உன்னாவோ – உத்திரப்பிரதேச மாநிலத்தில் உள்ள உன்னாவோ பகுதியில் தனியார் மருந்தகம் ஒன்றை நடத்தி வந்த போலி மருத்துவர், காசை மிச்சப்படுத்த ஒரே ஊசியைப் பயன்படுத்தியதால், 40 பேருக்கு எச்ஐவி தொற்று ஏற்பட்டிருப்பதாகத் தகவல்கள் வெளிவந்திருக்கின்றன.
லக்னோவில் இருந்து 40 கிலோமீட்டர் தென்மேற்கில் அமைந்திருக்கும் உன்னாவோ மாவட்டத்தில் உள்ள பங்கார்மாவ் கிராமத்தில், ராஜேந்திர யாதவ் என்ற நபர் மருந்தகம் நடத்தி வந்திருக்கிறார்.
போலி மருத்துவர் என்று தெரியாமல் அவரிடம் அக்கிராமத்தைச் சேர்ந்த ஏழை எளிய மக்கள், தலைவலி, காய்ச்சல், வயிற்றுவலி போன்ற உபாதைகளுக்காக சிகிச்சை எடுத்து வந்திருக்கின்றனர்.
இந்நிலையில், அண்மையில் உத்திரப்பிரதேச சுகாதாரத்துறை அக்கிராமத்தில் மருத்துவக் குழுவை அனுப்பி இலவசமாக பரிசோதனைகளை மேற்கொண்டிருக்கிறது.
அப்போது, கடந்த ஆண்டை ஒப்பிடுகையில், புதிதாகப் பலருக்கு எச்ஐவி தொற்று ஏற்பட்டிருப்பதும், அவர்கள் அனைவரும் ஒரே கிராமத்தைச் சேர்ந்தவர்கள் என்பதும் கண்டறியப்பட்டிருக்கிறது.
இதனையடுத்து நடத்தப்பட்ட விசாரணையில், மருந்தகத்தில் ஒரே ஊசி பயன்படுத்தப்பட்டிருப்பது தெரியவந்திருக்கிறது.