டத்தோ ஸ்ரீ டாக்டர் எம்.சரவணன் அவர்களின் 66ஆவது சுதந்திர தின வாழ்த்துச் செய்தி
மலேசியாவிலும், மலேசியர்கள் எனும் அடையாளத்துடன் உலகில் வெவ்வேறு இடங்களிலும் வாழும் மலேசியர்கள் அனைவருக்கும் 66ஆவது சுதந்திர தின நல்வாழ்த்துகள்.
மேன்மை மிகு மலேசியாவை உருவாக்க மலேசியர்கள் அனைவரும் உறுதியான ஒற்றுமையுடனும், நிறைவான நம்பிக்கையுடனும் இருப்பது அவசியம். இதுவே இந்த வருட சுதந்திர தின கருப்பொருளாக இருக்கிறது.
நம்மிடையே ஒற்றுமை மற்றும் நல்லிணக்கம் என்ற பிணைப்பு நிலைத்திருக்க ஒருவருக்கொருவர் விட்டுக்கொடுத்து, புரிந்துணர்வோடு ஒன்று பட்டு வாழ வேண்டும். ஒற்றுமையாக இருக்கும் மக்கள் மத்தியில் அமைதியும், சுபீட்சமும் நிலைத்திருக்கும். இதன் வழி ஆட்சியாளர்கள் பொருளாதார மேம்பாட்டில் அதிகக் கவனம் செலுத்தி மக்களின் வாழ்க்கைத் தரத்தையும் மேம்படுத்த முடியும்.
மலேசியாவிற்குச் சுதந்திரம் கிடைத்ததில் பல்லின மக்களின் ஒற்றுமையும் ஒரு முக்கியக் கூறு என்பதை நாம் மறந்துவிடக்கூடாது. ஒன்று கூடிப் போராடிப் பெற்ற வெற்றி என்பதை அடுத்த தலைமுறைக்கு எடுத்துரைக்க வேண்டியது நமது கடமை. அவர்கள் மனதில் பசுமரத்தாணி போல் இது பதிய வேண்டும்.
இந்தியர்கள் அனைவரும் ஒற்றுமையாக இல்லாமல் பிளவுபட்டு இருந்தால் நமக்குதான் நஷ்டம். தெளிவான சிந்தனையுடன் சிந்திப்போம், செயல்படுவோம். நமக்குள்ளேயே ஒருவரை ஒருவர் கைநீட்டி குறை சொல்வதை விடுத்து ஆக்கப்பூர்வமான, மேன்மையடைந்த இந்திய சமுதாயம் உருவாக வலுவான திட்டங்கள் வகுப்போம்.
மலேசியா என்பது பல மதங்களின், பல இனங்களின், பல மொழிகளின், பல கலாச்சாரங்களின் ஒன்றியமாக இருக்கிறது. இருப்பினும், ‘மலேசியர்கள்’ என்ற அடிப்படையில் நாம் அனைவரும் ஒன்றுபடுகிறோம். வேற்றுமையில் ஒற்றுமை என்பதே நம் நாட்டின் தனித்தன்மையாகவும் இருக்கிறது.
“ஒன்றுபட்டால் உண்டு வாழ்வு –
நம்மில் ஒற்றுமை நீங்கிடில்
அனைவர்க்கும் தாழ்வு” – பாரதி
மெர்டேக்கா மெர்டேக்கா மெர்டேக்கா!
அன்புடன்,
டத்தோ ஸ்ரீ டாக்டர் எம்.சரவணன்
தாப்பா நாடாளுமன்ற உறுப்பினர்
ம.இ.கா தேசியத் துணைத்தலைவர்