சிங்கப்பூர் – அண்மையில் சிங்கைப் பிரதமர் லீ சியன் லுங் எதிர்நோக்கிய உடல்நலக் குறைவைத் தொடர்ந்து, சிங்கப்பூரின் அடுத்த பிரதமராவதற்கான தகுதிகள், திறமைகள் வாய்ந்த தலைவர்கள் யார் என்பது குறித்த விவாதங்கள் மக்களுக்கிடையிலும், ஊடகங்களுக்கிடையிலும் எழுந்துள்ளன.
தற்போது துணைப் பிரதமராக சிறப்பாக பணியாற்றிக் கொண்டிருக்கும் தர்மன் சண்முகரத்னம் அடுத்த பிரதமராவதற்கான தகுதிகள் வாய்ந்தவர் என சில ஊடகங்கள் அண்மையில் தெரிவித்திருந்தன.
ஆனால், பிரதமருக்கான வேட்பாளர் நானில்லை என தர்மன் திட்டவட்டமாக மறுத்துள்ளார்.
“இதுபோன்ற பேச்சுகள் பரவி வருகின்றன. ஆனால் அனைவருக்கும் தெளிவாக ஒன்றைத் தெரிவித்துக் கொள்கின்றேன். பிரதமர் ஆவதற்கான ஆள் நான் கிடையாது. என்னைப் பற்றி எனக்கு நன்றாகத் தெரியும். என்னால் என்ன செய்ய முடியும் என்பது எனக்குத் தெரியும். நான் பிரதமருக்கான தகுதி வாய்ந்த ஆள் கிடையாது” என பணிவுடனும், உறுதியுடனும் தர்மன் மறுத்துள்ளார்.
“நான் கொள்கை வகுப்பதில் திறமை வாய்ந்தவன்தான். என்னைவிட இளையத் தலைவர்களுக்கு அறிவுரை வழங்குவதிலும், பிரதமராக இருப்பவருக்கு ஆதரவு தெரிவிப்பதிலும் நான் சிறப்பாக, திறமையாக செயல்படக் கூடியவன்தான். ஆனால் நானே பிரதமர் என்பது முடியாது. அத்தகைய குறிக்கோளையும் நான் கொண்டிருக்கவில்லை. அந்த பதவிக்கான ஆள் நானில்லை” என்று இன்று சிங்கையில் நடந்த நிகழ்ச்சி ஒன்றில் கலந்து கொண்ட பின்னர் பத்திரிக்கையாளர்களிடம் தர்மன் தெரிவித்துள்ளார்.