புதுடெல்லி – தமிழ்நாடு பாஜகவின் மூத்த தலைவர்களில் ஒருவரான இல.கணேசன் (படம்), மத்தியப் பிரதேச மாநிலத்தில் இருந்து மாநிலங்களவை நாடாளுமன்ற (ராஜ்யசபா) உறுப்பினராக நியமிக்கப்படவுள்ளார்.
மத்தியப் பிரதேசத்தில் பாஜக ஆட்சியில் இருப்பதால், இல.கணேசன் அங்கிருந்து தேர்ந்தெடுக்கப்படுகின்றார்.
மத்தியப் பிரதேச மாநிலத்தில் இருந்து நாடாளுமன்ற மேலவைக்கு ஏற்கனவே தேர்ந்தெடுக்கப்பட்டிருந்த 76 வயதான நஜ்மா ஹெப்துல்லா, நரேந்திர மோடியின் அமைச்சரவையில் இடம் பெற்றிருந்தார். கடந்த ஜூலை மாதத்தில் தனது அமைச்சர் பதவியிலிருந்து விலகிய அவர் பின்னர் ஆகஸ்ட் மாதத்தில் தனது நாடாளுமன்ற மேலவை உறுப்பினர் பதவியிலிருந்தும் விலகினார்.
இதனைத் தொடர்ந்து காலியான அந்தப் பதவிக்குத்தான் இல.கணேசன் பாஜக தலைமைத்துவத்தால் தேர்ந்தெடுக்கப்பட்டிருக்கின்றார்.
இதற்கிடையில் நஜ்மா ஹெப்துல்லா தற்போது மணிப்பூர் மாநில ஆளுநராக நியமிக்கப்பட்டுள்ளார்.
இல.கணேசன், தமிழக பாஜகவின் தலைவராகவும் ஏற்கனவே பணியாற்றியுள்ளார். தற்போது அந்தக் கட்சியின் தேசியக் குழு உறுப்பினராக பதவி வகிக்கின்றார்.
எதிர்வரும் அக்டோபர் 17-ஆம் தேதி நடைபெறவிருக்கும் இடைத் தேர்தலில் இல.கணேசன் தேர்ந்தெடுக்கப்பட்டால், அவர் 2018-ஆம் ஆண்டு வரை நாடாளுமன்ற மேலவை உறுப்பினராகப் பதவி வகிப்பார்.