உத்திர பிரதேசம் – குடும்பத் தகராறு காரணமாக உத்திர பிரதேசத்தில், ஆளுங்கட்சியான சமாஜ்வாதி இரண்டாக உடையும் நிலை ஏற்பட்டுள்ளது.
உத்திர பிரதேசத்தில் கடந்த 2012-ம் ஆண்டு நடைபெற்ற சட்டப்பேரவை தேர்தலில் முலாயம்சிங் தலைமையிலான சமாஜ்வாதி கட்சி மிகப்பெரிய வெற்றிபெற்று ஆட்சியை பிடித்தது.
அதனையடுத்து, முலாயம்சிங்கின் மகன் அகிலேஷ் யாதவ் முதலமைச்சர் பதவியில் அமர்ந்தார்.
இந்நிலையில், அகிலேஷ் யாதவ் கட்சிக்குள் செய்த மாற்றங்களால் அதிருப்தியடைந்த கட்சியின் முக்கிய தலைவர்களின் ஒருவரான முலாயம்சிங்கின் உடன்பிறந்த சகோதரர் சிவபால் யாதவ் அகிலேஷ் நடவடிக்கைகளுக்கு எதிர்ப்பு தெரிவித்து வந்தார்.
இதனால் முலாயம் குடும்பமே இரண்டாக பிளவுப்பட்டது. இந்நிலையில் சிவபால் உள்ளிட்ட 4 அமைச்சர்களை நீக்க அகிலேஷ் நடவடிக்கை எடுத்தார்.
இதனால் ஆவேசமடைந்த உத்திர பிரதேச மாநில சமாஜ்வாதி தலைவர் சிவபால் யாதவ், தனது சகோதரரும், அகிலேஷ் ஆதரவாளரான ராம்கோபால் யாதவ்வை கட்சியை விட்டு நீக்கி நடவடிக்கை எடுத்தார். அடுத்தடுத்து நிகழ்வுகளால் அகிலேஷ் மீது அவரது தந்தையும், சமாஜ்வாதி தலைவருமான முலாயம்சிங் கடும் அதிருப்தி அடைந்தார்.
இதனால் கோபமடைந்த அகிலேஷ், தனது தந்தையின் வீட்டை காலி செய்துவிட்டு அரசுக்கு சொந்தமான இல்லத்திற்கு இடம் பெயர்ந்தார். இதனிடையே புதிய கட்சி தொடங்கும் முடிவில் அகிலேஷ் இருப்பதாக அங்கிருந்து வரும் செய்திகள் தெரிவிக்கின்றன. இதனிடையே கட்சியில் இருந்து நீக்கப்பட்டுள்ள மூத்த தலைவர் ராம்கோபால் யாதவ், பாஜக தலைவர்களை சந்தித்து பேசியிருப்பது உத்திர பிரதேச அரசியலில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.