கோலாலம்பூர் – உலகத் தமிழ்த் தகவல் தொழில்நுட்ப மன்றம் (உத்தமம் http://www.infitt.org) 1999-ம் ஆண்டு இலாப நோக்கற்ற நிறுவனமாக, அமெரிக்காவின் கலிபோர்னியா மாகாணத்தில் பதிவு செய்யப்பட்ட ஒரு உலகளாவிய அமைப்பாகும்.
சிறப்பு நுட்பியல் நுண்ணறிவும், தொழில் வல்லமையும் பெற்ற தன்னார்வத் தொண்டர்கள் பலரின் விடாமுயற்சியால் 1990-களின் இறுதியிலிருந்து தமிழ்க்கணிமைத் துறையை வளர்க்கும் பணியில் இவ்வமைப்பு இயங்கிவருகிறது.
சுவிட்சர்லாந்து, ஐக்கிய நாடுகள், ஜெர்மனி, பிரான்ஸ், அமெரிக்கா, கனடா, ஆஸ்திரேலியா, சிங்கப்பூர், மலேசியா, இலங்கை, இந்தியா உள்ளிட்ட பல்வேறு நாடுகளைச் சேர்ந்தோர் உத்தமம் நிறுவனத்தின் உறுப்பினராவர்.
தமிழ் இணைய மாநாடு 2016
தமிழும் அறிவார்ந்த பொருட்களுக்கான இணையமும், அச்சு, புகைப்பட மற்றும் ஓலைச்சுவடிகளுக்கான எழுத்துணர்வி தொழில்நுட்பம், மருத்துவத் துறைக்கான தமிழ்கணிமை தொழில்நுட்பங்கள், கணினி உதவியுடன் தமிழ்கற்றல், இயல்மொழி உருவாக்கம், அலைபேசித் தொழில்நுட்பம், பெருந்தரவகம் (BigData) போன்ற கருப்பொருட்களில் நாளை செப்டம்பர் 9 தொடங்கி 11-ம் தேதி வரையில் மூன்று நாட்கள் திண்டுக்கல் காந்திகிராம கிராமியப் பல்கலைக்கழகத்தில் நடைபெறவிருக்கும் இம்மாநாடு ஆய்வுக் கருத்தரங்கு, கண்காட்சி அரங்கு, மக்கள் அரங்கு எனும் மூன்று பிரிவுகளாக நடத்தப்படும்.
கணினியில் தமிழ், கையடக்கக் கருவிகள், வலைப்பயன்பாடு போன்றவற்றை ஊக்குவித்து மாணவர் திறன்களை வளர்க்கும் வகையில் பல போட்டிகளையும், சவால்களையும் உருவாக்கும் திட்டங்கள் இம்மாநாட்டின் ஒரு பகுதியாகும்.
மக்கள் அரங்கம்
பொதுமக்களுக்கும், மாணவர்களுக்கும் அலைபேசிகளுக்கான குறுஞ்செயலி உருவாக்கும் பயிற்சி, இணையம் சார்ந்த பயிற்சி, மொழியியல், மேகக்கணிமை தொழில்நுட்பம், மற்றும் வலைப்பதிவு உருவாக்கம், கணினி சார்ந்த பயிற்சிகள் கொடுக்கப்படவுள்ளன.
கண்காட்சி
சிறு குழந்தைகள், பாலர் பள்ளியிலிருந்து பல்கலைக் கழகம் வரை எல்லோரும் பயன்பெறும் வகையில் பலகைக் கணினி முதல் அனைத்துக் கருவிகளும் தமிழ்க் கருப்பொருளுடன் விற்பனைக்குக் கிடைக்கும். தமிழ்ச்சமூகம் பெருமளவு பயன்பெறப் பல்லூடகக் கருவிகள் அறிமுகப்படுத்தப்படும். கண்காட்சி மையத்தில் சுமார் 50 விற்பனையாளர் தமிழ்கற்க உதவும் ஒலிக் குறுவட்டு, காணொளிக் குறுவட்டு, தமிழ்கற்க உதவும் நூல்கள், கண்ணொளி இழந்தோர் தமிழ் கற்பதற்கான பிரெயில் புத்தகங்கள், இவை அனைத்தின் வளர்ச்சி பற்றிய நூல்களின் தொகுப்பு ஆகியவை பொது மக்களைச் சென்றடையும் வகையில் வழங்கவிருக்கிறார்கள்.
இதுவரை நடந்த தமிழ் இணைய மாநாடுகள் விபரம்
1.முதல் தமிழ் இணைய மாநாடு – 1997 ஆம் ஆண்டு – சிங்கப்பூர்.
2.இரண்டாம் தமிழ் இணைய மாநாடு – 1999 ஆம் ஆண்டு சென்னை, தமிழ்நாடு, இந்தியா.
3.மூன்றாம் தமிழ் இணைய மாநாடு – 2000 ஆம் ஆண்டு – சிங்கப்பூர்.
4.நான்காம் தமிழ் இணைய மாநாடு – 2001 ஆம் ஆண்டு – கோலாலம்பூர், மலேசியா.
5.ஐந்தாம் தமிழ் இணைய மாநாடு – 2002 ஆம் ஆண்டு – சான் பிரான்சிசுகோ, அமெரிக்கா.
6.ஆறாம் தமிழ் இணைய மாநாடு – 2003 ஆம் ஆண்டு – சென்னை, தமிழ்நாடு, இந்தியா.
7.ஏழாம் தமிழ் இணைய மாநாடு – 2004 ஆம் ஆண்டு – சிங்கப்பூர்.
8.எட்டாம் தமிழ் இணைய மாநாடு – 2009 ஆம் ஆண்டு – கொலோன், செருமனி.
9.ஒன்பதாம் தமிழ் இணைய மாநாடு – 2010 – கோயம்புத்தூர், தமிழ்நாடு,
10.பத்தாவது தமிழ் இணைய மாநாடு – 2011 ஆம் ஆண்டு – பிலடெல்பியா, பென்சில்வேனியா, அமெரிக்கா.
11.பதினொன்றாவது தமிழ் இணைய மாநாடு – 2012 ஆம் ஆண்டு – சிதம்பரம், தமிழ்நாடு, இந்தியா.
12.பன்னிரண்டாவது தமிழ் இணைய மாநாடு – 2013 ஆம் ஆண்டு – கோலாலம்பூர், மலேசியா.
13.பதின்மூன்றாவது தமிழ் இணைய மாநாடு – 2014 ஆம் ஆண்டு – புதுச்சேரி, இந்தியா.
14. பதினாலாவது உலகத் தமிழ் இணைய மாநாடு – 2015 ஆம் ஆண்டு – சிங்கப்பூர்.