(மலேசிய அரசியலில் எதிர்பாராத திருப்புமுனையாக நிகழ்ந்துள்ள மகாதீர்-அன்வார் கைகுலுக்கலால் ஏற்படப் போகும் அரசியல் மாற்றங்களை செல்லியல் நிருவாக ஆசிரியர் இரா.முத்தரசன் தனது பார்வையில் விவரிக்கின்றார்)
கோலாலம்பூர் – “அரசியலில் எதுவும் சாத்தியம்தான்! இன்றைய நண்பன் நாளைய பகைவன் – இன்றைய பகைவன் நாளைய நண்பன்” என்ற அரசியல் தாரக மந்திரம் மீண்டும் ஒருமுறை அரங்கேற்றம் கண்டிருக்கின்றது, முன்னாள் பிரதமர் துன் மகாதீர் – அன்வார் இப்ராகிம் சந்திப்பு – கைகுலுக்கல் என்ற காட்சி மாற்றங்களால்!.
சற்றுப் பின்னோக்கிப் பார்த்தால் –
1982ஆம் ஆண்டு பொதுத் தேர்தலுக்கு, முதன் முறையாக மகாதீர் முகமட் தலைமையில் அம்னோ-தேசிய முன்னணி தயாராகிக் கொண்டிருந்த காலகட்டம்!
1981-இல் துன் ஹூசேன் ஓன் பதவி விலகிய பின்னர் பிரதமராகப் பொறுப்பேற்ற மகாதீர், எத்தகைய மாற்றங்களைப் பொதுத் தேர்தலில் கொண்டு வருவார், மகத்தான வெற்றியைப் பதிவு செய்வாரா என மலேசிய அரசியல் உலகம் உன்னிப்பாகப் பார்த்துக் கொண்டிருந்த நேரம்.
35 வயது இளைஞரான அன்வார் இப்ராகிமை மகாதீர் அம்னோ அரசியல் வளையத்துக்குள் கொண்டு வந்த அந்தக் காட்சி…
1982-இல் நடந்த ஒரு பத்திரிக்கையாளர் சந்திப்பில் 35 வயதுடைய இளைஞர் ஒருவரை அறிமுகப்படுத்திய மகாதீர், இவர் அம்னோவில் இணைகிறார், பினாங்கு பெர்மாத்தாங் பாவ் நாடாளுமன்றத் தொகுதியில் போட்டியிடுகின்றார் என அறிவித்தார்.
அந்த இளைஞரின் பெயர் அன்வார் இப்ராகிம்.
இந்திய – சீன மக்களில் பெரும்பாலோருக்கு அவர் யாரென்றே அப்போது தெரிந்திருக்கவில்லை. யாரோ ஒரு சாதாரண ஆள் என்று நினைத்திருந்தார்கள். இளைஞர் அமைப்புகளைச் சார்ந்தவர்களுக்கும், அரசியல் பார்வையாளர்களுக்கு மட்டும் அன்வாரின் பின்னணி ஓரளவுக்கு தெரிந்திருந்தது.
ஆனால், மலாய்-முஸ்லீம் சமூகத்தில் மிக அழுத்தமான அதிர்வுகளை ஏற்படுத்தியது அன்வார் அம்னோவில் இணைகின்றார் என்ற அறிவிப்பு.
அன்று அரசியல் குரு-மாணவனாக இருந்த நெருக்கம்…
மலாயாப் பல்கலைக் கழக மாணவர் போராட்டம், அதற்காக ஐஎஸ்ஏ என்ற உள்நாட்டுப் பாதுகாப்புச் சட்டத்தின் கீழ் இரண்டு வருடங்கள் சிறைவாசம், யாயாசான் அண்டா (Yayasan Anda) என்ற மலாய் மாணவர்களுக்கு இலவசக் கல்வி போதிக்கும் மையங்கள், அபிம் (Angkatan Belia Islam Malaysia-ABIM) என்ற வலுவான கட்டமைப்பைக் கொண்டிருந்த முஸ்லீம் இளஞர் அமைப்பின் தலைவர் எனப் பல மலாய் – முஸ்லீம் சமூகப் பின்னணிகளைக் கொண்டிருந்த அன்வார் இப்ராகிமை அம்னோவில் இணைத்தது மகாதீரின் மிகப் பெரிய அரசியல் சாதுரியமாகவும், வியூகமாகவும் அப்போது பார்க்கப்பட்டது.
அதுமட்டுமல்லாமல், தனது இஸ்லாமியப் பின்னணி காரணத்தால், அரசியல் என்று வந்தால் அன்வார் பாஸ் கட்சியில்தான் சேருவார் என அவரது ஆதரவாளர்களும், மலாய் சமூகத்தினரும் நினைத்துக் கொண்டிருந்த நேரத்தில், அவரை அம்னோவுக்குள் மகாதீர் கொண்டு வந்தது மலாய் அரசியல் வரலாற்றின் மிக முக்கியமான திருப்புமுனையாக இன்று வரை பார்க்கப்படுகின்றது.
அன்று தொடங்கிய மகாதீர்-அன்வார் இணைப்பு, அதன்பின்னர் அரசியல் குரு-மாணவர் என்ற ரீதியில் வலுவான பிணைப்புகளை கண்டது. ஆனால், 1998 முதல் இருவருக்கும் இடையில் நடந்த அரசியல் போராட்டங்கள் அனைவரும் அறிந்ததுதான்.
மீண்டும் இணைவதால் மாற்றம் ஏற்படுமா?
இன்று இரு துருவங்களாக – அரசியலில் பரம வைரிகளாக இருந்தாலும், காலத்தின் கட்டாயத்தால், அரசியல் நிர்ப்பந்தத்தால் இணைய வேண்டிய நிலைமை…
மகாதீரின் அரசியல் வாழ்க்கையைத் திரும்பிப் பார்த்தால், தான் எடுத்துக் கொண்ட முடிவை செயல்படுத்த எந்த எல்லைக்கும் செல்லக் கூடியவர் அவர் என்பது புலனாகும். தெளிவான, தீர்க்கமான கண்ணோட்டத்துடன் கட்டம் கட்டமாக அடியெடுத்து வைத்து தனது அரசியல் எதிரிகளை அவர் ஒழித்துக் கட்டிய வரலாறுகளின் ஈரம் இன்னும் காயவில்லை.
அதனால் பாதிக்கப்பட்டவர்களின் இதயங்களில் ஏற்பட்ட காயங்கள் இன்னும் ஆறவில்லை. அன்வார் இப்ராகிமே அதற்கு சிறந்த உதாரணம்!
அந்த வகையில் இன்றைய அரசியல் சூழ்நிலையில் நஜிப்பை வீழ்த்துவது ஒன்றையே தனது வாழ்வின் இறுதிக் கட்ட போராகக் கொண்டு களம் இறங்கியுள்ள மகாதீர், அதற்காக அன்வாரின் தனிப்பட்ட செல்வாக்கு – அவரது கட்சியினரின் ஆதரவு இரண்டையும் பயன்படுத்தப் பார்க்கின்றார்.
அன்வாருக்கோ, வயதாகிக் கொண்டே போவதால், சிறையில் இருப்பதால், அவருக்கு இன்றைய தேவை, வெளியிலிருந்து அம்னோ-தேசிய முன்னணிக்கு எதிராகப் போராட, தனக்கு நிகரான ஓர் ஆயுதம்!
அதன்மூலம், ஆட்சி மாற்றம் ஏற்பட்டு, தனது விடுதலையும் சாத்தியமாகலாம் என்பது அவரது வியூகம்.
பாஸ் கட்சி பக்காத்தானில் இருந்து விலகியது, பார்ட்டி அமானா நெகாரா என்ற கட்சியாகப் பிளவுபட்டது போன்ற அரசியல் மாற்றங்களால், சோகையிழந்து சோர்வு கண்டிருக்கும் எதிர்க்கட்சி அரசியல் முகாமுக்கு கிடைத்திருக்கும் புதிய இரத்தம், மகாதீர்-மொய்தீன்-ஷாபி அப்டால் கூட்டணி!
இவர்களால் – இந்தப் புதிய கூட்டணியால், மலாய் வாக்குகள் அடுத்த பொதுத் தேர்தலில் நான்கு பிரிவுகளாகப் பிளவுபடும் என எதிர்பார்க்கப்படுகின்றது.
நான்கு பிரிவுகளாகப் பிரியப் போகும் மலாய் வாக்குகள்
அம்னோ ஒரு பகுதி மலாய் வாக்குகளைத் தக்கவைத்துக் கொள்ளும் நிலையில், பாஸ் கட்சியும் தனக்குரிய பாரம்பரிய வாக்குகளை – குறிப்பாக கிளந்தான்-திரெங்கானு மாநிலங்களில் தக்க வைத்துக் கொள்ளும்.
அமானா கட்சி-பிகேஆர் இணைந்த பக்காத்தான் கூட்டணி இன்னொரு மலாய் பிரிவினரின் வாக்குகளைக் கைப்பற்றும்.
இறுதியாக, மகாதீர்-மொய்தீன் கூட்டணி எஞ்சிய மலாய் வாக்குகளைத் தனதாக்கிக் கொள்ள முடியும். முக்கியமாக எழுகின்ற – யாராலும் இப்போதைக்கு பதில் சொல்ல முடியாத – கேள்வி இவர்கள் எடுக்கப் போவது அம்னோவிலிருந்து புதிதாக – நஜிப்புக்கு எதிராகப் பிரியப் போகின்ற வாக்குகளையா – அல்லது ஏற்கனவே இருக்கின்ற பாஸ்-பிகேஆர்-அமானா போன்ற எதிர்க்கட்சி மலாய் கட்சிகளின் வசமுள்ள ஆதரவு வாக்குகளையா என்பதுதான்!
இதில் மகாதீர் கூட்டணி அன்வாரின் பிகேஆர் மற்றும் அமானா கட்சிகளின் கூட்டணியோடு இணையும்போது, ஏற்கனவே அதில் இணைந்திருக்கும் ஜசெகவின் பலத்தோடு சேர்த்து மாபெரும் – அசுர பலம் கொண்ட கூட்டணி ஒன்று அரசியல் அரங்கில் உதயமாகும் என்பதையும், அதனை யாரும் குறைத்து மதிப்பிட முடியாது என்பதையும் அனைவரும் உணர்ந்திருக்கின்றார்கள்.
கால ஓட்டத்தில் அரசியல் நிலைமையை உணர்ந்து – ஹாடி அவாங் இல்லாத பாஸ் கட்சியும் இவர்களோடு இணைந்து விடக் கூடிய சாத்தியமும் மறுப்பதற்கில்லை.
மாபெரும் போர்க்களமாகுமா 14-வது பொதுத் தேர்தல்?
நஜிப் பதவி விலகுவாரா? – அதனால் மகாதீர் போராட்டத்தைக் கைவிடுவாரா?
ஆக, நடக்கப் போகும் 14-வது பொதுத் தேர்தல் – 2013ஆம் ஆண்டின் 13-வது பொதுத் தேர்தலை விட – மாபெரும் போர்க்களமாக, ‘இரத்தக் களரியாக’ இருக்கும் என்பது திண்ணம்!
இடையில், இரண்டு கேள்விகளுக்கு விடை தரும் வண்ணம் அரசியல் காட்சிகள் அரங்கேறினால், மலேசிய அரசியல் களமும் எதிர்பாராத மேலும் சில திருப்பு முனைகளைக் காணும்.
ஒன்று, அன்வார் சிறைக்குள்ளேயே இருக்கும் நிலையில், 14-வது பொதுத் தேர்தல்வரை, அரசியல் போராட்டத்தைத் தலைமை தாங்கிச் செல்ல மகாதீரின் 90-வயதைத் தாண்டிய உடல் நலம் இடம் கொடுக்குமா என்ற கேள்வி!
14-வது பொதுத் தேர்தலுக்கு முன்பாக நஜிப் துன் ரசாக், சாஹிட் ஹாமிடிக்கோ, ஹிஷாமுடின் ஹூசேன் ஓனுக்கோ பிரதமர் பதவியை விட்டுக் கொடுத்துவிட்டு, பதவி விலகி விட்டால், அதன்பின்னர் மகாதீர்-மொய்தீன்-ஷாபி அப்டால் கூட்டணியின் அரசியல் பாதை என்னவாக இருக்கும் என்பது எழுகின்ற இரண்டாவது கேள்வி!
தொடர்ந்து இவர்கள் அம்னோவுக்கு எதிராகப் போராடுவார்களா – நஜிப் பதவி விலகலால் அவர்களின் எதிர்ப்புக் கனல் நீர்த்துப் போகும் சாத்தியமுண்டா – மீண்டும் அம்னோவுக்கே அவர்கள் திரும்பிவிட புதிய தலைமைத்துவம் சிவப்புக் கம்பளம் விரித்து வரவேற்பு கொடுக்குமா – என்பதைப் பொறுத்து 14வது பொதுத் தேர்தலுக்கான காட்சிகளின் வண்ணங்களும் மாறும்!
-இரா.முத்தரசன்