கோலாலம்பூர் – டாமன்சாராவில் உள்ள வணிக வளாகம் ஒன்றின் கார் நிறுத்துமிடத்தில் நேற்று திங்கட்கிழமை பெண் ஒருவரை கொலை செய்துவிட்டு, சடலத்துடன் காவல்நிலையத்தில் சரணடைந்த 37 வயதான இந்திய ஆடவரை, 7 நாட்கள் தடுப்புக் காவலில் வைத்து விசாரணை செய்ய நீதிமன்றம் உத்தரவிட்டிருக்கிறது.
டி.தாரணி என்ற 37 வயதான பெண், தனது காதலி என்றும் கருத்து வேறுபாடு காரணமாக கொலை செய்துவிட்டதாகவும் கூறிய அந்த ஆடவர், அப்பெண்ணின் சடலத்துடன் நேற்று டாமன்சாரா காவல்நிலையத்தில் சரணடைந்தார்.
அவர் ஓட்டி வந்த காரில் ஓட்டுநர் இருக்கையின் அருகே உள்ள இருக்கையில், கழுத்தில் கூர்மையான ஆயுதத்தால் குத்தப்பட்ட நிலையில் இரத்த வெள்ளத்தில் தாரணி பிணமாகக் கிடந்தார்.
அவர் அருகே கொலை செய்யப் பயன்படுத்தியதாக நம்பப்படும் கூர்மையான ஆயுதமும் கிடந்தது.
இந்நிலையில், அப்பெண்ணின் உறவினர்கள் நேற்று இரவு சடலத்தை அடையாளம் காட்டிய பிறகு அளித்திருக்கும் வாக்குமூலத்தில், அந்த ஆடவர் தாரணியின் காதலர் அல்ல எனத் தெரிவித்திருக்கின்றனர்.
இதனையடுத்து, இன்று பெட்டாலிங் ஜெயா குற்றவியல் நீதிமன்றத்தில் நிறுத்தப்பட்ட அந்த ஆடவருக்கு, நீதிபதி 7 நாட்கள் தடுப்புக் காவலில் வைத்து விசாரணை செய்ய உத்தரவிட்டார்.