கோலாலம்பூர் – மலேசியாகினி அலுவலகத்தின் ஒரு பகுதி தகர்க்கப்படும் என சுங்கை பெசார் அம்னோ தலைவரும், சிவப்புச் சட்டை அணியின் தலைவருமான ஜமால் மொகமட் யூனோஸ் மிரட்டல் விடுத்துள்ளதால், தக்க பாதுகாப்பு வழங்கும் படி காவல்துறையிடம் புகார் அளித்துள்ளது மலேசியாகினி செய்தி நிறுவனம்.
இது குறித்து நேற்று வெள்ளிக்கிழமை பெட்டாலிங் ஜெயா காவல்துறைத் தலைமையகத்தில் மலேசியாகினியின் நிர்வாகி கே.மனோகர் அளித்துள்ள புகாரில், “எந்த ஒரு அசம்பாவிதமும் நிகழ்ந்துவிடாமல் எங்களது பணியாளர்களுக்கும், அண்டை அலுவலகங்களுக்கும் பாதுகாப்பு அளித்து கூட்டத்தைக் கட்டுப்படுத்தும் படி காவல்துறையை தயது செய்து கேட்டுக் கொள்கிறோம்” என்று குறிப்பிட்டுள்ளார்.
நேற்று முன்தினம் வியாழக்கிழமை சுமார் 100 சிவப்புச் சட்டை உறுப்பினர்களுடன் மலேசியாகினி அலுவலகத்தை முற்றுகையிட்ட ஜமால், இன்று நவம்பர் 5 சனிக்கிழமை மதியத்திற்குள், மலேசியாகினி தங்களது நிதி அறிக்கை மற்றும் மற்ற ஆவணங்களை வெளியிடவில்லை என்றால், மலேசியாகினி கட்டிடத்தின் ஒருபகுதி தகர்க்கப்படும் என்று மிரட்டல் விடுத்ததாக அச்செய்தி நிறுவனம் தெரிவித்துள்ளது.
இதனிடையே, தங்களது அலுவலகம் முன்பு காவல்துறையினர் பாதுகாப்பிற்காகக் குவிக்கப்பட்டிருப்பதை தற்போது மலேசியாகினி புகைப்படம் ஒன்றை வெளியிட்டு உறுதிப்படுத்தியுள்ளது.