கோலாலம்பூர் – ‘மலேசியாவின் முதல்நிலை அதிகாரியைக் கைது செய்யுங்கள்’ என்ற முழக்கத்துடன் நடைபெற்ற ‘தங்காப் MO1’ என்ற 1எம்டிபி எதிர்ப்புப் பேரணி நேற்று சனிக்கிழமை மாலையுடன் கோலாலம்பூரில் நிறைவு பெற்றது.
பெரும்பாலான மாணவர்கள் கலந்து கொண்ட இந்த பேரணி எந்தவித அசம்பாவிதமும் இன்றி நடைபெற்ற நிலையில், பேரணி முடிவில் பிரதமர் நஜிப்பின் உருவ பொம்மை கொண்ட கொடும்பாவி எரிப்பும் நடைபெற்றது.
நஜிப்பின் உருவ அமைப்பைப் போன்ற பெரிய அளவிலான கொடும்பாவியையும் மற்றும் அவரது மனைவி ரோஸ்மா மன்சோர், ரோஸ்மா மகன் ரிசால் அசிஸ், வணிகர் ஜோ லோ ஆகியோரின் கொடும்பாவிகளையும் கொண்டு சென்று, அந்த கொடும்பாவி உருவங்கள் சிறைக் கம்பிகளுக்குள் இருப்பது போன்று சித்தரித்து பின்னர் அந்த கொடும்பாவிகளை ஆர்ப்பாட்டக்காரர்கள் எரித்தனர்.
பிற்பகல் 2.00 மணியளவில் கோலாலம்பூரின் டத்தாரான் மெர்டேக்கா சதுக்கம், சோகோ வணிக வளாகம், தேசிய பள்ளி வாசல் ஆகிய பகுதிகளில் தொடங்கி, ஆயிரக்கணக்கான மக்கள் திரண்ட இந்தப் பேரணி மாலை 4.30 மணியளவில் முடிவுக்கு வந்தது.
விரைவில் மிகப் பிரம்மாண்டமான அளவில் நடைபெறவிருக்கும் ‘பெர்சே 5.0’ பேரணிக்கு முன்னோட்டமாக நேற்றைய பேரணி பார்க்கப்படுகின்றது.
‘மெர்டேக்கா! மெர்டேக்கா!’ என்ற முழக்கங்களுடனும், ‘அடுத்து பெர்சே 5.0’ பேரணியில் சந்திப்போம் என்ற அறிவிப்புகளுடனும் பேரணியில் கலந்து கொண்டவர்கள் இறுதியில் கலைந்து சென்றனர்.