரந்தர ஊழியர்களை வைத்து ம.இ.கா.வை நிர்வகித்தார் மாணிக்கவாசகம்.  அதன் பின் 1979ஆம் ஆண்டு காலக்கட்டத்தில் தேசியத் தலைவரான துன் ச. சாமிவேலு தனது தலைமைத்துவத்தில், கீழ் தள மாடியை மறுசீரமைப்பு செய்து ஒரு மண்டபத்தை மிக சிறப்பாக நிர்மாணித்து அதற்கு நேதாஜி மண்டபம் என பெயர் சூட்டினார்.

ஐம்பது வருடங்களுக்குப் பின் (1973-2023) புதிய சரித்திரம் படைக்கும் தான்ஸ்ரீ விக்னேஸ்வரன்

பத்தாவது மஇகா தேசியத் தலைவரான தான்ஸ்ரீ ச. விக்னேஸ்வரன் தலைமைத்துவத்தில் ம.இ.கா தலைமையகக் கட்டடத்திற்கு புதியதொரு பரிணாமம் உருவாகிறது. இவருடைய தலைமைத்துவத்தில் ஒரு புதிய சரித்திரத்திற்கு அடித்தளமிட்டுள்ளார். இப்போதிருக்கும் மஇகா தலைமையகக் கட்டடம் திறப்பு விழா கண்டது 23 ஆகஸ்ட் 1973-இல்! அந்த காலகட்டத்தில் மஇகா தலைமையகக் கட்டடம்தான் தலைநகரிலேயே உயர்ந்த கட்டங்களில் ஒன்றாகவும், சுற்றுவட்டாரத்தில் உள்ள மற்ற கட்டடங்களைவிட உயர்ந்ததாகவும் கம்பீரமாக வீற்றிருந்தது.

நமது மஇகா தலைமையகக் கட்டடம் திறப்பு விழா கண்ட 50-ஆம் ஆண்டு விழாவைக் கொண்டாட இன்னும் 2 நாட்களே எஞ்சியிருக்கும் நிலையில், 21 ஆகஸ்ட் 2023-இல் தான்ஸ்ரீ விக்னேஸ்வரன் தலைமையில் புதிய கட்டடத்திற்கு அடிக்கல் நாட்டப்படுவதும் ஒரு வரலாற்றுபூர்வ சம்பவமாகும்.

இந்த புதிய கட்டடம் முழுமையடையும்போது மீண்டும் இந்த சுற்றுவட்டாரத்திலேயே மிக உயர்ந்த கட்டடமாக கம்பீரமாக வீற்றிருக்கும்  பெருமை புதிய மஇகா தலைமையகக் கட்டடத்திற்கு வாய்க்கக் கூடும். அந்த சாதனையை நிகழ்த்தும் தலைவராக தான்ஸ்ரீ விக்னேஸ்வரன் திகழ்வார்.

 புதிய கட்டடம்

புதிய மஇகா தலைமையகக் கட்டடத்தின் வரைபடத் தோற்றம்

ம.இ.காவின் இப்புதிய இரண்டு கட்டிட அமைப்பில், ஒரு கட்டிடம் 35 அடுக்குமாடிகள் கொண்டு அவற்றில் அலுவலகமும் தங்குவிடுதியும் அமைக்கப்பட உள்ளது. அதனை அடுத்து 45 அடுக்குமாடிகள் கொண்ட குடியிருப்பு அமைக்கப்பட உள்ளது. அக்கட்டிடத்தில் சுமார் 3,500 பேர் அமரக்கூடிய மாநாட்டு மண்டபம் ஒன்று உருவாக்கப்பட உள்ளது. அதுமட்டுமின்றி, 8 மாடி அளவிலான வாகனம் நிறுத்துமிடமும் தரைத் தளத்தில் வணிக கடைகளும் அமைக்கப்பட உள்ளது.

மஇகாவின் 70 ஆண்டு கால அரசியல் பயணத் தொடரில் டான்ஸ்ரீ விக்னேஸ்வரனின் தலைமைத்துவத்தின் கீழ் இந்த கட்டடம் உதயமாகிறது. மலேசிய இந்திய எதிர்கால சந்ததியினருக்கு ஓர் ஊன்று கோலாக இந்த புதிய கட்டடம் அமையும். இந்த கட்டடம் ம.இ.காவின் அடையாளமாக மட்டுமில்லாமல் ஒட்டு மொத்த இந்திய சமுதாயத்தின் அடையாள சின்னமாக விளங்கும். இந்த புதியதொரு முயற்சி நம் அடுத்த தலைமுறைக்குப் பல வழிகளில் உறுதுணையாக இருக்கும் என்பதிலும் ஐயமில்லை.

ம.இ.கா முன்னாள் தேசிய தலைவர்கள்

  1. முதல் தேசிய தலைவர் திரு. ஜோன் திவி/ MR. John Thivy (1946-1947)
  2. இரண்டாவது தேசிய தலைவர் திரு. சர்தார் பூத் சிங் / MR. Sardar Budh Singh (1947-1950)
  3. மூன்றாவது தேசிய தலைவர் திரு. இராமநாதன் செட்டியார் / Mr.K.Ramanathan Chettiar [1950-1951]
  4. நான்காவது தேசிய தலைவர் திரு. கே. எல். தேவாசர்/ Mr.K.L.Devaser (1951-1955)
  5. ஐந்தாவது தேசிய தலைவர் துன் வீ. தி. சம்பந்தன் / Tun V. T. Sambanthan (1955-1973)
  6. ஆறாவது தேசிய தலைவர் தான்ஸ்ரீ வெ.மாணிக்கவாசகம் / Tan Sri Manickavasagam (1973-1979)
  7. ஏழாவது தேசிய தலைவர் துன் ச.சாமிவேலு / Tun Samy Vellu (1979 -2010)
  8. எட்டாவது தேசிய தலைவர் டத்தோஸ்ரீ ஜி. பழனிவேல் / Datuk Seri G. Palanivel (2010-2014)
  9. ஒன்பதாவது தேசிய தலைவர் தான்ஸ்ரீ டத்தோஸ்ரீ டாக்டர் எஸ். சுப்ரமணியம் / Tan Sri, Datuk Seri Dr. S. Subramaniam (2014-Julai 2018)
  10. பத்தாவது தேசிய தலைவர் தான்ஸ்ரீ டத்தோஸ்ரீ ச. விக்னேஸ்வரன் / Tan Sri S. A. Vigneswaran (2018-2023 Current)