புதுடில்லி – மலேசியக் கோடீஸ்வரர் ஆனந்தகிருஷ்ணனின் மேக்சிஸ் நிறுவனம் பெரும்பான்மை பங்குகளைக் கொண்டிருக்கும் இந்தியாவின் ஏர்செல் நிறுவனம், அம்பானியின் நிறுவனமான ரிலையன்ஸ் கொம்யுனிகேஷன்சுடன் இணையவிருக்கின்றது.
இந்த இணைப்பு, இந்தியத் தகவல், தொலைத் தொடர்பு வணிகத்தில் மிகப் பெரிய இணைப்பாகப் பார்க்கப்படுகின்றது. ஏர் செல் நிறுவனத்தை ஆனந்தகிருஷ்ணனின் மேக்சிஸ் நிறுவனம் வாங்கியது தொடர்பில் இந்தியாவில் எழுந்துள்ள சர்ச்சைகள், வழக்குகளின் காரணமாக அவற்றிலிருந்து சுமுகமாக ஆனந்தகிருஷ்ணன் வெளியேறுவதற்கான வழியாகவும் இந்த இணைப்பு பார்க்கப்படுகின்றது.
இந்தியாவின் மிகப் பெரிய கோடீஸ்வரர் முகேஷ் அம்பானியின் இளைய சகோதரர் அனில்அம்பானியின் கட்டுப்பாட்டில் உள்ள நிறுவனம் ரிலையன்ஸ் கொம்யுனிகேஷன்ஸ் ஆகும்.
ஆனந்த கிருஷ்ணன் மலேசியாவின் இரண்டாவது மிகப் பெரிய கோடீஸ்வரர் ஆவார். அவரது கட்டுப்பாட்டில் உள்ள மேக்சிஸ் நிறுவனம் ஏர்செல் நிறுவனத்தில் 74 சதவிகிதப் பங்குகளைக் கொண்டுள்ளது.
இணைப்புக்குப் பின் உருவாகவிருக்கும் புதிய நிறுவனத்தில் இரு தரப்புகளும் தலா 50 சதவீதப் பங்குகளைக் கொண்டிருக்கும்.
இணைந்த புதிய நிறுவனம் ஏறத்தாழ 2.162 பில்லியன் ரிங்கிட் (இந்திய மதிப்பில் 35,000 கோடி ரூபாய்) சந்தை மதிப்பைக் கொண்டிருக்கும்.
ரிலையன்ஸ்-ஏர்செல் இணைப்புக்குப் பின், 190 மில்லியன் சந்தாதாரர்களைக் கொண்ட, இந்தியாவிலேயே இரண்டாவது பெரிய தகவல் தொடர்பு நிறுவனமாக புதிய இணைப்பு நிறுவனம் உருவெடுக்கும்.
அனில் அம்பானியின் (படம்) சகோதரர் முகேஷ் அம்பானியின் தலைமையில் இயங்கும் ரிலையன்ஸ் இண்டஸ்ட்ரீஸ் அண்மையில் ஜியோ 4-ஜி சேவைகளைத் தொடங்கி, மிக மலிவான கட்டணங்களை அறிவித்திருந்தது.
இதனைத் தொடர்ந்து ரிலையன்ஸ் கொம்யுனிகேஷன்ஸ்-ஏர்செல் நிறுவனங்களின் இணைப்பு அறிவிப்பு வெளியாகியிருக்கின்றது.
-இரா.முத்தரசன்