Home Featured தமிழ் நாடு “சிகரத்தை அடைந்தபோதும் அடிவாரத்தை மறக்காதவர் எஸ்.ஆர்.நாதன்” – கவிஞர் வைரமுத்து இரங்கல்

“சிகரத்தை அடைந்தபோதும் அடிவாரத்தை மறக்காதவர் எஸ்.ஆர்.நாதன்” – கவிஞர் வைரமுத்து இரங்கல்

769
0
SHARE
Ad

vairamuthu9-600

சென்னை – சிங்கப்பூரின் முன்னாள் அதிபர் எஸ்.ஆர்.நாதனின் மறைவுக்கு கவிஞர் வைரமுத்து தனது இரங்கலைத் தெரிவித்துள்ளார்.

“சிங்கப்பூரில் தமிழர்களின் தலைமை அடையாளமாகத் திகழ்ந்த பெருமகன் எஸ்.ஆர்.நாதன். அவரது மறைவுச் செய்தி கேட்டு உள்ளம் உடைந்து போனேன். சிங்கப்பூர் அதிபராக இரண்டு முறை தேர்ந்தெடுக்கப்பட்ட பெருமைக்குரியவர். சிங்கப்பூரைக் கட்டியமைத்த ஆட்சிப் பணியாளர்கள் பத்துப் பேரில் ஒருவர். எளிமையே அவரது வாழ்வு. மக்கள் தொடர்பே அவரது மாண்பு” எனவும் தனது இரங்கல் செய்தியில் வைரமுத்து புகழாரம் சூட்டியுள்ளார்.

#TamilSchoolmychoice

“சிகரத்தை அடைந்தபோதும் அடிவாரத்தை மறக்காதவர். ‘அதிபர் அறநிதி’ என்ற ஒன்றை ஏற்படுத்தி நூறு மில்லியன் டாலர் திரட்டி அதை அடித்தட்டு மக்களின் கல்விக்குக் கொடைகொடுத்த சமூகச் சிந்தனையாளர்” என்றும் நாதனைப் பாராட்டியுள்ள வைரமுத்து, தனது பாடல்களை அவர் இரசித்ததையும் நினைவு கூர்ந்துள்ளார்.

“அவரது நட்பைப் பெற்றது எனக்குப் பெரும்பேறு. உங்கள் பாடல்களில் எனக்குப் பிடித்தது ‘தஞ்சாவூரு மண்ணு எடுத்து’ என்று என்னிடம் ஒருமுறை சொன்னார். ஏன் என்று கேட்டேன். “என் பூர்வீகம் தமிழ்நாடு. ஆனால் எந்த ஊர் என் சொந்த ஊர் என்று எனக்குத் தெரியாது. உங்கள் பாடலைக் கேட்கும்போதெல்லாம் இந்த ஊர்களில் ஒன்று என் சொந்த ஊராக இருக்குமோ என்று என் நெஞ்சம் பரவசம் அடைகிறது” என்றார்” என வைரமுத்து நாதனைப் பற்றி நினைவு கூர்ந்துள்ளார்.

“சிங்கப்பூர் ஒரு தலைசிறந்த தலைவரை இழந்துவிட்டது. சிங்கப்பூர்த் தமிழர்கள் தங்கள் அடையாளத்தை இழந்து நிற்கிறார்கள். அவரை இழந்து வாடும் அனைவருக்கும் என் ஆழ்ந்த இரங்கலைத் தெரிவித்துக்கொள்கிறேன். ‘நாதன் தாள் வாழ்க’ என்று நாயன்மார்கள் வணங்குவதைப்போல ‘நாதன் புகழ் வாழ்க’ என்று அவரை வணங்குகிறேன்” என்றும் வைரமுத்து தனது இரங்கல் செய்தியில் தெரிவித்துள்ளார்.