புத்ரா ஜெயா – அண்மைய சில நாட்களாக சுற்றுலாத் துறை அமைச்சர் டத்தோஸ்ரீ நஸ்ரி அசிஸ் விடுத்து வரும் சர்ச்சைக்குரிய விமர்சனங்களால் எழுந்துள்ள கருத்து மோதல்களை தேசிய முன்னணி தலைவர்கள் இனியும் தொடராமல் நிறுத்திக் கொள்ள வேண்டும் என மஇகா தேசியத் தலைவரும், சுகாதார அமைச்சருமான டத்தோஸ்ரீ டாக்டர் ச.சுப்ரமணியம் அறைகூவல் விடுத்துள்ளார்.
இதன் தொடர்பில் நேற்று அமைச்சரவைக் கூட்டத்திற்கு முன்பாக நஸ்ரியைச் சந்தித்து தனது அதிருப்தியையும், ஆட்சேபங்களையும் அவரிடம் தெரிவித்துள்ளதாகவும், நஸ்ரியின் கருத்துக்களால் மஇகாவினர் வருத்தம் கொண்டுள்ளனர் என்பதை அவரிடம் புலப்படுத்தியுள்ளதாகவும் டாக்டர் சுப்ரா நேற்று விடுத்த அறிக்கையொன்றில் தெரிவித்துள்ளார்.
இருப்பினும் மஇகா தலைவர்கள் யாரும் இதுகுறித்து அறிக்கைகள் விடவேண்டாம் எனக் கேட்டுக் கொண்டுள்ளதாகவும் குறிப்பிட்ட சுப்ரா, தேசிய முன்னணி உறுப்பியக் கட்சிகளின் அடிமட்ட உறுப்பினர்களிடையே தேவையற்ற பதற்றத்தை ஏற்படுத்தும் அறிக்கைகள், விமர்சனங்களை தேசிய முன்னணி தலைவர்கள் குறிப்பாக அமைச்சர்கள் தவிர்க்க வேண்டும் எனவும் கேட்டுக் கொண்டார். இதனால் தேசிய முன்னணியின் உணர்வுகள் பாதிக்கப்பட்டு, பிளவுகள்தான் ஏற்படும் எனவும் மேலும் அவர் கூறினார்.
“எனவே, பத்திரிக்கைகளின் வழியான கருத்து மோதல்களை நிறுத்திக் கொள்வதற்கு நாங்கள் முடிவு செய்துள்ளோம். இந்த சர்ச்சைகளால் தேசிய முன்னணிக்கு நன்மை எதுவும் விளையப் போவதில்லை. அதற்கு பதிலாக நமது சக்தியை தேசிய முன்னணியைப் பலப்படுத்துவதிலும், அடுத்த பொதுத் தேர்தலுக்குத் தயாராவதற்கும் பயன்படுத்திக் கொள்ள வேண்டும்” எனவும் சுப்ரா தனது அறிக்கையில் தெரிவித்துள்ளார்.