தென்காசி – தென்காசி அருகே சர்க்கரை நோயைத் தீர்க்க நினைத்து, வைத்தியர் ஒருவரிடம் நாட்டு மருந்தை வாங்கிச் சாப்பிட்ட 2 பேர் பரிதாபமாக உயிரிழந்தனர். ஒருவர் கவலைக்கிடமான நிலையில் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.
அதோடு, தான் தயாரித்த நாட்டு மருந்தை தானே சாப்பிட்டு அந்த வைத்தியரும் உயிரை விட்டுள்ள சம்பவம் திருநெல்வேலி மாவட்டம் முழுவதும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
தென்காசி மலையான் தெருவை சேர்ந்தவர் முத்துப்பாண்டி (வயது50). நாட்டு வைத்தியரான இவர் தென்காசி அருகே உள்ள அழகப்பபுரம் பகுதியில் ஒரு தோட்டத்தில் நாட்டு மருந்து தயாரித்து வழங்கி வந்தார்.
வயிற்றுப் புண், இரத்த அழுத்தம், சர்க்கரை நோய் உள்ளிட்ட வியாதிகளுக்கு நாட்டு மருந்து தயாரித்து வழங்கி வந்தார். தென்காசியின் சுற்று வட்டாரப் பகுதிகளில் உள்ள பல்வேறு கிராமங்களை சேர்ந்தவர்கள் இவரிடம் மருந்து வாங்கி சாப்பிடுவது வழக்கம்.
நேற்று ஞாயிற்றுக்கிழமை காலை வழக்கம் போல் முத்துப் பாண்டியிடம் மருந்து சாப்பிடுவதற்காக பலர் வந்திருந்தனர்.
அப்போது சர்க்கரை நோய் குணமாகத் தான் தயாரித்து வைத்திருந்த மருந்தை அங்கிருந்த மூன்று பேருக்குக் கொடுத்த முத்துப்பாண்டி, தானும் உண்டதாகக் கூறப்படுகின்றது.
மருந்து சாப்பிட்ட சில நிமிடங்களில் முத்துப்பாண்டி மற்றும் 3 பேர் அங்கே மயங்கி விழுந்தனர்.
உடனடியாக அங்கிருந்தவர்கள் அவர்களை மீட்டு தென்காசி அரசு மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். ஆனால் செல்லும் வழியிலேயே நாட்டு மருத்துவர் முத்துப்பாண்டி உட்பட 3 பேர் பரிதாபமாக இறந்தனர்.
மேலும் ஒருவர் ஆஸ்பத்திரியில் கவலைக்கிடமான நிலையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகிறார். இந்த சம்பவம் குறித்து தென்காசி காவல்துறை வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.