கோலாலம்பூர் – குழந்தைகளுக்கு ஒரே நாளில் இரண்டு தடுப்பூசிகள் போட வேண்டாம் என நாடெங்கிலும் உள்ள மருந்தகங்களுக்கு சுகாதார அமைச்சு அறிவுறுத்தியுள்ளது.
இது குறித்து சுகாதார அமைச்சின் துணை பொது இயக்குநர் டத்தோ டாக்டர் லோக்மான் ஹாகிம் சுலைமான் கூறுகையில், தேசிய நோய்த் தடுப்பூசி அட்டவணையில் இடப்பட்டுள்ள கால இடைவெளிப்படி ஒருநாளில் ஒரே ஒரு தடுப்பூசி தான் போட வேண்டும் என்று தெரிவித்துள்ளார்.
“ஒரே நேரத்தில் இரண்டு தடுப்பூசிகள் போடுவது தடுப்பூசி அட்டவணையை மீறுவதாகும்” என்று கூறும் டாக்டர் லோக்மான், பெற்றோர்கள் தடுப்பூசி அட்டவணையை முறைப்படி பின்பற்றுமாறு தெரிவித்துள்ளார்.
எனினும், ஒரு வேளை குறிப்பிட்ட நாளில் போட வேண்டிய தடுப்பூசியை போட இயலாவிட்டால், மருத்துவ மையங்களில் உள்ளவர்களுடன் பெற்றோர்கள் கலந்தாலோசித்து, அந்த தடுப்பூசியை வேறொரு நாளில் குழந்தைகளுக்குப் போட ஏற்பாடு செய்து கொள்ள வேண்டும் என்றும் டாக்டர் லோக்மான் தெரிவித்துள்ளார்.
இதனை அனைத்து மருத்துவ மையங்களுக்கும் அறிவுறுத்தியாகிவிட்டது என்றும் அவர் உறுதிப்படுத்தியுள்ளார்.