Home நாடு “நாட்டை உருவாக்கிய தியாகத் தலைவர்களை நினைவில் கொள்வோம்”- விக்னேஸ்வரன் தேசிய தின வாழ்த்து

“நாட்டை உருவாக்கிய தியாகத் தலைவர்களை நினைவில் கொள்வோம்”- விக்னேஸ்வரன் தேசிய தின வாழ்த்து

458
0
SHARE
Ad

தேசிய தினத்தை முன்னிட்டு
மஇகா தேசியத் தலைவர்
டான்ஸ்ரீ ச.விக்னேஸ்வரன்
வாழ்த்துச் செய்தி 

“நாட்டை உருவாக்கிய தியாகத் தலைவர்களை என்றும் நினைவில் கொள்வோம்” 

நமது நேசத்திற்கும் பாசத்திற்கும் உரிய தாய்நாடாம் மலேசியாவின் தேசிய தினத்தில் அனைத்து மலேசியர்களுக்கும் எனது தேசிய தின நல்வாழ்த்துகளைத் தெரிவித்துக் கொள்வதில் பெருமகிழ்ச்சி கொள்கிறேன்.

சுதந்திரக் காற்றை முழுமையாக அனுபவித்துக் கொண்டு நாம் கொண்டாடிக்  கொண்டிருக்கும் இன்றைய சுதந்திரத்தைப் பெறவும், நாட்டில் இன்று நான் எல்லாவித வசதிகளுடன் வாழக் கூடிய சூழலை ஏற்படுத்தவும் கடந்த காலங்களில் போராடிய எண்ணற்ற தலைவர்களின் தியாகங்களை நாம் எப்போதும் மறந்து விடக் கூடாது.

#TamilSchoolmychoice

அந்தத் தியாகங்களை இந்த வேளையில் நினைவு கூர்ந்து அவர்களுக்கு நன்றி தெரிவிப்பது சிறப்பானதும் பொருத்தமானதும் ஆகும். இனம், மதம் பாராமல் பல தலைவர்களும், நமது முன்னோர்களும் நமது நாட்டின் ஒற்றுமைக்காகவும் வளர்ச்சிக்காகவும் அயராது பாடுபட்டு செய்த தியாகங்களினால்தான் நாம் இன்றைய இன்பமாக சூழ்நிலையில் வாழ்ந்து கொண்டிருக்கிறோம்.

ஒரு கணம் நினைத்துப் பாருங்கள்! 1946-ஆம் ஆண்டுகளில் நமது மஇகா தொடங்கிய போதும், அம்னோ, மசீச போன்ற கட்சிகள் தங்களின் இனங்களின் பாதுகாப்புக்காகத் தொடங்கப்பட்டபோதும், நமது தலைவர்கள், எப்போது சுதந்திரம் கிடைக்கும்? நம்மால் அரசாங்கம் அமைக்க முடியுமா? அமைச்சராக முடியுமா? என்பது போன்ற கேள்விகளுக்கு விடை தெரியாமலேயே சமுதாயத்திற்காகவும் நாட்டிற்காகவும் தங்களை அர்ப்பணித்துக் கொண்டார்கள். போராடினார்கள்.

பிரதிபலன் பாராமல் அவர்கள் காட்டிய உழைப்பு, அர்ப்பண உணர்வு, தன்னம்பிக்கை, பிரிட்டிஷாருக்கு அஞ்சாமல் நடத்திய போராட்டங்கள் – ஆகியவற்றின் காரணமாகவே நமக்கு சுதந்திரம் கிடைத்தது. இன்று அந்த சுதந்திர நாளை மெர்டேக்கா எனக் கொண்டாடுகிறோம்.

பல இன மக்களும் ஒருங்கிணைந்து போராடியதால்தான் நம்மால் சுதந்திரம் பெற முடிந்தது என்பது வரலாற்று உண்மை. அந்தப் போராட்டத்தில் இந்திய சமூகத்தின் சார்பில் மஇகாவும் முக்கிய பங்கு வகித்தது என்பதையும் இந்த வேளையில் பெருமையுடன் நினைவுகூர விரும்புகிறேன். அன்று நிலவிய அந்த ஒற்றுமை உணர்வு இப்போது சற்று குறைந்து விட்டது போல் தோன்றுகிறது. அதனை மீண்டும் உயிர்ப்பிக்க, நாம் அனைவரும் மலேசியர்கள் என்ற உணர்வோடு ஒருங்கிணைந்து போராட வேண்டும்.

அதற்கேற்பவே, நமது ஒற்றுமை அரசாங்கத்தின் பிரதமர் டத்தோஸ்ரீ அன்வார் இப்ராகிமும் மலேசியா மதானி என்ற சித்தாந்தத்தை அறிமுகப்படுத்தி அதற்கேற்ப அனைத்து மலேசியர்களும் பலன் பெறும் வண்ணம் செயலாற்றி வருகிறார்.

இந்த ஆண்டுக்கான தேசிய தினத்தை முன்னிட்டு வழங்கிய உரையிலும் அனைத்து மலேசியர்களையும் நாங்கள் பாதுகாப்போம் என்ற நம்பிக்கையான உறுதி மொழியை வழங்கியிருக்கிறார். எல்லா நிலைகளிலும் மக்களுக்கு சமசீரான மேம்பாடுகள் சென்றடைவதை தமது அரசாங்கம் உறுதி செய்யும் என்றும் கூறி எதிர்காலம் குறித்த நம்பிக்கையை நம்மிடையே ஏற்படுத்தியிருக்கிறார்.

எனவே, டத்தோஸ்ரீ அன்வாரின் செயல்பாடுகள் வெற்றியடைய நாம் அனைவரும் அவருக்கு துணை நிற்போம்.

இந்த தேசிய தினத்தில் இனம், மதம் கடந்து அனைவரும் மலேசியர்களாக இந்நாட்டில் மகிழ்ச்சியோடும், செல்வச் செழிப்போடும் வாழ்வதற்கு உறுதி பூணுவோம்.

அனைவருக்கும் இனிய தேசிய தின வாழ்த்துகள்.

தான்ஸ்ரீ டத்தோஸ்ரீ ச.விக்னேஸ்வரன்
தேசியத் தலைவர்
மலேசிய இந்தியர் காங்கிரஸ்

30 ஆகஸ்ட் 2023